டில்லியில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இக்கூட்டத் தை புறக்கணிக்கப் போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்து ள்ளன.
ஐதராபாத் மற்றும் ஒன்பது மாவட்டங்களை இணைத்து தெலுங் கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என, தெலுங்கானா ராஷ் டிரிய சமிதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக, பாதகங்களை ஆராயும்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் உருவாக் கப்பட்டது. ஆந்திராவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பல்வேறு தரப் பினர்களிடம் கருத்துக்களை கேட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த தனது அறிக்கையை, கடந்த வாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 எம்.எல்.ஏ.க்களில் 123 பேர் கடலோர ஆந்திர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 119 பேர் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். 52 பேர் ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள்.
டில்லியில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் அறிவிக்கவும், விவாதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு கட்சியும் இரண்டு பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளது. தெலுங்கானாவை ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்ற வகையில் காங்கிரஸ் கட்சி இரண்டு பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
முதல்வர் ஆலோசனை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். தெலுங்கானா விவகாரத்தால் மாநிலத்தில் எழக்கூடிய பதட்டத்தை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சோனியாவிடம் தெளிவு படுத்தினார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்திலும் இவர் பங்கேற்க உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படாவிட்டால் அப்பகுதியை சேர்ந்த எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யபோவதாக அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்தும் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் விவாதித்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது பிரணாப் முகர்ஜி குறிப்பிடுகையில், ” சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை வழங்கப்படும். அவற்றை நன்றாக படித்து ஆலோசனை கூறுவதற்கு தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கூற வசதியாக இரண்டு மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.
டில்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தை புறக்கணிக்கும் படி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சில பிரமுகர்கள் அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை வற்புறுத்தியுள்ளனர். தெலுங்கானா தனி மாநிலம் குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் 800 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த அறிக்கை வழங்கப்பட்ட பின், உள்துறை அமைச்சக வெப்சைட்டில் இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த உத்தம்குமார் ரெட்டி எம்.எல்.ஏ.,யும், கடலோர ஆந்திராவை சேர்ந்த சாம்பசிவ ராவ் எம்.பி.,யும் கலந்து கொள்கின்றனர். உத்தம் குமார் ரெட்டி குறிப்பிடுகையில், “ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனி தெலுங்கானா அமைய வேண்டும், என்பது தான் எங்கள் கோரிக்கை’ என்றார். சாம்பசிவராவ் குறிப்பிடுகையில், “ஆந்திராவை இரண்டாக பிரிப்பது சாமானிய விஷயமல்ல’ என்றார்.
ஆந்திராவை இரண்டாக பிரிக்க நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவரது கட்சி சார்பில் வித்தியாதர் ராவும், ராமசந்திர ராவும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இருவேறு கருத்துடைய ஒரே கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் படி கூறுவதால் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது, என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது கட்சிப் பிரதிநிதியும் பங்கேற்கப் போவதில்லை.
பாதுகாப்பு: ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்தார். இதுகுறித்து லாலாகுடா ரயில் நிலையத்தில் தென்மத்திய ரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கூறுகையில், “ஆந்திராவில் முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆறு கம்பெனி பாதுகாப்பு போலீசாரை ரயில் நிலைய பாதுகாப்பு பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இரண்டு அணிகள் சிறப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் நியமிக்கப் பட்டுள்ளனர். ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து மாநில டி.ஜி.பி. யிடம் ஆலோசிக்கப்படும்’ என்றார்.
நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி