Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத நாளில்லை. பக்திப் பாடல்கள் மட்டு மன்றி, சினிமா பாடல்களும் சூப்பராக பாடுவார். குடிப்பழக்கம், புகைப் பழக்கம் கிடையாது. கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை மாலையும், மைனர் செயினும் அணிந்திருப்பார். ரத்த அழுத்தம், சுகர் இல்லை. பல் ஒன்று கூட விழவில்லை. மாதம் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் பென்ஷன் வாங்கும் அவர், பாதியை என்னிடம் கொடுத்து விடுவார். பிற பெண்களை பார்க்க மாட்டார், பேச மாட்டார்.

எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. ஆனால், ஒருநாள், என் மன அமைதியில் இடி விழுந்தது அம்மா. ஒருநாள் நள்ளிரவில், நானும், என் கணவரும் அன்னியோன்யமாக இருந்த போது, யாரோ ஒளிந்திருந்து பார்ப்பதுபோல் பிரமை எழுந்தது. ஓடிப்போய் கதவைத் திறந்தேன். சாவித் துவாரம் வழியாக எங்களை பார்த்த என் அப்பா, தன் அறைக்கு திரும்பி ஓடுவது தெரிந்தது; விக்கித்துப் போனேன். நான் பார்த்ததை, என் அப்பாவும் நேருக்கு நேர் பார்த்து விட்டார். மறு நாளிலிருந்து, ஒரு புது பூதம் கிளம்பியது. என் கணவர் வேலைக்குப் போன பின், எங்கப்பா என்னிடம் வந்தார். “உங்களுக்கெல்லாம் நல்ல நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். எல்லாரும் நல்லா இருக்கீங்க. எல்லா சுகமும், தினம் தினம் அனுபவிச்சிக்கிட்டு இருக்கீங்க. மகன்களுக்கு, மனைவி துணை; மகளுக்கு, கணவன் துணை; ஆனா, என் பொண்டாட்டி செத்து, நான் தனியா கிடக்கேன். எனக்கு வப்பாட்டி வச்சிக்க பிடிக்காது; விலை மகளிடம் போகவும் பிடிக்காது. பேசாம, எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க.

“கல்யாணத்துக்கு முன்னாடியே, சொத்தை அஞ்சு பங்கா பிரிச்சு, நான்கை உங்களுக்கு கொடுத்துட்டு, ஒண்ணை வரப் போற என் பொண்டாட்டிக்கு குடுத்துக்கிறேன். 68 வயசு கிழவன் தானேன்ற அலட்சியத்துல, எனக்கு பொண்ணு பாக்காதீங்க. பொண்ணுக்கு வயசு 35லிருந்து 40க்குள் இருக்கலாம். அழகியா இல்லாட்டியும், பார்க்க சகிக்கிற மாதிரி இருக்கணும். விதவைப் பொண்ணு வேணாம்; வறுமையால் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பெண்ணாய் பாருங்க… ‘ என்றார். “பெத்த மகள்கிட்ட இப்படியெல்லாம் பேசலாமா? உங்க கல்யாண ஆசை அநியாயமானதுப்பா…’ என்றேன். “என்ன செய்வி யோ, ஏது செய்வியோ… நீ தான், உன் புருஷன்கிட்டயும், மகன்கள் குடும்பத்தார்கிட்டேயும் பேசி, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ணும். இல்லைன்னா நடக்கறதே வேற…’ என, மிரட்டினார். விஷயத்தை கணவனிடமும், சகோதரர்களிடமும் பேசினேன். அனைவருமே, “கிடக்கறான் கிழவன்… விடு…’ என்றனர்.

தொடர்ந்து என்னை பல விதங்களில் டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டார் என் அப்பா. காலையில் 8 மணிக்கு டிபன் கேட்பார். இட்லி கொடுத்தால், தோசை கேட்பார்; தோசை கொடுத்தால், தக்காளி ஊத்தப்பம் கேட்பார். தேங்காய் சட்னி கொடுத்தால், காரச் சட்னி கேட்பார். மாமியார் கொடுமை என்பரே, அதையெல்லாம் பீட் அடிக்கிறது எங்கப்பா கொடுமை.

இப்போதெல்லாம் எனக்கு கொடுக்கும் பணத்தை, சிவன் கோவில் உண்டியலில் போடுகிறார். நாளிதழ்களில் வரும் மேட்ரி மோனியல் விளம்பரங்களைப் பார்த்து, விண்ணப் பிக்கிறார். கடந்த 15 வருடங்களாக தலைக்கு, “டை’ அடிக்கா தவர், “டை’ அடித்து, புது மீசை வைத்து, கண்ணாடி முன் நிற்கிறார். நானும், என் கணவரும் அறைக் குள் தனித்திருக்கும் போது, பூனையை விட்டெறிகிறார். “எப்.டி.வி.,’ சேனலை வைத்து பார்க்கிறார். உலக புருஷன், பொண்டாட்டிகளை எல்லாம், நாள் முழுக்க கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்.

ஒரு வருடத்திற்குள் அவருக்கு கல்யாணம் செய்து வைக்கா விட்டால், “சொத்துகள் முழுவதையும் தர்மத்துக்கு எழுதி வைத்து விடுவேன்…’ என, மிரட்டுகிறார். என்ன செய்யலாம் அம்மா? தந்தையின் மிரட்டலை உதாசீனப்படுத்தலாமா அல்லது பெத்த மகளே, தந்தைக்கு மறுமணம் செய்து வைக்கலாமா?
— இப்படிக்கு, இருதலைகொல்லி எறும்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. கொஞ்சம் நடுநிலையுடன் யோசித்து பார்த்தால், உன் 68 வயது அப்பாவை, முழு நீள வில்லனாக என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஒருவேளை, புறக்கணிக்கப்பட்ட குண சித்திர நடிகரா(?)

உன் தாய், உன் தந்தையின் செக்ஸ் டார்ச்சரால் தான் தற்கொலை செய்திருப்பார் என்ற தகவலை நான் நம்பவில்லை; அது, ஒரு இட்டுக்கட்டிய பொய். உன் தாயின் மரணம் வரை அல்லது தாயின் மரணத்திலிருந்து ஐந்தாறு வருடங்கள் வரை, உன் தந்தை, தன் மறுமணம் பற்றி கனவிலும் எண்ணவில்லை என யூகிக்கிறேன்.
அறுபது வயதுக்கு பின் ஒரு கணவனும், மனைவியும் சேர்ந் திருப்பது, உடல் இச்சைக்காக அல்ல; தனக்காக ஒரு ஜீவன் நிழற் குடை விரித்திருக்கிறது என்ற மனோபலத்துக்காக. நீயும், உன் கணவனும் தொடர்ந்து 30 நாள் சேர்ந்து படுத்திருந்தால், ஓரிருமுறை தாம்பத்யம் கொள்வீர்கள். மீதி 28 நாட்கள், உன் கணவன் உன் மீதும், நீ உன் கணவனின் மீதும் கால் போட்டு தூங்கியிருப்பீர்கள். அந்த ஓரிரு முறை தாம்பத்யம் தரும் சந்தோஷத்தை விட, 28 நாள் கால் போடுதல், கூடுதல் சுகமும், பாதுகாப்பு உணர்வும் தரும் உனக்கும், உன் கணவருக்கும்… இல்லையா?

உன் தாய் தற்கொலை செய்யாமல், தொடர்ந்து உன் தந்தையுடன் வாழ்ந்திருந்தால்… சிறு கணக்கு போடு. உன் தாய் இறந்தது, உன் தந்தையின் 56வது வயதில்; தன் 52வது வயதில். உன் தாயின் இறப்புக்கும், நடப்புக்கும் இடையே 12 வருடங்கள். உன் தாய் உயிரோடு இருந்திருந்தால், அவருக்கு இப்போது வயது 65 இருக்கும். இருவரும், கடந்த 12 வருடங்களும், கணவனும், மனைவியுமாக தொடர்ந்திருந்தால், 4,380 நாட்கள் சேர்ந்திருப்பர். என்னைக் கேட்டால், ஒரு இருபது நாட்கள் அதிகபட்சம் அவர்கள் தாம்பத்யம் பண்ணியிருக்க வாய்ப்புண்டு. தட்ஸ் ஆல்.

உன் தந்தைக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இல்லை; பற்கள் விழவில்லை. உன் பாட்டனார், முப்பாட்டனார் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர் என விசாரித்துப் பார். அவர்கள்

90 வயது வரை இருந்திருப்பர்; இவரும் 90 வரை இருப்பார். உன் தந்தை, உங்களுக்கு தெரியாமல் தவறான தொடர்புகள் கொண்டு, உங்களை இழிவுபடுத்தவில்லை. அவர் கேட்பது, முறைப்படி திருமணம். அதுவும், பந்தி பரிமாறிவிட்டு, கடைசி பந்தியில் சாப்பாடு கேட்கிறார்… சாப்பிடட்டுமே! கீழே ஐந்து யோசனைகளை தருகிறேன். அதில், எது உனக்கு உசிதமானதோ, அதை தேர்ந்தெடுத்துக் கொள்.

1. உன் சகோதரர்களின் மனைவிமார் இல்லாமல், உன் கணவன் இல்லாமல், உன் தந்தையுடன் மனம் விட்டுப் பேசுங்கள். அவரது கல்யாண ஆசையின் நியாய, அநியாயத்தை அவர் வாயாலேயே கேட்டு உணருங்கள். வயோதிக உச்சத்தில் செய்து கொள்ளும் மறு மணத்தின் சாதக, பாதகங்களை அவர் முன் அலசுங்கள். சர்க்கஸ் சிங்கத்தின் காலி இடத்தை, காட்டு சிங்கம் நிரப்பாது என்பதை அப்பட்டமாக்குங்கள். விவாதத்தின் முடிவிலும் உன் தந்தை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தால், மறு மணத்திற்கு முன் சட்டப்பூர்வமான பாகப் பிரிவினை எழுதி வாங்கி விடுங்கள்.

மறுமண வாழ்க்கை சரியாக அமைய, உங்கள் தந்தையை, ஒரு செக்சாலஜிஸ்ட்டிடம் கூட்டிப் போய், கம்ப்ளீட் செக்-அப் செய்து, ரிப்போர்ட் பெறுங்கள். உன் தந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயதை, தந்தை அனுமதியுடன், 45-50க்குள் ஆக்குங்கள். விதவைப் பெண் என்றால் நலம்.

2. உன் தந்தையின் சக வயது நண்பர்களில் சிலர், உன் தந்தையைப் போல, மனைவியை இழந்து நிற்பர். உன் தந்தை போல மறுமணம் வேண்டாது, முழுமையான ஆன்மிகத்திடம், உடலையும், மனதை யும் ஒப்படைத்திருப்பர். அவர்களை அழைத்து, உன் தந்தையிடம் பேசி, தந்தையின் திருமண ஆசையை ரத்து செய்.

3. உண்மையிலேயே உன் தந்தைக்கு திருமண ஆசை இருக்கிறதா அல்லது நீயும், உன் சகோதரர்களும், சுயநலத்துடன் அவரை விட்டு விலகி நிற்பதால், அவர் எமோஷனல் பிளாக்மெயில் பண்ணுகிறாரா என்பதையும் கண்டுபிடி.

4. என் தந்தை, வெளியில் ஆரோக்கியமாக தெரிந்தாலும், அதிகபட்சம் ஐந்து வருடம் தான் இருப்பார். அவருக்கு எதற்கு வெட்டியாக மறுமணம் என நீ நினைத்தாயானால், பெண் பார்க்கும் படல நாடகங்கள் நான்கைந்து போடு. முன்னமே பேசி வைத்த மண மகள் வீட்டுக்கு, உன் தந்தையை அழைத்துப் போ. அவர்களை விட்டு, “சாகப் போற கிழவனுக்கு கல்யாணம் ஒரு கேடா…’ என்ற அர்த்தத்தில் டயலாக்குகளை அள்ளிவிடச் சொல். தொடர்ந்து நான்கைந்து வீடுகளில் அர்ச்சனை கிடைத்தால், கிழட்டுப் பூனை கொறிக்க சுண்டெலி கேட்காது.

5. உன் தந்தை, “சிவன் கோவிலுக்கு போகிறேன்…’ எனச் சொல்லி விட்டு, வெளி பிரகாரத்தில் உட்கார்ந்து, 25 வயது இளைஞர்களுடன் செக்ஸ் பேசிக் கொண்டிருக்கிறாரா என உளவறி. தவிர, தன் கைபேசி மூலம் யார் யாருடன் பேசுகிறார் என்பதை கண்காணி. அவரது திருமண ஆசை, வயதுக்கு பொருந்தாத வாலிப நண்பர்களால் தூப மிடப்பட்டது என்றால், நண்பர்களை கத்தரித்து, தந்தையை மீட்டெடு. முதல் யோசனையை தேர்ந்தெடுத்தாய் என்றால், மறுமணம் செய்து கொள்ளும் உன் தந்தைக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: