Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.ஜி.ஆரிடம் தமிழ் கற்ற மலாய்க்காரர் ! – ஜே.எம்.சாலி

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசி யாவில் 1970ல் உலா வந்தார் எம்.ஜி.ஆர்., எல்லா பத்திரி கைகளும், அவரைப் பற்றி சுவையான செய்திகளை வெளி யிட்டு, சிறப்பித்தன. சிங்கப்பூரில், அவருடைய ரசிகர்கள் அணி திரண்ட காட்சி கண்கொள்ளாதது. சிங்கப்பூரில், அந்த நாளில், தமிழ், இந்திப் பட தியேட்டர்கள் அதிகம். இந்தியர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, மலாய்க் காரர்கள் தமிழ்,

இந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். அதனால், அங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், திலீப்குமார், ராஜ்கபூர் ரசிகர்கள் அதிகம். திரைப்பட ஆர்வத்தால் தமிழ் பேசவும் மலாய்க் காரர்களுக்கு ஆவல். எம்.ஜி.ஆர்., ரசிகரான ஜொஹாரி அப்துல்லா தமிழ் கற்கத் துடிதுடித்தார். அவருடைய ஆசை நிறைவேறியது எப்படி? அவரே சொல்கிறார்:

தமிழ் அழகான செம்மொழி. மலாய் என் தாய்மொழியாக இருந்தாலும், இனிமையான தமிழ் மொழியை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, எனக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது. காத்திருந்தேன்; காலம் கனிந்தது. புரட்சித் தலைவராக நான் மதித்து, போற்றி வந்த எம்.ஜி.ஆர்., சிங்கப்பூருக்கு வந்தார். உலகம் சுற்றும் வாலிபரான அவரைத் தேடிச் சென்றேன். என் தமிழ் ஆசையைச் சொன்னேன்; என் ஆர்வத்தைப் பாராட்டினார். படப்பிடிப்புக்காக பல நாள் சிங்கப்பூரில் தங்கியிருப்பேன். “முதலில் தமிழ் எழுத்துக்களைச் சொல்லித் தருகிறேன்; பேசலாம். பிறகு, நீங்கள் தமிழ் படிக்கலாம்…’ என்றார் எம்.ஜி.ஆர்., அவரே என் தமிழ் ஆசான். பரபரப்பான படப்பிடிப்புக்கு இடையே அவர், எனக்கு உயிர் எழுத்துக்களைக் கற்றுத் தந்தார். என் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி, தமிழ் அகராதி ஒன்றையும், அன்புப் பரிசாகக் கொடுத்தார். புரட்சித் தலைவரின் நல்லாசி, எனக்கு பெருஞ் செல்வமாக அமைந்தது. “தமிழ்ப் படங்களைப் பார்ப்பதுடன், பத்திரிகைகளையும் படிக்க வேண்டும். இங்கு நடைபெறும் தமிழ், இந்திய நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும். அதனால், தமிழ் மொழித் தொடர்பை வளர்த்துக் கொள்ள முடியும்…’ என்று கூறினார் எம்.ஜி. ஆர்., அதை, உபதேசமாக ஏற்று, படிப்படியாக தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டேன். பொருள் புரியாத கடினமான சொற்களை புத்தகத்தில் எழுதிக் கொள்வேன்; இந்திய நண்பர்களை அவ்வப்போது சந்தித்து, அதற்கான அர்த்தம் தெரிந்து கொள்வேன். எம்.ஜி.ஆர்., என் குரு. அவருடைய ரசிகன் என்ற முறையில், அவருடைய பாதையில் நடைபோட விரும்பினேன். சிலம்பாட்டம் கற்றுக் கொண்டேன். அவருடைய வசனங்களும், திரைப்படப் பாடல்களும் எனக்கு மனப்பாடம். “அச்சம் என்பது மடமையடா…’ என்ற அவருடைய திரைப்படப் பாடல், எனக்கு மன உறுதியை கொடுத்தது. மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடுமையான சோதனைக்கு ஆளானேன். ஐந்து முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அச்சமயம், “அச்சம் என்பது மடமையடா…’ என்ற உபதேசத்தால், நான் உத்வேகம் பெற்றதை மறக்க முடியாது. நான் கற்றறிந்த தமிழ் அறிவு குறைவானது தான். இன்னும் அதிகம் கற்று, சிறப்படைய வேண்டும் என்பதே லட்சியம். சிங்கப்பூர்க் கடைகளிலோ, பிற இடங்களிலோ இந்தியர்களைப் பார்க்கும் போது, தமிழில் தான் பேசுகிறேன். ஆனால், “இவன் எப்படி தமிழ்ப் பேசுகிறான்…’ என்று வியப்புடன் அவர்கள் என்னை ஏற, இறங்கப் பார்ப்பர். என் குடும்பத்தினருக்கும் தமிழ் கற்பித்துள்ளேன். அவர்களும், ஓரளவு தமிழ் பேசுகின்றனர். திருக்குறளைப் படித்து பயனடைந்தவன் நான். எப்படி வாழ வேண்டும் என்பதை, திருவள்ளுவர் உலகுக்கு எடுத்துரைத்துள்ளார். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளில் வாழ்க்கைத் தத்துவத்தை குறள்களில் வரைந்துள்ள வள்ளுவருடன் எந்தப் புலவரையும் ஒப்பிட முடியாது. அதனால், பல இன, சமூக மக்களும் திருக்குறளை அறிந்து கொள்வதற்கு வசதியாக மலாய், ஆங்கில மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். பல குறள்பாக்கள் எனக்கு மனப்பாடம். – இப்படி மகிழ்ச்சியுடன் கூறினார் ஜொஹாரி. தமிழ்ப் பற்றுமிக்க ஜொஹாரி, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் இலக்கிய, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருக்குறள் விழாவும் அவற்றில் அடங்கும். தமிழ்ப் பத்திரிகைகளை அவ்வப்போது படிக்கும் பழக்கம் உண்டு. தமிழ் இளையர் மன்றத்தின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். ஆர்வமும், விடாமுயற்சியுமே தமிழ் மொழி கற்க இவருக்கு உறு துணையாக அமைந்தது. அதற்கு வித்திட்ட எம்.ஜி.ஆரை மீண்டும் சந்திக்க விரும்பினார். ஆனால், அவரது அந்த ஆசை நிறைவேற வில்லை.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: