Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி

நான் எதையும் தேடிப் போறதில்லை:வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி – ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக்கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனதுகூட அப்படித்தான். நானா அடுத்தது இதுத‌ான்னு திட்டமிடுறது இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்னு இல்லாமல் காலம்  முடிவு செய்து அழைச்சிட்டு போகிற படிதான் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிருக்கு.

களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும் பயமுறுத்தினார்கள். அவர் எனக்கு நல்ல நண்பர். படம் நல்லா வந்திருக்கு. நிச்சம் எனக்கு அது வித்தியாசமான அனுபவம். பிரபுதேவாவுக்கு இருக்குற கமர்ஷியல் இமேஜ் எல்லாத்தையும் கழற்றி வெச்சிட்டு நடிச்சேன். அவர் சொன்னபடி யெல்லாம் கேட்‌டேன். அவர் சீரியஸா படம் எடுத்தாலும் ஜாலியான மனிதர். சூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலியா இருக்கும். களவாடிய பொழுதுகள் சீரியஸா இருந்தாலும், அழகி மாதிரி கமர்ஷியல் படமா ஜெயிக்கும். தங்கர் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதே நேரம் இன்னொரு ஆசையும் இருக்கு. அவரும் ஒரு நடிகர். அவரை என் டைரக்ஷனில் நடிக்க வைக்கணும். என்னை அவர் வேலை வாங்குன மாதிரி அவரையும் நான் வேலை வாங்கி பெண்டு எடுக்கணும்.

நான் இயக்கியிருக்கும் எங்கேயும் காதல் படத்தின் கதை காதல் கதைதான். ஜாலியான, கலகலப்பான, சிம்பிளான லவ் ஸ்டோரி. ‌பொதுவா ‌பொண்ணுங்க மேலதான் ஆண்களுக்கு லவ் வரும். இதில் நேர் தலைகீழா இருக்கும். ஆண் மீது ஒரு பெண்ணுக்கு வர்ற காதல்தான் கதை. பிரான்சில் இருக்கிற தமிழ்ப்பெண்ணுக்கு இங்கிருந்து போகிற பையன் மேல வர்ற காதல் கதை. முழுக்கதையும் பிரான்சில் நடக்குறதால பிரான்சை தேர்ந்தெடுத்து ஏறக்குறைய முழு படத்தையும் முடிச்சிட்டு வந்திருக்கும். மொத்தத்தில் படம் மாலை நேர தென்றல் காற்று மாதிரி எளிமையா இதமா இருக்கும்.

இந்த படத்தை தொடர்ந்து விஷாலை வைத்து ஒரு படம் பண்ணப் போகிறேன். ஹீரோயின் சமீரா ரெட்டி. ஆர்.டி.ராஜசேகர் கேமரா. இசை விஜய் ஆண்டனி. அந்த படத்துக்கு பிறகு இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படம் பண்ணப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரபுதேவா பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், நயன்தாரா விவகாரம், ரமலத் விவகாரம் பற்றி ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்து வந்திருந்த நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கேள்வி-பதில்களை பத்திரிகையாளர்களிடம் வழங்கிய பிரபுதேவா, அதில் உள்ள விஷயங்களைப் பற்றி மட்டும் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். வேறு கேள்விகளை கேட்க வேண்டாம் ; அப்படி கேட்டால், அதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தொடங்கிய அந்த சந்திப்பில் முக்கிய கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காததால் சப் என்று முடிந்தது. நாளேடு ஒன்றில் வெளியான செய்தி / ப‌டங்கள் தொகுப்பு விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: