இந்திய அறிவியல் கழக 98-வது மாநாடு சென்னை காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள்
நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடந்தது.
பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் 27 இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார். பின்னர் அறிவியல் மாநாட்டு விழா மலரை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டின் மூலம் மூத்த விஞ்ஞானிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதை
எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அறிவியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவர் சென்னை மாநில கல்லூரியில் படித்தவர். இதே போல
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தலை சிறந்த கணித மேதை ராமானு ஜமும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்.
இந்திய அறிவியல் மீண்டும் பல ராமன்களையும், ராமானுஜங்களை யும் உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு கூடி இருக்கும் அறிஞர்கள் புதிய இந்தியாவை உருவாக்க காரணமாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த மாநாடு இந்திய அறிவியல் மற்றும் பல்கலைக்கழக தரத்தை உயர்த்த உதவும். நம்முடைய அடிப்படை அறிவியல் தரத்தை கட்டமைப்பை வலுப் படுத்தினால்தான் உண்மையான வளர்ச்சி கிடைக்கும். நமது அரசு இதற்கான எல்லா வளர்ச்சி களையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
புதிய பல்கலைக்கழகங்கள் தோன்றவும், நடை முறையில் உள்ள பல்கலைக் கழகங்கள் வளர்ச்சி பெறவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டில் 8 புதிய ஐ.ஐ.டி.களும், 5 புதிய ஆராய்ச்சி மையங்களும் ஏற்படுத்தி இருக்கிறோம். நமது முன்னணி ஆய்வு மையங்களில் இருந்து தலைசிறந்த ஆயிரம் அறிஞர்களை உருவாக்கி வருகிறோம். நம்முடைய ஆய்வும், போதனைகளும் வலுவாக
இருக்க ஆராய்ச்சிகள் அமைய வேண்டும்
1947-ம் ஆண்டு பிரதமராக இருந்த நேரு அலகாபாத் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது ஒரு பல்கலைக் கழகத்தில் தரம் எப்படி இருக்க வேண்டும் என்று கோடிட்டு காட்டினார். மனித நேயம், அமைதி, புதிய கண்டு பிடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்று இருக்க
வேண்டும் என்று பேசினார்.
நமது நாட்டின் வளர்ச்சியும், மக்கள் உடல் நல பாதுகாப்பும், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. அந்த அடிப்படையில் நமது அரசு அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த வகையில் சமுக வளர்ச்சி கட்டமைப்பு ஏற்படுத்தும், பெரிய கண்டுபிடிப்புகள் மனித நலனுக்கு அடிப்படையாக இருந்தாலும் சில கண்டுபிடிப்புகள் மனித குலத்துக்கு எதிராகவும் இருந்துள்ளது.
2-வது உலக போரின்போது விஷ வாயுவால் மனித உயிர்கள்
பறிக்கப்பட்டன. எனவேதான் அறிவியல் வளர்ச்சி மனித நேயத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். நம்முடைய நாடு மாறுபட்ட மக்களையும், குணாதிசயங்களையும் கொண்டது.
அவர்களை ஒருங்கினைத்து நாட்டை மேம்படுத்தி நமது அறிவியல் வளர்ச்சி அமைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை கைகோர்த்து செயல்பட அழைக்கிறேன்.
இளைஞர்கள் இந்த பணியில் அதிகம் ஈடுபட வேண்டும். அந்த முயற்சிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை உதவ வேண்டும். சர். சி.வி. ராமன் தனக்கு கிடைத்த உபகரணங்களை அமைத்து ராமன் பிணைப்புகளை எடுத்து கூறி நோபல் பரிசு பெற்றவர்.
ஆனால் தற்போது பெரும்பாலான உபகரணங்களை வெளி
நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து ஆய்வு நடத்தும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஆராய்ச்சிகளை தரமான உபகரணங்களை நாமே தயாரிக்க வேண்டும். இதற் கான பணிகளில் அறிஞர்கள் ஈடுபட வேண்டும். தலைசிறந்த விஞ்ஞானி சந்திரசேகர் 100-வது பிறந்த தினத்தை தேசிய அளவில் கொண்டாட வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையை கேட்டு இருக்கிறேன்.
அறிவியல் வளர்ச்சிக்காக 10 வயதில் இருந்து 21 வயதுள்ள 3 1/2 லட்சம் மாணவர்களுக்கு விருது, கல்வி உதவித் தொகை
வழங்கி வருகிறோம். நான் வெளிநாடு செல்லும் போ தெல்லாம் இளம் இந்திய விஞ்ஞானிகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் பின்னாளில் இந்தியாவுக்கு வந்து பணி யாற்ற இருப்பதாக உறுதி அளிக்கின்றனர்.
தற்போது நவீன விஞ்ஞான உலகத்தில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நவீன தொழில்
நுட்பத்தையும், ஆய்வு திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிக்கு வயது கிடையாது என்பது போல நமது விஞ்ஞானிகள் என்றும் இளமையுடன் சாதனை புரிய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
மாநாட்டை துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி கபில் சிபல் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து நன்றி கூறினார். மாநாட்டில் 7 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்னர். வருகிற 7-ந்தேதி வரை மாநாடு நடக்கிறது
நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி