Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலையங்கம்: ஏன் இந்தத் தயக்கம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

தொடர்ந்து 18 நாள்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால், குடியரசு காயப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஊடகங்களில் “ஸ்பெக்ட்ரம்’ முறைகேடுகளைப் பற்றித் தொடர்ந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இப்போது பிரச்னை பூதாகரமாக மாறி, பிரதமரையே கபளீகரம் செய்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்காமல் விட்டிருந்தால், முழுப் பூசணிக்காயும் நிச்சயமாகச் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும்.

பிரச்னை வெளியானவுடன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி, புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏன், ஒரு விசாரணைக் கமிஷனேகூட அமைத்திருக்கலாமே?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதலே, காங்கிரஸ் தலைமைக்குத் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற இறுமாப்பும், எதிர்க்கட்சிகள் கைகோத்துவிடாது என்கிற அசட்டுத் தைரியமும் நிறையவே ஏற்பட்டுவிட்டது. “ஸ்பெக்ட்ரம்’ பிரச்னையை ஒரு பொருட்டாகவே மத்திய அரசு கருதவில்லை என்பதுடன் பிரச்னைக்குரிய அமைச்சகத்தின் செயலராக இருந்தவரை, ஏற்கெனவே அவர் மீது மற்றொரு லஞ்ச ஊழல் புகார் விசாரணை முடிவடையாத நிலையில், தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்ததே, அதுதான் ஆணவத்தின் உச்சகட்டம்.

இப்போது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. செயல்படவிடாமல் தடுக்கின்றன என்று ஆளும்கட்சி கூறுவதில் அர்த்தமே இருப்பதாகத் தெரியவில்லை. அரசு என்னதான் விரும்புகிறது? “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பற்றி எதிர்க்கட்சிகள் எதுவுமே பேசாமல், பிரதமரைப் போல மெளனம் சாதிக்க வேண்டும் என்கிறதா? இல்லை, தினமும் நாடாளுமன்றத்துக்கு வந்து நாற்காலிகளில் தூங்கிவிட்டுப் போகவேண்டும் என்று நினைக்கிறதா?

கடந்த நவம்பர் 9 முதல் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இதுவரை ஒரு நாள்கூட செயல்படவில்லை என்பது உண்மை. இந்த நாடாளுமன்றப் புறக்கணிப்பால், அரசுக்கு ஏறத்தாழ  100 கோடி நஷ்டம் என்பதும் உண்மை. ஆனால், இதற்கு யார் பொறுப்பு, எதிர்க்கட்சிகளா, ஆளும் கட்சியா?

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இருப்பதால் அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதன் செயல்பாடுகள் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றால் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் தேவையில்லையே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, வெற்றி பெற்ற கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலோ, ஆளுநர் மாளிகைகளிலோ ஒன்றுகூடி, விருந்துண்டு, குசலம் விசாரித்துப் பிரியலாமே!

அவையில் பெரும்பான்மை இருப்பது ஆட்சியில் அமரவும், நிர்வாகத்தை நடத்தவும்தானே தவிர, அரசை நடத்துவது நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றம் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுதான். நாடாளுமன்றத்தை, பிரச்னைகள் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆளும்கட்சிக்குத் தானே தவிர, எதிர்க்கட்சிகளுடைய கடமை அதுவல்ல. அதனால்தான், அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துக்காக ஓர் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.

எதிர்க்கட்சிகள் பிரச்னையை அரசியலாக்கப் பார்க்கின்றன என்பது ஆளும்கட்சித் தரப்பின் குற்றச்சாட்டு. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயல்வதில் வியப்பென்ன இருக்கிறது? ஆளும்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முயற்சிப்பதும், ஆளும்கட்சி தவறுகளைத் திருத்தாமல் அடம் பிடித்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் தானே எதிர்க்கட்சிகளின் கடமை!

தலைமைத் தணிக்கை ஆணையரின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுதான் விசாரிக்குமே, பிறகு எதற்காக ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. பொதுக் கணக்குக் குழு என்பது “சி.ஏ.ஜி.’ அறிக்கையில் கூறப்படும் எல்லா துறைகளின் அறிக்கையையும் பொதுவாக, மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்யும் குழு. ராணுவம், ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், உளவு என்று எல்லா அமைச்சகங்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்குகளையும் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதுதான் தணிக்கை ஆணையத்தின் பணி. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது மேலோட்டமானதுதான் என்று அரசுத் தரப்பே கூறும்போது, அதன் அடிப்படையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்கு என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், குற்றச்சாட்டின், பிரச்னையின் எல்லா அம்சங்களையும் தீர விசாரிக்கும் அமைப்பு. இந்தஅமைப்பு பிரதமர் தொடங்கி, சோனியா காந்தி உள்ளிட்ட, ஏன் தனது கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்காக நாள்தோறும் ஆதரவு அறிக்கை வெளியிடும் தமிழக முதல்வர் உள்பட, நீரா ராடியா, ரத்தன் டாடா, அனில் அம்பானி என்று ஒருவர் விடாமல் விசாரிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு. இது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா என்ன?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்துமே என்கிற காங்கிரஸாரின் கேள்விக்கு இதுதான் பதில்-பிரதமர் என்ன கடவுளா? அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் அந்த நாட்டு நாடாளுமன்றங்களால் விசாரிக்கப்படும் போது, மன்மோகன் சிங்கை இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு விசாரித்தால் என்ன தவறு? அவருக்குத்தான் இதற்கு முன் இரண்டு “ஜே.பி.சி.’க்களால் விசாரணை செய்யப்பட்ட அனுபவம் உண்டே!

நாடாளுமன்றம் நடக்காமல் இருப்பதற்கு அரசுதான் காரணம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க அரசுத் தரப்பு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: