Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியாக, இம் முடிவை வாபஸ் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரத்து செய்தது. இதனால், கிராமப்புற மாணவர்கள், அதிகளவில், மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை கொண்டு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் முயற்சியை தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. மருத்துவப் படிப்பு களுக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படும் நெருக்கடி நிலை உருவானது.

இப்பிரச்னை குறித்து சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பொது நுழைவுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபின் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.தற்போது மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியாகியிருப்பதால், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படும்.மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டிலும் இன்று வழக்கு தொடரப்படும். இதன்மூலம், பொது நுழைவுத் தேர்வுக்கு தடை உத்தரவு பெற முடியும் என நம்புகிறோம்.இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.

இதற்கிடையே, இந்திய மருத்துவக் கல்லூரிகள் சங்க தலைவர் டி.டி. நாயுடு சார்பில் மத்திய அரசு, சட்ட அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை செயலர், கேபினட் செயலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அதில், “இந்திய மருத்துவக் கவுன்சில் சட்ட விரோதமாக கொண்டு வந்துள்ள நுழைவுத்தேர்வு நடைமுறையை உடனே வாபஸ் பெற வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை நாடு முழுவதும் எதிர்த்து வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த முடிவை வாபஸ் பெற உத்தரவிடுவது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply