Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை நடக்கிறது. பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்த பக்தர்கள், ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர்.

பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில், டிச., 6 ல் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. நேற்று நடந்த பகல் பத்து நிறைவு நாளில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை 4.15 மணிக்கு நடக்கிறது. முன்னதாக அதிகாலை 3.15 க்கு, நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசிக்கிறார். வைகுண்ட ஏகாதசியையொட்டி, பிரசித்தி பெற்ற மூலவர் முத்தங்கி சேவை, இன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. திருச்சி மற்றும் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 3,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்கோஷ்டியூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில், இன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி யுடன் விழா துவங்குகிறது. காலை 8.30 க்கு பெருமாளுக்கு ராஜாங்க சேவை, ஏகாந்த அபிஷேகம் நடக்கும். இரவு 8 மணிக்கு, பெருமாள் தேவியருடன் மூலஸ்தானத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்படுவார். தாயார் சன்னதியை சுற்றி வந்து நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுப்பார். இரவு 10 மணிக்கு மேல் சொர்க்க வாசல் திறக்கப்படும். பிறகு, 10 நாள் விழாவுக்காக காப்புக் கட்டி, பூஜைகள் நடக்கும். தினமும் இரவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

(இணையம் ஒன்றில் வெளியானது)
புகைப்படங்கள் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: