Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அது என்ன ஆத்திரம்! – கமல் மீது அறிவுமதி ஆவேசம்

மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது-

“என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்” என்கிற பத்திரிகை விமர்சனத்துக்கு நன்றிகளோடு
30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு
இரவுக் காட்சி
உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம் மன்மதன் அம்பு.
மார்கழி மாத சபா ஒன்றுக்கு
வந்து விட்டோ‌மோ‌
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த அம்பு இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.
கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின் வாயிலாக
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.
“தமிழ் சாகுமாம்
தமிழ் தெருப் பொறுக்குமாம்.
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போலஞ்
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட நீங்கள்
பெரிய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!
இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!
ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்
“அவன் தமிழ்
சாக வேண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.”
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!
தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
“யாதும் ஊரே யாவரும்‘
கேளிர்’ என்று
உலகையே பெருக்கியவர்கள்
எங்களைப் பார்த்து
உங்கள்
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,‘
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற
கைபேசியின் மேல் வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!
அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து
“உயிரே போகுதே’
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
“உயிரே போகுதே’
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!
அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.
அதற்கு
வருவான்‘
வருவான்
வருவான்
“தலைவன்
வருவான்!’
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.
நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!
நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?
அன்புடன்
அறி‌வு‌மதி
நன்றி – நக்கீரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: