Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலையங்கம்: ஏன் இந்த இரட்டை வேடம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. 1989-ல் போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 470 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் வேண்டுகோள். அப்போது உச்ச நீதிமன்றம் உண்மை நிலைமையை முழுமையாக உணர்ந்து கொள்ளாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கிவிட்டது என்றும், இப்போது அதை மறுபரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் கோரிக்கை.1984-ம் ஆண்டு நடந்த உலகையே உலுக்கிய அந்தச் சம்பவத்தின் 26-வது நினைவுநாளில் இந்தக் கோரிக்கை மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. “”ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இழப்பீட்டுக்காக வழங்கிய தீர்ப்பில் சுமார் 3,000 பேர் மட்டும் மரணமடைந்ததாகவும், 50,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 20,000 பேர்தான் தாற்காலிக ஊனமடைந்ததாகவும் உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. உண்மையான புள்ளிவிவரப்படி, 5,295 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 5,27,894 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாற்காலிக ஊனமுற்றோரின் எண்ணிக்கை 35,455. மேலும், இழப்பீட்டுத் தொகையின் வட்டியைக் கணக்கிட்டாலே பல மடங்கு அதிகம் தரவேண்டிவரும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மறுபரிசீலனை மனுவில் எதிர்த்தரப்பாக, இப்போது “டௌ’ கெமிக்கல்ஸ் என்கிற குழுமத்தின் அங்கமாக விளங்கும் யூனியன் கார்பைட், அமெரிக்க யூனியன் கார்பைட், மெக்  லியாட் ரஸ்ஸல் இந்தியா, எவரெடி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களை அரசுத் தரப்பின் சார்பில் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதி குறிப்பிட்டிருக்கிறார்.இது ஒருபுறம் இருக்க, “டௌ’ குளோபல் டெக்னாலஜீஸýடனான ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸின் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஜாம் நகரில் ஜாம்ஜாமென்று செயல்வடிவம் பெற்று வருகிறது. மத்திய வர்த்தக, தொழில் அமைச்சகம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் உரிமையாளர்களான “டௌ’ குளோபலுடன் இணைந்து ஜாம்நகர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பாலி புரொபலின் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி இருக்கிறது.2006 அக்டோபர் மாதம் “டௌ’ பன்னாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த “டௌ’ குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் அன்னியத் தொழில்நுட்பக் கூட்டு முயற்சிக்கான அனுமதியை ரசாயனம், உர அமைச்சகம்தான் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது என்றாலும், மார்ச் 2007-ல், தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி ஆணையத்துக்கு, அந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் “டௌ’ கெமிக்கல்ஸ் மீது இழப்பீடு கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த அனுமதியை நாம் மறுபரிசீலனை செய்வது நல்லது என்று ரசாயன அமைச்சகம் கோரியது.ஆனால், வர்த்தக அமைச்சகமோ ரசாயன அமைச்சகத்தின் கோரிக்கையைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. காலம் கடந்த வேண்டுகோள் என்றுகூறி ரசாயன அமைச்சகத்தின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.2007-ம் ஆண்டில் அப்போது வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த கமல்நாத், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நல்லதொரு “சமிக்ஞை’ அளிக்கும் விதத்தில், நாம் போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில் “டௌ’ கெமிக்கல்ஸிடம் கோரும் நஷ்டஈடு பற்றி சற்று யோசித்துச் செயல்படுவது நல்லது என்று குறிப்பிட்டதுடன் நின்றுவிடவில்லை. ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடனான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை நாம் அனுமதிப்பதேகூட அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நல்லிணக்க வழிகாட்டியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.சமீபத்தில், இந்தப் பிரச்னை தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் இன்னும் சில தகவல்கள் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன. “”அன்னியத் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கான அனுமதி மூலம், “டௌ’ நிறுவனம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல என்பதை அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்துவது ஒரு நல்ல அறிகுறி” என்று வெளிவிவகாரத்துறை கருத்துத் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில் யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லை என்று நீதிமன்றங்களின் மூலம் இந்திய அரசு தெளிவுபடுத்தி, அந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவும், இயங்கவும் வழிகோல வேண்டும் என்று “டௌ’ குழுமம் விழைவதும் தெரியவந்துள்ளது.இன்னும் முழுமையாக “டௌ’ நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறப்படவில்லை. யூனியன் கார்பைட் நிறுவனம் இருந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பூமி முற்றிலுமாகச் சுத்தப்படுத்தப்படவில்லை. போபாலில் உள்ள நிலத்தடி நீரில் 26 ஆண்டுகளாகியும் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு அகன்ற பாடில்லை. ஒருபுறம், போபால் விஷவாயுக் கசிவுக்கு “டௌ’ குழுமத்தைச் சேர்ந்த யூனியன் கார்பைட் நிறுவனம் அளிக்க வேண்டிய இழப்பீடு போதாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்கிறது. இன்னொருபுறம், ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸýக்கு அதே நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதியும் வழங்குகிறது. ஏன் இந்த நிர்வாக முரண்?தொழில் நிறுவனங்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றால், அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலைதான் என்ன, வருங்காலச் சந்ததியரின் ஆரோக்கியத்துக்கு யார்தான் உத்தரவாதம் தருவது?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: