தனியார் கம்பெனிக்கு தொழில் துவங்க நிலம் ஒதுக்கியதில் உத்திர பிரதேச மாநில மாஜி., தலைமை செயலருக்கு சி.பி.ஐ., கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியுள்ளது. நிலம் வழங்குவதில் இவர் சட்ட விதிகளை தமக்கு சாதகமாக வளைத்திருக்கிறார். இந்திய வரலாற்றில் ஒரு தலைமை செயலருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது ஒரு கறுப்பு புள்ளியாக கருதப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்த முழு விவரம் வருமாறு: உ .பி., மாநிலத்தில் உள்ள பெண் தலைமை செயலராக இருந்தவர் நீராயாதவ். 1995- 96 ல் நொய்டாவின் தலைமை அதிகாரியாக இருந்தார். டில்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசு தரப்பில் இடம் ஒதுக்கி தரப்படும். இவரது பணிக்காலத்தில் பிளக்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனிக்கு சுமார் 300 ஏக்கர் நிலம் வழங்கி அனுமதி அளித்திருக்கிறார்.
இது தொடர்பான பிரச்னை ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டார் நீரா. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கோர்ட் இவர் சட்டத்தை வளைத்து விதிமுறை மீறியிருப்பது நிரூபிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட நீராயாதவ், பிளக்ஸ் நிறுவன சி.இ.ஓ., அசோக் சதுர்வேதி ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மேலும் 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)