வெளிநாடுகளுடனான உறவை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வெளி யுறவு அமைச்சர் கிருஷ்ணா, அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய வுள்ளார்.
“ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்க வேண்டும்’ என, இந்தியா நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறது. தனது நட்பு நாடுகளிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சீனாவும் சாதகமாகவே பதில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் ஆதரவைப் பெறுவதிலும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், பல நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆப்கன், ஆஸ்திரேலியா, நேபாளம், பூடான், மாலத்தீவு, மியான்மர், இஸ்ரேல்,வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் ஆகிய நாடுகள், கிருஷ்ணாவின் சுற்றுப் பயண பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டில் மட்டும் இதுவரை 25 நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களின் போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த இடம் பிடிப்பதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தியதோடு, அதற்கு தேவையான ஆதரவையும் அவர் கோரினார்.