இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார்.
மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவாயுதம் ஏந்தி தொடர்ந்து போராடுவோம். 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இன விடுதலை போராட்டத்தை தமிழ் மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாணவர்கள், வக்கீல்கள் எழுச்சியுடன் போராட்ட களத்தில் நின்றனர். ஆனால் இதுமாதிரி போராட்டங்கள் முடக்கி போடப்பட்டன. காங்கிரஸ் எதிர்ப்பு என்பது எங்களது கொள்கை முடிவு. கடந்த தேர்தலில் ஏற்பட்ட எதிர்ப்பு அலையால்தான் காங்கிரஸ் 7 இடங்களில் தோற்றது.
வருகிற சட்டன்ற தேர்தலிலும் இலங்கை பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும். இலங்கை தமிழர் பிரச்சினையை தமிழ் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய கடமையில் இருந்து நாங்கள் ஒருபோதும் தவறமாட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.
நன்றி மாலை மலர்