Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவிற்கு —

கண்ணீருடன் இந்த கடிதத்தை எழுது கிறேன். நான் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். எனக்கு திருமணமாகி, ஒன்பது வருடங்கள் ஆகின்றன. என் அம்மாவின் கட்டாயத்தால் மட்டுமே, என் திருமணம் நடந்தது. என் கணவர், நம்பர் ஒன் குடிகாரர். எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. கல்யாணம் ஆனது முதலே, அவர் மீது பெரிய ஈடுபாடு இல்லை. அவர் வெளியூரில் வேலை செய்வதால், விவாகரத்து வரை போகவில்லை.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவார். அவர், வீட்டில் இருக்கும் போதெல்லாம் எனக்கு, அடி, உதை தான். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். கல்யாணம் முடிந்த இரண்டாவது ஆண்டில், எனக்கு ஒரு ஆண் நண்பர் கிடைத்தார். முதலில் நட்பாக இருந்து, பின் காதலானது. கள்ளக் காதல் அல்ல; உண்மையான, ஆழமான காதல்.

ஏழு வருட காதல் வாழ்க்கையில், அவனுக்காக நிறைய தியாகங்கள் செய்தேன். நான் வேலைக்கு செல்லக் கூடாது. வெளியில் போகக் கூடாது. நண்பர்கள் இருக்கக் கூடாது. என் கணவருடன் போகக் கூடாது. இன்னும் பல…

இந்நிலையில், போன வருடம் அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால், என்னை விட்டுட்டு போய் விட்டான். எங்கள் காதல், தொலைபேசியில் தொடர்ந்தது. இப்போது, தன் அப்பாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், திரும்பவும் இந்தியா வந்திருக்கிறான். “திருமணம் செய்து கொள்ளும் படி வீட்டில் வற்புறுத்துகின்றனர்; நானும் ஒத்துக் கொண்டேன்…’ என்கிறான்.

“திருமணம் முடிந்தாலும், நீ என்னுடன் இருக்க  வேண்டும். நான், திரும்பவும் வெளிநாடு போய் விடுவேன். நீ என் நினைப்பில், இந்த ஊரிலேயே வாழ வேண்டும்…’ என்கிறான். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் காதல் உண்மையானது. அவனுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சொல்வதற்கு கேவலமாக உள்ளது. என் இரண்டாவது குழந்தை அவனுடையது.

தொடர்ந்து என் கணவருக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை. எனவே, அவனை விட்டு விலகலாம் என்று எண்ணுகிறேன். நானும், கடந்த ஒரு வருடமாக அவனை எப்படியாவது மறந்துவிட்டு, என் குழந்தைகள் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து விட நினைக்கிறேன்; ஆனால், முடியவில்லை. நானும் சராசரி பெண் தானே… எனக்கும் ஆசைகள் இருக்கிறது.

இந்நிலையில், நான் என்ன செய்வது? தினமும் அழுகிறேன். என் நிலைக்கு, என் தாய்தான் காரணம் என்பதால், அவருடன் பேசுவது இல்லை. நான் என்ன செய்வது? மனம் அவனை மறப்பதற்கு மறுக்கிறது. என் கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழவும் பிடிக்கவில்லை. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல், தத்தளிக்கிறேன். உங்களின் ஆறுதல் வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

நான் எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளேனோ, அதை விட இரண்டு மடங்கு அன்பு என் மீது வைத்திருந்தான். நான் சொந்தமாக அழகு நிலையம் வைத்திருந்தேன். அவனுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, கடையை மூடி விட்டேன். அதுபோல், நான் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி செய்தேன். அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை என்று பெரும் பிரச்னை செய்து, என்னை வீட்டிலேயே உட்கார வைத்தான்.

என் மொபைல் போன் பிசியாக இருந்தால், சண்டை போடுவான். ஐந்து மணிக்கு மேல் மார்க்கெட் போகக் கூடாது. நான் எங்கு போனாலும், அவனிடம் அனுமதி பெற்றபின் தான் போக வேண்டும்.

“இவ்வளவு கண்டிப்புடன் ஏன் நடக்கிறாய்?’ என்று கேட்டால், “நீ என் மனைவி…’ என்பான். வெளிநாட்டிலிருந்து, தினமும் மணிக்கணக்கில் போனில் பேசுவான். பேசி, பேசியே என்னை பைத்தியக்காரி ஆக்கி விட்டான். இப்போது, வேறொரு பெண்ணுடன் திருமணம் என்ற போது, உண்மையாகவே பைத்தியம் பிடித்து விட்டது.

என் நினைவுகள் அவனை சுற்றியே உள்ளது. இதனால் தான், குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. நான் என்ன செய்வது? மறப்பதா, இல்லை, சண்டை போட்டு அவனுடன் வாழ்வதா? எந்த பிரச்னையும் வேண்டாம் என்று, இந்த உலகத்தை விட்டே போவதா? அமைதி யில்லாமல் அலைகிறேன். கண்டிப்பாக உங்கள் பதில் வேண்டும். — இப்படிக்கு  அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. கடித முகப்பில், “காட் இஸ் லவ்: லவ் இஸ் கிரேட்’ என எழுதி, கடிதத்தை ஆரம்பித்திருக்கிறாய்; ஆனால், வாழ்க்கையில்,  “டெவில் இஸ் லவ்: தட் டெவில் இஸ் கிரேட்’ என வாழ்ந்திருக்கிறாய். எழுத்துக்கும், செயலுக்கும் எத்தனை பெரிய முரண்பாடு?

உன் கதை சுருக்கத்தை பார்ப்போம்…

திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அம்மாவின் கட்டாயத்தால், நம்பர் ஒன் குடிகாரனை மணந்திருக்கிறாய். உனக்கு இரு ஆண் குழந்தைகள். எட்டு ஆண்டுகளாக, வேறு ஒருவனுடன் தவறான உறவு வைத்திருக்கிறாய். மூத்த குழந்தை, கணவனுக்கு பிறந்தது; இரண்டாவது குழந்தை காதலனுக்கு பிறந்தது.

உனக்கு இப்போது வயது 30 இருக்கக் கூடும். கல்யாணமான நீ, ஒரு வனுடன் தவறான உறவு வைத்துக் கொண்டு, “இது மனிதர் உணர்ந்து கொள்ள கள்ளக்காதல் அல்ல, அதையும் தாண்டி உண்மையானது, ஆழமா னது!’ என, உனக்கு நீயே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்கிறாய்.
நீ பழகிய இளைஞன், உன்னுடன் பழகும்போது, பல நிபந்தனைகளை விதித் திருக்கிறான். எம்.ஏ., பி.எட்., படித்த உன்னை, “வேலைக்கு போகக் கூடாது…’ என்றிருக் கிறான். நீ வேலைக்கு போனால், உனக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்து விடுமே… கிடைத்து விட்டால், அவனை திரும்பி பார்க்க மாட்டாயே என்ற பயம் அவனுக்கு.

வெளியில் போகக் கூடாது என்றிருக்கிறான். வெளி உலகம் புரிந்து விட்டால், தன்னை தூக்கி எறிந்து விடுவாளே என்ற பயம் அவனுக்கு. நண்பர்களே  இருக்கக்கூடாது என்றிருக்கிறான், நிறைய நண்பர்கள் இருந்தால், போட்டிக்கு நிறைய காதலர்கள் வந்து விடுவரோ என்ற பயம் அவனுக்கு.

கணவருடன் வெளியே போகக் கூடாது. அடிக்கடி கணவனுடன் அவுட்டிங் போனால், கணவனுக்கும், உனக்கும் புரிதல் வந்து விடுமே என்ற பயம் அவனுக்கு. மொத்தத்தில் அவன், கோழைத்தனத்துக்கும், சுயநலத்துக்குமான, “பிராண்ட் அம்பாசிடர்!’

உன் கணவர் வெளியூரில் பணிபுரிகிறார். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கு வருவார். அதனால், நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை என்றிருக்கிறாய். உன் தவறுகளை கண்டுபிடிக்க தக்க வாய்ப்பு இல்லாத கணவன் ஒரு பக்கம், கணவனாய் இருந்துவிட்டு போகட்டுமே… நாம் நம் களியாட்டத்தை தொடர்வோமே, என்றிருக் கிறாய்.

வெளிநாட்டுக்கு பணிபுரிய சென்று, தந்தையின் உடல் நலக்குறைவால் தாயகம் திரும்பிய உன் காதலன், முறைப்படி வேறு யாரையோ திருமணம் செய்து கொள்ளப் போகிறான். “நீ, தொடர்ந்து கள்ள காதலியா இரு…’ என்கிறான். நீயும், அவனுடன் ரகசிய தாம்பத்யம் தொடர வேண்டும் என விரும்புகிறாய்.

எட்டு வருடங்கள் தொடர்ந்து கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு, இனி, கணவனுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை என, அரசியல்வாதி போல ஸ்டேட்மென்ட் விடுகிறாய்.

உன் தாய்தான் தவறான மாப்பிள்ளையை பார்த்து கட்டி விட்டார் என குற்றம்சாட்டி, தாயுடன் பேசாமல் இருக்கிறாய். அது மகா குற்றம். எந்த தாய், மகளின் வாழ்க்கை நாசமாக வேண்டும் என நினைத்து, மாப்பிள்ளை பார்த்து, மண முடித்து வைப்பாள்? இப்போதெல்லாம், நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, கெட்டுப் போன ஆப்பிள்கள் நிறைந்த கோடவுனில், நல்ல ஆப்பிள் தேடித் தேடி எடுப்பதை போல அபூர்வமானது.

கிடைத்ததை வைத்து ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து விட்டு போகின்றனர், 90 சதவீத பெண்கள். மீதி 10 சதவீத பெண்கள், நல்ல  ஆப்பிளை தேடி, இருக்கும் ஆப்பிளை தொலைத்து விடுகின்றனர்.
இனி என்ன செய்யலாம் என்கிறாயா… சொல்கிறேன் கேள்…

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருந்தால், அரசு பள்ளிகளில் ஆசிரியை பணி கிடைக்கும்; பதியா விட்டால், தனியார் பள்ளிகளில் ஆசிரியை பணி கிடைக்கும்.

வேலைக்கு போ… வேலை கிடைக்கவில்லை என்றால், மூடிய அழகு நிலையத்தை திற; காதலனை மற. அவன் ஒரு சைக்கோ… அவன் யாரை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளட்டும். விலகி நில். அவனை மணந்து கொள்ளும் எந்த பெண்ணும் நிம்மதியாக இருக்க மாட்டாள். உன்னை பேசிப் பேசியே பைத்தியக்காரி ஆக்கியது போல, கட்டினவளையும் பைத்தியக்காரி ஆக்கி விடுவான். ஆசிரியர் பணி செய்தாலும், அழகு நிலையம் நடத்தினாலும், அவற்றை கணவன் பணிபுரியும் ஊரிலேயே செய். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடும்பம் நடத்தல் மாறி, தினந்தோறும் நடக்கட்டும். “கள்ளக்காதலன் மயக்கத்தில் நான் குழந்தைகளை கவனிக்கவில்லையோ…’ என கேட்டிருக்கிறாய். பூட்ஸ் காலால் ரத்தம் வர மிதித்துவிட்டு, “சாரி… மிதிச்சிட்டேனா?’ என்பது போலிருக்கிறது உன் பேச்சு. பெற்ற தாய்க்கு சமாதானக் கொடி காட்டு. நீ சைக்கோவிடமிருந்து மீண்டு வந்தது போல, கொடிய பழக்க வழக்கங்களிலிருந்து உன் கணவனை மீட்டெடு. உன் கைபேசி எண்ணை ரகசியமாய் வைத்துக் கொள்.

வாழ்க்கையில் அனைவரும் தவறு செய்கின்றனர்தான். ஆனால், பெரும்பாலோர் திருந்தி புது வாழ்க்கை வாழ்கின்றனர். முன்னொரு காலத்தில், ஒரு முனிவர், சேற்றில் உருண்டு, புரண்டு கொண்டிருக்கும் பன்றியை பார்த்தார். பன்றி, உண்மையில் ஒரு மகாராஜா. இப்போது முனிவர் தொட்டால், சாப விமோசனம் பெற்று, பன்றி, மகாராஜா ஆகிவிடும். இது பற்றி முனிவர் பன்றியிடம் விளக்க, “உன் வேலையை பாத்துக்கிட்டு போயா… சூப்பர் பன்னியா ஜாலியாக இருக்கிற என்னை, கேவலம் மகாராஜாவாக்க பாக்குறீயா… போய்யா போ…’ என்றதாம் பன்றி. நீ அந்த பன்றி போல், சேற்றில் தொடர்ந்து உழலப் போகிறாயா? சாப விமோசனம் பெற்று, மகாராணி ஆகப் போகிறாயா? யோசி.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: