இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார்.
அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்த வில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகாரிகள், கைகளால் தடவி சோதனையிட்டனர். இதன் பின்னரே அவரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் கண்டறிய முயற்சித்து வருவதாக கிளின்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.