Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழகத்தில் 15 கூட்டுறவு மில்கள் மூடல்; வாழ்வு இழந்த 50 ஆயிரம் தொழிலாளர்கள்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு மில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்காததால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்பாலைகள் லாபகரமாக இயங்கிவருவதால் புதிது, புதிதாக தனியார் மில்கள் துவக்கப்பட்டு வருகின்றன.இதற்கு நேர் மாறாக அரசின் கூட்டுறவு நூற்பாலைகள் நஷ்டத்தை அடைந்து தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

காமராஜர், பக்தவச்சலம் போன்ற காங்கிரஸ் முதல்வர்கள் துவக்கி வைத்த பாரம்பரியம் மிக்க நூற்பாலைகளும் திராவிட ஆட்சிகளின் கவனிப்பின்மையால் இழுத்து மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 18 கூட்டுறவு மில்களில் தேனி, எட்டையபுரம் பாரதி, புதுக்கோட்டை, ஊத்தங்ககரை, கன்னியாகுமரி ஆகிய 5 மில்களை தவிர 13 மில்களும் மூடப்பட்டுள்ளன. திருநெல்வேலி பேட்டையில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை 1958ல் செயல்படதுவங்கியது. இந்த மில்லில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சிகளில் 75 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு 2004ல் மில் மூடப்பட்டது.

திருநெல்வேலி பேட்டை மில்லில் கடந்த சில மாதங்களில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடபொருட்கள், இயந்திரங்கள் “அதிகாரிகளின் துணையோடு கொள்ளை’ போயிருப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போலீசில் வழக்குபதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் பயனற்ற ஆய்வு : 2006 சட்டசபை தேர்தலில் “பேட்டை மில்லை திறப்போம்’ என்ற வாக்குறுதியுடன் நெல்லையில் தி.மு.க., வெற்றிபெற்றது. ஆனால் 5 ஆண்டுகளாக இன்றளவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் அண்மையில் கைத்தறி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்பேட்டை மில்லை திடீர் ஆய்வுசெய்தார். அவர் கூறுகையில்,பேட்டை மில்லில் பி யூனிட்டை இயக்க திட்டமிட்டுள்ளோம்.தற்போது கூட்டுறவு மில்கள் லாபத்தில் இயங்குகின்றன.

குமரி மில் கடந்த ஆண்டு 37 லட்சம் லாபத்திலும் இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் லாபத்திலும் இயங்கியுள்ளது. தற்போது இலவச வேட்டி, சேலை தயாரிப்பிற்கு பயன்படும் 40ம் நம்பர் நூல்களை மட்டுமாவது தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தனியாரிடம் பஞ்சு வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டது. இனி சிசிஐ எனப்படும் மத்திய பஞ்சு நிறுவனத்திடம் பஞ்சு வாங்குவோம். அரசுக்கு நூல் விற்போம். மில்லை இயக்குவதால் சுமார் 500 பேருக்கு வேலை கிடைக்கும்.

தமிழகத்தில் 13 மில்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் சேலம், ராமநாதபுரம், கரூர், பேட்டை ஆகிய மில்களை இயக்க ஆரம்பகட்ட நடவடிக்கையில் இறங்குவோம். சட்டசபை தேர்தலுக்கு பின்னர் மில்கள் இயங்கும் என்றார்.

வேலையிழந்த தொழிலாளர்கள்  கவலை : நெல்லை மில்லில் வேலையிழந்த தொழிலாளர்கள் கூறுகையில், சாத்தூர் ராமச்சந்திரன், சுகாதாரதுறை அமைச்சராக இருந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறி துறை அமைச்சராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

ஆனால் இதுவரையிலும் மில்களை திறப்பது குறித்தோ, தொழிலாளர்கள் வேலையிழப்பு குறித்தோ சட்டசபையில் பேசியதே யில்லை. மூடிய மில்களை திறப்பது குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து, கொள்கை முடிவு எடுத்தால்தான் மில்களை திறக்க அரசு நிதி ஒதுக்கும். மீண்டும் ஓட்டு வாங்குவதற்காக அமைச்சர் இத்தகைய வாக்குறுதிகளை தந்துவிட்டு செல்கிறார் என்றார்.

இனி எந்த காலத்திலும் வாய்ப்பில்லை: தொகுதி எம்.எல்.ஏ.,வும் தி.மு.க.,மாவட்ட செயலாளரும் தினமும் தொல்லை கொடுப்பதால்தான் சும்மா வந்து பார்த்துவிட்டு செல்வதாக போகிற போக்கில் அமைச்சர் தெரிவித்தார். மத்தியில் ஜவுளித்துறை அமைச்சகம், மாநிலத்தில் கைத்தறித்துறை என அனைத்து பொறுப்புகளிலும் தி.மு.க., இருக்கும் இந்த காலகட்டத்தில் கூட கூட்டுறவு மில்களை நவீனப்படுத்தி திறக்க முயற்சி எடுக்காவிட்டால் இனி எந்த காலத்திலும் வாய்ப்பில்லை என்பதே தொழிலாளர்களின் எண்ணமாகும். மத்திய, மாநில அரசுகள் முயலுமா..!

நாளேடு ஒன்றின் இணையளத்தில் வெளிவந்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: