அரசியல் ரீதியாக பல்வேறு இன்னல்கள் இடையே தனது பதவிக்கு வந்த ஆபத்தை மிக சாதுர்யமாக தவிர்த்து தொடர்ந்து முதல்வர் நாற்காலியை தக்க வைத்து வரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது இன்று தெரிந்து விடும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2008 க்கு பின்னர் முதன்முதலாக இங்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப் பட்டது.
30 மாவட்ட பஞ்சாயத்து 176 தாலுகா பஞ்சாயத்து பகுதிகளில் அடங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட விருக்கின்றனர். ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய பலத்தை நிரூபிக்க தனித் தனியாக களம் இறங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 26 , 31 மற்றும் ஜனவரி 1 ம் தேதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பஞ்சாயத்து தேர்தலில் முதன் முறையாக இந்த மாநில மக்கள்தான் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளித்தனர்.
ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 171 மையங்களில் காலையில் துவங்கிய ஓட்டு எண்ணிக்கை முழு விவரம் இன்று மதியம் தெரிந்து விடும்.
அடுக்கடுக்கான பிரச்னைகள்: ரெட்டி சகோதரர்கள் நடத்தும் குவாரிகள், மற்றும் எடியூரப்பாவின் மகனுக்கு அரசு நிலம் ஒதுக்கிய விவகாரம், பா.ஜ., கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் என கவர்னருடன் மோதல், இப்படி பல சோதனைகளை சந்தித்தும் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் நடந்து முடிந்துள்ள பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக அமையுமா மக்கள் செல்வாக்கு என்ன என்பது இன்று மதியம் தெரிந்து விடும்.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)