Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கந்துவட்டிக்காரரை வழக்கில் காப்பாற்றிய மத்திய மந்திரி: ரூ.10 லட்சம் அபராதம்

கந்துவட்டிக்காரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை தடுத்த, தற்போதைய மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிர அரசுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் திலீப்குமார். முன்பு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருடைய தந்தை கோகுல்சந்த். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் சர்நாக்தர்சிங் சவான் மற்றும் விஜய்சிங் சவான் ஆகியோர் தங்கள் நிலத்தை கோகுல் சந்திடம் அடமானம் வைத்து கடன் பெற்றனர்.கடுமையான வட்டி வசூலிப்பு காரணமாக, சவான் சகோதரர்களால் வட்டியை கட்ட முடியவில்லை. இதையடுத்து சவான் சகோதரர்களின் விளைநிலத்தை கோகுல்சந்த் அபகரித்து கொண்டார். இதை எதிர்த்த சவான் சகோதரர்கள், 2006ல் காம்கான் போலீஸ் நிலையத்தில் கோகுல்சந்த் மீது புகார் கொடுத்தனர்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் கோகுல்சந்தை அழைத்து விசாரணை நடத்தினர். தந்தையை போலீசார் விசாரிப்பது குறித்து திலீப்குமார், முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் தெரிவித்தார்.இதையடுத்து “கோகுல்சந்த் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம்’ என, அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். தனது உதவியாளர் அஜின்கியா பத்வால் மூலம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை அழைத்து இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சவான் சகோதரர்களின் புகாரை போலீசார் வழக்காக பதிவு செய்யவில்லை. மேலும் புகார் தொடர்பான ஆவணங்களில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என, போலீசார் காரணத்தை குறிப்பிட்டிருந்தனர்.

வட்டிக்கு வாங்குபவர்கள் மீது மேலதிகாரிகளின் ஆலோசனையின்றி, வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என, விலாஸ்ராவ் தேஷ்முக் மாவட்ட கலெக்டர்களுக்கு வாய்வழியாக உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், கோகுல்சந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யாததால், சவான் சகோதரர்கள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் பெஞ்ச், கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி,  முதல்வரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மகாராஷ்டிர அரசுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதிகள் சிங்வி, கங்குலி அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:நீதித்துறையில் தலையிட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை தடுத்த முன்னாள் முதல்வரின் செயலுக்காக, மகாராஷ்டிர அரசுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் சமீபத்தில் பதவி விலகினார். மத்திய அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் தற்போதைய கனரக தொழில்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இந்த செயலால், மத்திய அரசுக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: