Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிகரத்தின் உச்சியை தொடுபவர்கள்

சிலர் சாதனையாளர்களாக பூமியில் பிறப்பார்கள். சிலர் தங்களுடைய திறமையை வளர்த்து, முயற்சித்து சாதனை யாளர்களாக புகழ் பெறுவார்கள். அந்த வகையில் படிப்பு ஒன்றையே தங்களது உயிர் மூச்சாகக் கொண்டு, சென்னைப் பல்கலைக் கழக அளவில், பிஸினஸ் பொருளாதாரப் பிரிவில் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளனர்.
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீராஜ், தரணி, சுனிதா, கமல் ஆகியோர். சரஸ்வதி கடாட்சம் பெற்ற அந்த நால்வரையும் சந்தித்தோம், “படிப்பு என்பது நாமெல்லாம் தேர்வுக்காக செய்யும் வேலையாக நினைத்து கஷ்டப்படுகிறோம். அதை இஷ்டப்பட்டு செய்தால் கண்டிப்பாக உச்சத்தை தொடலாம்.
`சிலபஸ்’ஸுக்காக படிக்காமல் என்னவென்று தெரிந்து கொள்ளும் நோக்கில் படித்ததால் ரேங்க் பெற்றுள்ளோம். எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு, அதை தெளிவாக அடுத்த வருக்கு விவரித்தால் போதும்.
வெற்றி நிச்சயம்… மெடல் வாங்குவதற்காக நாங்கள் ரொம்பவும் மெனக்கெடவில்லை என்பதே நிதர்சன உண்மை!” என்று கோரஸாக கூறுகின்றனர் நால்வரும்… பிஸினஸ் பொருளா தாரத் துறையில் முதலிடம் பெற்ற ஸ்ரீராஜ் பேசும்போது, “வெறும் மனப்பாடம் செய்வது மட்டுமே படிப்பு, மார்க் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புத்தகத்தை படிப்பதைவிட, வகுப்பில் பேராசிரியர் என்ன சொல்கிறார்? என்பதை கூர்ந்து கவனித்து, நூலகத்தில் அது தொடர்பான விவரத்தை தேடிப்பார்த்து அறிந்து கொண்டால், முழுமையான கல்வியறிவு கிடைக்கும். இதை நாம் சொந்தமாக தேர்வில் தெளிவாக எழுதினாலே, கண்டிப்பாக முத்திரை பதிக்கலாம்.
எனக்கு ரோல்மாடல்கள் நிறைய பேர்! எங்கள் கல்லூரி முதல்வர் நரசிம்மன், துறைத்தலைவர் வெங்கட்ரமணன், அப்பா பன்னீர் செல்வம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இவர்களிடம் இருந்து நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பாவுக்கு விபத்து. இதனால் படிக்க முடியாத சூழல். ஆனாலும் மீண்டும் மனம் தளராமல் படித்தேன்.
என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனை என்றால் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் எம்.பி.ஈ., சேர்ந்ததுதான். தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை பிரார்த்தனை செய்வேன். இதனால் மனம் புத்துணர்ச்சி பெற்று, படிப்பது மனதில் பதியும். சின்ன வயதில் ஆசிரியராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
தற்போது இதே துறையில் பி.எச்டி., படித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் பேராசிரியராக வர வேண்டும் என்பது எனது கனவு” என்று அடக்கமாக பேசும் ஸ்ரீராஜ× வின் அப்பா பன்னீர் செல்வம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். 2வது ரேங்க் பெற்ற தரணியிடம் பேசினோம், “எனக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் தெரியும். இசைப் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றுள்ளேன்.
ஆனாலும் படிப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். 5ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துக் கொண்டிருந்த என்னை, 6ம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் சேர்த்து விட்டனர். இதனால் ஆறாம் வகுப்பில் பெயிலாகி விட்டேன். ஒரு வருடம் படிப்புக்கு தடை ஏற்பட்டாலும், விடாத முயற்சியால் படித்து தேர்ச்சி பெற்றேன்.
இங்கே(டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில்) சேர்ந்த பின்னர், என்னுடைய கேரியரே மாறிவிட்டது. படிப்பை ஒரு தேர்வு கண்ணோட்டத்தோடு பார்க்காமல், மிகவும் இயல்பாக கற்றுக் கொடுத்து புரிய வைத்தார்கள். தேர்வுக்கு முன்பு சில நாட்கள் மட்டும் இரவில் படித்தேன்.
வெற்றி கிடைத்தது என்றாலும் ரிஸ்க் அதிகம் எடுக்கவில்லை! சின்ன வயதில் டாக்டர் ஆகணும்னு எல்லோரையும் போல் ஆசைப்பட்டேன். ஆனால் எம்.பி.ஈ பட்டம் என்னை இத்தனை உயரத்துக்கு கொண்டு வந்துடுச்சு. அடுத்து இத்துறையில் டாக்டரேட் பட்டம் பண்ணணும்” என்று தனது எதிர்காலத்தை இப்போதே கணக்கிடும் தரணியின் அப்பா சங்கரன் எலக்ட்ரிஷியனாக பணிபுரிகிறார்.
ஒரே ஒரு அண்ணன் பொறியாளராக உள்ளார். 3-ம் இடத்தை பிடித்த சுனிதா பேசும் போது, “வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை கூர்மையாக கவனித்தாலே போதும். அதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டு தேர்வில் தெளிவாக எழுதினால் பாஸ் பண்ணுவது மட்டுமின்றி, ரேங்க் பட்டியலிலும் இடம் பெறலாம்” என்று தங்களுடைய ஜுனியர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இவர் தனது ரோல்மாடலாக துறைத் தலைவர் வெங்கட்ராமனை குறிப்பிடுகிறார். படிப்பில் தனக்கு ஏற்பட்ட தடை மற்றும் சோதனை குறித்து கூறும்போது, “பி.ஏ. படிக்கும்போது அப்பா இறந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒருவருடம் படிக்க வில்லை. கல்லூரி வர முடியாமல் இடைவெளி விழுந்துவிட்டது. நேராக தேர்வுக்கு தயாராகி பாஸ் பண்ணினேன்.
பிளஸ் 2 வரை படிப்பில் ஆர்வமின்றி இருந்த என்னை, கிரிஜா என்ற ஆசிரியை அறிவுரை வழங்கி, படிப்பின் மகத்துவத்தை உணர்த்தினார். நான் பெறும் அத்தனை வெற்றிக்கும் அவர்தான் காரணம்!” என்று அவரை மானசீகமாக வணங்குகிறார் சுனிதா. இவருக்கு எதிர் காலத்தில் ஆசிரியை ஆகவேண்டும் என்பது கனவு.
4 – ம் இடத்தை பிடித்த கமல் ரொம்பவும் அமைதியான டைப். நடை, உடை, பாவனையில் சாந்தம், பேச்சில் நிதானம். “அப்பா மோகன் ராவ் ஐ.ஓ.சி.யில் வேலை பார்க்கிறார். எனக்கு ரோல்மாடலும் அப்பாதான். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. தினமும் நிïஸ் பேப்பர் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்வேன். அரசியல் ஆர்வம் அதிகம்.
எப்போதும் டிக்ஷனரியை கையில் வைத்து அடிக்கடி படிப்பேன். சின்ன வயதிலிருந்து ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். உடல் மற்றும் மன ரீதியாக என்னை ஆரோக்கியமாக வைத்திருந்ததால், படிப்பிலும் வெற்றிக்கனியை பறிக்க முடிந்தது. மேலும் வகுப்பில் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து, அதை நூலகத்தில் உள்ள புத்தகங்களில் படித்து, தெளிவாக மூளைக்குள் செலுத்தி விடுவேன். தேர்வின்போது திருப்பி படித்தால் போதும்.
எல்லாம் கண் முன்பாக வந்து நிற்கும். எனக்கு தடைகள், சோதனைகள் என்று எதுவுமில்லை. தேர்வுக்கு படிப்பதற்கு முன்பாக, கொஞ்ச நேரம் பைபிள் வாசிப்பேன். மனது அமைதியாகி விடும்” என்று தனது சக்ஸஸ் பார்முலாவை கூறும் கமலுக்கு, எதிர்காலத்தில் தனது அப்பா மாதிரி அரசு அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்று ஆசை.   “ஆண்டுதோறும் எங்கள் கல்லூரி சார்பாக பலர் ரேங்க் பட்டியலில் இடம் பெற்று வருகின்றனர்.
இந்த வருடம் மட்டும் 23 மாணவ, மாணவியர் ரேங்க் பட்டியலில் வந்துள்ளனர். இங்கே படிப்பு மட்டுமின்றி, சமூகம் சார்ந்த பல விஷயங்களை கற்றுத் தருகிறோம். அடுத்து கல்லூரி வளாகத்தில் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். கல்வியை ஒரு தேர்வுக்கான விஷயமாக இல்லாமல், வாழ்க்கையில் உள்ள முக்கிய பங்கு என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறோம்.
மேலும் நன்றாக படிப்பவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், படிக்காத மாணவர்களை மேலே கொண்டு வர முயற்சிக்கிறோம். இதனால் நன்றாக படிப்பவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பெறுகின்றனர். இங்கே மாதம் ஒரு டெஸ்ட், மாடல் தேர்வுகள், செமினார் என நாங்கள் வழங்கும் பயிற்சிகள் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற வழி வகுக்கின்றன.

நன்றாக படிப்பவர்களுக்கு ஸ்பெஷலாக ஸ்காலர்ஷிப், பரிசுகள், விருதுகள் என அவர்களை ஊக்குவிப்பதால், மற்றவர்களுக்கும் இது வொரு உந்துதலாக அமைந்து விடுகிறது. கடந்த பத்து வருடங்களில் எங்களது கல்லூரி குறைந்த பட்சம் ஆறு துறைகளிலாவது ரேங்க் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது!” என்று பெருமிதப் படுகிறார் கல்லூரி முதல்வர் நரசிம்மன்.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: