Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செயல்படாமல் முடிகிறது குளிர் கால கூட்டத் தொடர்?: அடுத்தது என்ன? கட்சிகள் ஆலோசனை

2-ஜி அலைக்கற்றை விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் செயல்படாமலேயே முடியும்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கியது. இக் கூட்டத் தொடர் திங்கள்கிழமையுடன் (டிசம்பர் 13) நிறைவு பெறுகிறது.

கூட்டத் தொடரின்போதே 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளியானது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குளறுபடிகள் காரணமாக அரசுக்கு |1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றமும் அரசுக்கும், பிரதமருக்கும், ராசாவுக்கும் தரும சங்கடம் அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியது.

நெருக்குதல் அதிகரித்ததையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜிநாமா செய்தார். பொது கணக்கு குழு விசாரணைக்கு தயார் என அரசு அறிவித்தது. ஆனால், அதை ஏற்காத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதுடன், பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இரு தரப்பும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதால் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் மொத்தம் 22 அலுவல் நாள்களில் ஒரு நாளுமே செயல்படாமல் முடியும் நிலை தோன்றியுள்ளது.

நாடாளுமன்றம் கூடாத நாள்களில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப் போவதாகவும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இது குறித்து பிரச்னை எழுப்புவோம் எனவும்  பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை: இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் முடங்கிப் போனதற்கு ஆளும் கட்சியின் பிடிவாத போக்கே காரணம் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.

“கூட்டத் தொடர் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம். விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை விட பிரதமரை விசாரணைக்கு அழைத்து ஆளும் கட்சியை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாடாளுமன்ற அலுவல்களை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன’ என்று ஆளும் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அலைக் கற்றை விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடங்கிப் போனதற்கு ஆளும் கட்சியே காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எம்.பி.க்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் விவகாரம், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு என காங்கிரஸ் கட்சி மீது எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்து சோனியா காந்தி ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஏற்காவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் அவையை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் அதை முறியடிக்க ஆளும் தரப்பில் இருந்து எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

டிசம்பர் 18-ல் காங்கிரஸ் மகாசபை கூட்டம்: காங்கிரஸ் கட்சியின் மகாசபை கூட்டம் வரும் 18-ம் தேதி தில்லியில் தொடங்குகிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத் திட்டத்தை முறியடித்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்கான உத்திகள் இக் கூட்டத்தில் வகுக்கப்படும் என்று தெரிகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மகாசபை கூட்டம் இது.

பட்ஜெட் கூட்டத் தொடரிலும் அலுவல் எதையும் நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கும் நிலை ஏற்பட்டால் இடைக்கால பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிடும். எனவே அதற்குள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண காங்கிரஸ் கட்சித் தலைமை முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் போராட்ட திட்டம்: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பதால் நாடாளுமன்றத்துக்கும் வெளியேயும் தங்களது கோரிக்கை குறித்து பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வரும் 22-ம் தேதி அரசுக்கு எதிராக தில்லியில் மாபெரும் பொதுக் கூட்ட பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இடதுசாரிகள் ஆலோசனை: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் வரை 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 14 முதல் 16-ம் தேதி வரை ஹைதராபாதில் நடைபெறுகிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி
ப‌டங்கள் தொகுப்பு விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: