இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.
”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.
சுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப்படாமல், இலக்கிய எழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரி சங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக் காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். அதிலும் ஒரு தலைமுறையே, ”தங்களை சுஜாதா பாதித்திருக்கிறார்” என்று ஒட்டு மொத்தமாக சொன்னதின் பின்னால்தான் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சுஜாதாவுக்கு வாழும் காலத்திலேயே இந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது. சாண்டில்யன் எல்லாம் ரொம்ப பாவம். இப்போதும் கூட அவரை சரோஜா தேவி ரக எழுத்தாளராகவே பல இலக்கிய விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். எதை பேசவந்தேன்? ஆங்.. சிறுகதை எழுதுவது எப்படி?
சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுத வேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கதைசொல்லி கிடையாது என்பது எனக்கே தெரியும். அப்படிப்பட்ட நான் கூட தைரியமாக கதை என்று எதையோ எழுதி, இணையங்களில் சில பரிசுகளை கூட வாங்கிவிட்டேன். ஒரு சில கதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பெருங்கொடுமை. இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னைவிட மிகத்திறமையான கதை சொல்லியாக இருக்கலாம். உங்களிடம் நிறைய தீம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு கதையை எந்த வடிவில் எழுத்தில் வழங்கலாம் என்பதில் மிகப்பெரிய குழப்பம் உங்களுக்கு மட்டு மல்ல, பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கிறது.
ஒரு நல்ல காஃபியில் டிக்காஷனும், பாலும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டியது அவசியம். அது போலவே ஒரு நல்ல சிறுகதையில் கதையின் உள்ளடக்கமும், அந்த உள்ளடக்கத்தை நல்ல முறையில் வாசகனுக்கு கையளிப்பதற்கான பொருத்தமான வடிவமும் மிக முக்கியமானது.
( யுவகிருஷ்ணா அவர்கள் ஓர் இணையத்தில் எழுதியது )
படங்கள் தொகுப்பு விதை2விருட்சம்