2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி. பாட்டீலை ஒருநபர் குழுவாக மத்திய அரசு நியமித்துள்ளது.
2001-09 காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கப்பட்டதில் தொலைத்தொடர்புத் துறையால் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இந்த குழு ஆய்வுசெய்யும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒருநபர் குழுவின் அறிக்கை வந்த பின்னர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏலமுறை குறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்தகட்டத்துக்கு செல்லும்போது, எது சிறந்த நடைமுறை என்பது குறித்து அனைத்து பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம் என கபில் சிபல் பதிலளித்தார்.
தொலைத்தொடர்புத் துறையின் எந்தவொரு அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க இந்த குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி ஆதாரங்கள் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை இருக்கும். ஆனால் முன்னாள் அமைச்சரை விசாரணைக்கு அழைக்க முடியாது.
தொலைத்தொடர்புத் துறை மற்றும் அரசின் உத்தரவு, கொள்கைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றையும், அவைகள் ஒரேமாதிரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா இல்லையா என்பதையும் இந்தக் குழு ஆய்வு செய்யும் என கபில் சிபல் தெரிவித்தார்.