ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் மனு கொடுக்க சட்ட சபைக்கு வந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க முதல்வர் மறுத்து விட்டார்.
இதைக் கண்டித்து விவசாய சங்கத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விவசாய சங்க தலைவர்களை கைது செய்து, சட்டசபை வளாகத்தில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதைக் கேள்விப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும், இடதுசாரி கட்சி தலைவர்களும் சட்ட சபைக்கு அருகில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விவசாயிகளை விடுதலை செய்யும் வரை தான் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தலைவர்களின் கைது நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.