மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு —
வணக்கம். என் வயது 28; பெண். சிறுவயதில் போலியோ நோயால் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே, அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அவருக்கு, தற்போது 50 வயது. அவர், என் மீது காட்டிய கருணை, பின் காதலாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணத்தில், அவருக்கு துளியும் விருப்பம் இல்லை. என் கட்டாயத்தால், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். அவர் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். அவர் மகள் திருமண வயதில் இருக்கிறாள்; மகன் தொழிற்கல்வி படிக்கிறான். திருமணத்திற்கு பின், நாங்கள் இருவரும் சேர்ந்து, ஒரு கடையை துவங்கினோம். கடை நல்ல நிலையில் நடக்கிறது. கடையின் அத்தனை பொறுப்புகளையும் நான் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் குடும்பத்தைச் சார்ந்த யாரும் வருவது கிடையாது; ஆனால், அதன் பலனை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவரது மனைவி, குழந்தைகளுக்கு எங்கள் உறவு நன்கு தெரியும். ஆனால், அவர்கள் தெரியாதது போல் நடந்து கொள்கின்றனர். என் கணவர் என்னை விட, அவர்கள் மீதுதான் மிகுந்த பாசம் கொண்டுள்ளார். தற்போது, என்னுடன் சேர்ந்து வாழ இன்னும் காலம் தாமதிக்கிறார். ஏன் என்று கேட்டால், “என் பிள்ளைகளுக்கு நல்ல வரன்களை அமைத்து, என் கடமைகளை முடித்த பின்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். அதுவரை உன்னுடைய வீட்டிலேயே இரு…’ என்று கூறுகிறார். அவருடைய மகளுக்கு 23 வயதாகிறது. திருமணம் செய்ய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனுக்கு தற்போது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய நிலை என்னவென்று தெரியவில்லை. என் பெற்றோரும் என் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
என் கணவர் மீது நான் கொண்டுள்ள பாசத்தை அளவிட்டு கூற முடியாது. என்னுடைய அன்பை அவருக்கு எப்படி <உணர்த்துவது என்றே தெரியவில்லை. எதிலும் அவர் தன் குடும்பத்திற்கே முன்னுரிமை தர நினைக்கிறார். அவருக்கு வயதாகி விட்டது. இருக்கிற கொஞ்ச நாட்களில் நாங்களும் அன்பாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவருடைய குடும்பத்தினர், தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அவரை பயன்படுத்துகின்றனர். எதிர்காலத்தில், ஒரு குழந்தை இருந்தால், எனக்கு உதவியாக இருக்கும். ஆனால், அவருடைய குழந்தைகளே திருமண வயதில் இருக்கும்போது, நான் குழந்தை பெற்றுக் கொள்வது அவருக்கு அவமானமாக தெரிகிறது. எனக்கு, குழந்தை வேண்டும் என்று அவரிடம் கேட்க, பயமாக இருக்கிறது. ஏதாவது தவறாக நினைத்து விடுவாரோ என்று கவலையாக இருக்கிறது. அவருடைய குழந்தைகளை பற்றி, அவரது நல்லெண்ணம் எனக்கு புரிகிறது.
ஆனால், என் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ எனத் தோன்றுகிறது. எனக்கு என் கணவரோடு சேர்ந்து, எல்லாரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என் பாசத்தையும், எண்ணத்தையும் அவருக்கு புரிய வைக்கவும், என் வாழ்வில் ஒளியோற்றவும், தங்களின் மகளாக நினைத்து, அறிவுரை கூற வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு, உங்கள் அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. 28 வயதான நீ, போலியோவால் பாதிக்கப்பட்டவள். டிப்ளமோ படித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாய். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள 50 வயது கிழவரை தேடிப் பிடித்து காதலித்திருக்கிறாய். மூன்று ஆண்டுகளுக்கு முன், கிழவரை ரகசிய திருமணம் செய்து கொண்டாய். “கள்ள உறவு வலுக்காட்டாய இரண்டாம் திருமணமாகி விட்டதே…’ என்ற, ஆற்றாமை அந்த கிழவருக்கு. இருவரும் சேர்ந்து ஒரு கடை ஆரம்பித்திருக்கிறீர்கள். அவரோ, முதல் மனைவியையும், அவர் மூலம் பிறந்த இரு குழந்தைகளையுமே கவனிக்கிறார். கிழவர் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால், உன் எதிர்காலம் அர்த்தமுள்ளதாகும் என நம்புகிறாய்; ஆனால், அது நடக்கவில்லை.
எனக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவை, நல்ல வாழ்க்கை அமைந்திருந்தும், தவறான வாழ்க்கையை ஆவலாதிக்கும் பெண்களிடமிருந்து வருபவை. “எட்டு வருடங்களாக கள்ளக் காதல் புரிந்தவன், இப்போது விலகிப் போகிறான். அவனை வெட்டலாமா, குத்தலாமா, சுடலாமா, கரன்ட் ஷாக் கொடுத்து கொல்லலாமா…’ என, யோசனை கேட்பர். உன்னுடைய கேஸ் விதி விலக்கானது. நீ போலியோவால், இரு கால்களும் செயலிழந்த ஆதரவற்ற பெண். பற்றிக் கொள்ள அவரைச் செடி கொழுகொம்பு தேடுவது போல், நீ தேடியிருக்கிறாய். திருமணமாகி, இரு குழந்தைகள் பெற்ற, 50 வயது கிழவர் கிடைத்திருக்கிறார். அந்த கிழவர், “கோழி குருடாய் இருந்தாலும், குழம்பு ருசியாக இருக்கும்…’ என்ற சித்தாந்தம் கொண்டவர்.
தன்னை விட, 22 வயது இளைய பெண்ணை ருசிக்கப் போகிறோம் என்ற கிளர்ச்சியில் உன்னுடன் பழகியிருக்கிறார். நீ அவரை விடாமல் நச்சரித்து, இரண்டாம் திருமணத்துக்கு நகர்த்தி கொண்டு போய் விட்டாய். “வீடியோ கேம்ஸ் வாங்கிக் கொடு… வாங்கிக் கொடு…’ என, நச்சரித்த ஒண்ணுவிட்ட தம்பி மகனுக்கு, வேண்டா வெறுப்பாய் வாங்கிக் கொடுத்த, ஒண்ணுவிட்ட பெரியப்பா போன்றவர் உன் வயோதிகக் கணவர். அவர் குடும்பத்தினர் சுயநலமாய் நடந்து கொள்வதாய் எழுதியிருக்கிறாய். நல்லாயிருக்கிறதே கதை… முறைசார் திருமணத்தை சேர்ந்த பெண்ணும், அவரது இரு குழந்தைகளும் உரிமையைத்தான் அனுபவித்து வருகின்றனர். உன் திருமணம் தான் முறையற்றது. உரிமை இல்லாத விஷயத்தை நீதான் எடுத்து புசிக்கிறாய். கிழவர், வயதுக்கு வந்த இரு குழந்தைகளின் படிப்பு, வேலை, திருமணம் பற்றி கவலைப்படுவாரா அல்லது உன்னைப் பற்றி கவலைப்படுவாரா?
கிழவர் ஓரளவு நியாயம் உள்ளவர் என்பதால்தான், உன்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தன் இரு குழந்தைகளுக்கும், தகுந்த வாழ்க்கை அமைத்து கொடுத்த பின், மனைவியின் சம்மதம் பெற்று உன்னுடனான திருமணத்தை முறைசார் திருமணமாக்குவார். முதல் மனைவி வீட்டில் பாதி நேரம், இரண்டாம் மனைவி வீட்டில் பாதி நேரம் இருக்கத்தான் போகிறார். இப்போது நீ, அவரின் முதல் மனைவி குடும்பத்தை நிந்திப்பதோ, என்னுடன் மட்டும் சேர்ந்து வாழ், எனக்கு ஒரு குழந்தையை பரிசளி என நச்சரிக்க கூடாது. நச்சரித்தால் உன் மீதான வெறுப்பு விஸ்வரூபமெடுக்கும்; நிரந்தரமாக விலகி விடுவார். எதிர்காலத்தில் கிழவர் உனக்கு பாதி வாழ்க்கை பரிசளித்தாலும், அப்போது கூட நீ குழந்தை பெற்றுக் கொள்வது சரியாக இருக்காது. அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில், மகன் – மகள் எதிர்காலத்தை செப்பனிட்டு கொடுத்து விடுவார் என வைத்துக் கொள். அவரது 54 வயதில் குழந்தை பெற்று விட்டால், குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? குழந்தை, “அப்பா’ என்பதற்கு பதில், “தாத்தா’ என விளிக்கும். கிழவர் தன் ஆயுளை 65 வயதுக்குள் முடித்துக் கொண்டால், குழந்தைக்கு பதினொரு வயதுதான் ஆகும். ஆகவே, அவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தை கை விடு. தொடர்ந்து அவருடன் அனுசரணையாக இரு. அவரது முதல் மனைவி குடும்பத்தாருக்கு எதாவது ஒரு விதத்தில் உதவி செய்; நெகடிவ் விமர்சனம் பண்ணாமல் இரு. அதே நேரத்தில், உன் கடையை சிறப்பாக நடத்தி, பொருளாதார நிலையை உயர்த்திக் கொள். உன் ஆயுளுக்கும், வாழ்க்கை நடத்த போதுமான விதத்தில், உன் நிதிநிலையை மேம்படுத்து. தம்பி திருமணத்தை சிறப்பாக நடத்திக் கொடு. உன் பெற்றோருக்கு நீ எப்போதுமே ஒரு பாரமாய் தெரிந்திருக்கிறாய். நீ, ஒரு கிழவரை இரண்டாம் திருமணம் செய்ததும் பாரம் விலகியது என ஆசுவாசப்பட்டிருப்பர். அவர்களுடன் உறவு முறையை இனியாவது சீர்படுத்து. தன் இரு குழந்தைகளுக்கு எதிர்காலம் அமைத்துக் கொடுத்ததும், கிழவர் உன்னைவிட்டு முற்றிலும் விலகி, முதல் மனைவியிடம் முழு சரணாகதி அடைந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. மாடுகள் எங்கெங்கோ போய் மேய்ந்தாலும், மாலையில் கொட்டடிக்குதானே வீடு திரும்பும். கிழவர் பாராமுகம் காட்டும் எதிர்கால சூழ்நிலைக்கும் தயாராக இரு. இடையில் வந்தது இடையில் போகும். எந்த சூழலிலும் வாழ, உன்னை நீயே தயார் படுத்திக் கொள். ஒரு வேளை கிழவர் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இறந்து விட்டால், நீ இரண்டாம் திருமணத்திலிருந்து சுதந்திரமாவாய். மறுமணம் பற்றி அப்போது யோசிக்கலாம். இனியாவது, உன் வாழ்க்கையில் நடத்தை சிதறல் இல்லாதிருக்கட்டும் மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி) மேலும் இதன் தொடர்பானவைகள்
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-8
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-7
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-6
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-5
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-4
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் -3
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-2
அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்-1
உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை .
.28 வயதில் காதல் என்று நினைத்துக்கொண்டு ,விளைவுகளைப் பற்றி யோசியாமல் முடிவு எடுத்து உள்ளீர்கள்
மணமும் செய்து கொண்டீர்கள் , அவருக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும்.
.அவர் இப்போது அவர் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதாகவும் ,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதாகவும் கூறி உள்ளீர்கள் .
அவர் நிலை மற்றும் அவர் குடும்பத்தார் நிலை பற்றி யோசித்தீர்களா?
அவரும் அவர் குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டும் ?அவர் குடும்பத்தை விட்டு உங்களுடன் வர வேண்டுமா ?
அப்போது அவர் குடும்ப நிலை என்ன?
அப்படியே அவர் செய்தாலும் ,பின் அவர் உங்களைப் போன்று அவரை விரும்பும் பெண்ணிடம் சென்றால் ,
உங்கள் மனம் என்ன பாடு படும் ?.
ஆலோசியாமல் காதல் என்ற பெயரில் தவறு செய்து விட்டீர்கள் .
இப்போதேனும் மன முதிர்ச்சி உடையவர்களின் அறிவுரையைக் கேட்டு முடிவு எடுங்கள்.
என்னைப் பொறுத்தவரை ,நீங்கள் அவரை விட்டு விலகி ,உங்கள் நிலையை அறிந்து உணர்ந்து கொள்பவரை மணப்பது நன்று .இதுவும் சிறிது கடினமானதுதான்.
இந்த முடிவிலும் திருமணத்திற்குப் பின் சச்சரவு வர வாய்ப்புண்டு .காதல் ,புனித உறவு என்று சிக்கலில் மாட்டிக் கொள்ளுபர்கள் முன்பே யோசிப்பது நல்லது