எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியின்றி உத்தரவு பிறப்பித்த, “பொது நுழைவுத்தேர்வு செல்லாது’ என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதி, 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை கொண்டு வந்தது.
இதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த முடிவால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்படைவர் என, தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள், அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் டி.டி.நாயுடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
“தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடரப்படும்’ என, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் அறிவித்தார்.
இதையடுத்து, இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழுவுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை துணைச் செயலர் சுபே சிங் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, விதி 33ன் கீழ் மத்திய அரசின் முன் அனுமதியுடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, இளநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் – 1997 மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் – 2000 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டு, பொது நுழைவுத்தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் உள்ளபடி, இந்த முடிவுகளுக்கு மத்திய அரசின் முன் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது.பொது நுழைவுத்தேர்வு முடிவை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு உடனே வாபஸ் பெற்று, அதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து, மத்திய சுகாதாரத் துறைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு விளக்க கடிதம் அனுப்ப திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, திருச்சி என்.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், “மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி பல மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக முதல்வரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, என் தலைமையில், வரும் 11 முதல் 13ம் தேதி வரை டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நுழைவுத்தேர்வு பிரச்னைக்கு நிரந்தரமாக, நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்றார்.இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)