இப்படி ஒரு சுவாமியின் பெயரா என்பவர்கள், பக்தர்களைக் கண்டதும் உள்ளம் மகிழும் பெருமாளைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டுமானால், திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி செல்ல வேண்டும்.
தல வரலாறு : சீதாபிராட்டியை ராவணன் சிறைஎடுத்து சென்றபோது சீதாதேவி தன் புத்திக் கூர்மையால், தன்கணவர் எப்படியும் தம்மை கண்டு பிடித்து விடுவார் என நினைத்து தன் உடலில் உள்ள ஆபரணங்களை கழற்றி, செல்லும் வழியில் போட்டு வந்தாள். ராமனும் லட்சுமணனும் சீதாதேவியை தேடிவரும் பொழுது பாடகச் சேரி வந்தார்கள். “பாடகம்’ என்னும் கொலுசைக் கண்டார்கள். லட்சுமணன் இது அண்ணியுடையதுதான் என்று உறுதி செய்தார். ராமர், “”இது எப்படி நிச்சயமாக தெரியும்?” என்று கேட்ட பொழுது நான் அண்ணியின் பாதத்தை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை என்றார். இதைக் கேட்ட ராமன் மகிழ்ந்தார். கொலுசை பார்த்து, “கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்’ எனக் கூறினார். அதனால் இவ்வூர் பெருமாளுக்கு “கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஊரை “பாடகச்சேரி’ என்றனர். பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார்.
மகான் வாழ்ந்த ஊர்: பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகள் இங்கு வாழ்ந்தார். அவர் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி உள்ளிட்ட கோயில் களுக்கு கும்பாபிஷேக திருப்பணி செய்தவர். இவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிப்பூரம் மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் நடக்கிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். அவருடைய ஜீவ சமாதி திருவொற்றியூரில் பட்டினத்தார் சமாதி அருகில் உள்ளது. பைரவர் உபாசகரான அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக் கணக்கான நாய்கள் வந்து, உணவருந்தி மறைந்து விடும் அதிசயம் நிகழ்ந்தது.
தல பெருமை : இந்தக் கோயில் பெரிதாக்குவதற்காக முயற்சி மேற் கொள்ளப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் நிற்க, மூலமூர்த்திகள் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு ஓலைக்குடிசைக்குள் 250 வருடங்களாக வைக்கப்பட்டுள்ளனர். சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். சவுந்தர நாயகி சமேத பசுபதீஸ்வரர் தனி சன்னதியில் கணபதி, நந்தியுடன் உள்ளனர். இங்கு பசுபதீஸ்வரரை திங்கட் கிழமைகளில் பூஜித்தால் வியாபாரம் பெருகும், நிம்மதி கிடைக்கும், திருமண பாக்கியம் உண்டாகும். இந்தக் கோயிலில் தற்போது திருப்பணி நடந்து
வருகிறது.
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து ஆலங்குடி செல்லும் வழியில் 14 கி.மீ. தூரம்.
(மற்றொரு வழி) கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் வலங்கைமான் சென்று அங்கிருந்து தெற்கே 5 கி.மீ. தூரம்.
திறக்கும் நேரம்: காலை 6- 10 மணி, மாலை 5- இரவு 8 மணி.
போன்: 98400 53289, 97517 34868.
(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கும் விதை2விருட்சம்)