தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக்கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும். தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வர். ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். அமர்ந்த மான் தோல், புள்ளி இல்லாத மான் தோலாக
இருக்க வேண்டும். மான் தானாக இறந்திருக்க வேண்டும். அதனுடைய தோல் தான் ஜெபத்துக்கு உகந்தது; வேட்டையில் கொல்லப்பட்ட மான் தோல், ஜெபத்துக்கு உதவாது. புள்ளி இல்லாத மான் தோலை, கிருஷ்ணா ஜனம் என்பர். இதுதான் உகந்தது. ஜெபம் செய்ய நதிக்கரை, தேவாலயம், புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. ஜெபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரைக் கொட்டை மாலை, பவழம் போன்ற மாலைகளும், பவுன், முத்து மாலைகளும் உபயோகிக்கலாம். முக்கியமாக, மனம் பகவானிடம் இருக்க வேண்டும். சும்மா ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டு, திண்ணையில் உட்கார்ந்தபடி தெருவில் போவோர், வருவோரை எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. ஜெபம் செய்வது என்றால், இத்தனை விஷயங்களை கவனிக்க வேண்டும். முடியுமா? முயன்று பாருங்கள்!
{கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்}