Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பத்தும் பறந்துபோகும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

ஏதோ கனவுலகத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டது போல எல்லோரும் விலை வாசியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கி றார்கள். அவசர அவசரமாகப் பிரதமர் தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி வெங்காய விலையைக் குறைப்பது பற்றியும், தக்காளி உற்பத்தியைப் பெருக்குவது பற்றியும், ஒட்டுமொத்த விலை வாசி உயர்வைக்கட்டுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இத்தனை நாள்கள் கவலைப் படாமல் இருந்து விட்டு, பிரச்னை கைமீறிப் போனபிறகு இவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு தீர்வுகாண முயல்வதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித் திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ.1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள் களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந் திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந் திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.

ஏதோ வெங்காய விலை மட்டுமா மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது? பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, மீன், மசாலாப் பொருள்கள் என்று பரவலாக எல்லாப் பொருள் களும் சராசரி 15 முதல் 30 சதவீதத்துக்குக் குறையாமல் விலை யேற்றத்தைக் கண்டிருக்கும் நிலைமை. இது ஒன்றும் திடீரென்று ஏற்பட்டுவிட்ட நிலைமையல்ல. கடந்த ஓராண்டாக இந்த விலை யேற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்து வந்திருக் கிறது. இதைப் பிரச்னையாகக் கருதாமல், பருவநிலை மாற்றம் அடுத்த மகசூலில் நிலைமையைக் கட்டுப்படுத்திவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் ஆட்சியாளர்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றியும், ஆதர்ஷ் குடியிருப்பு பற்றியும், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததன் விளைவுதான் இன்றைய கட்டுக்கடங்காத நிலைமை. சராசரி இந்தியக் குடிமகன் சில்லறை வியாபாரி களிடம் காய்கறி அல்லது உணவுப் பொருள் களுக்குத் தரும் விலைக்கும் மொத்த விற்பனை விலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதேபோல, விவசாயி தனது விளை பொருள்களை விற்கும் விலைக்கும் மொத்த விற்பனை விலைக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை. சில்லறை விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்தது 30 சதவீதம். ஒரு சில பொருள்களுக்கு இந்த இடைத்தரகர்கள் அடையும் லாபம், அங்கும் இங்கும் கடன் வாங்கி, மழையிலும் வெயிலிலும் போராடி, உழுது பயிரிட்டு அந்தப் பொருள்களை உற்பத்தி செய்த விவசாயிக்குக் கிடைக்கும் விலையைவிட அதிகம் என்றால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது? கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி இரண்டையும் சேர்த்து நாம் சுமார் 350 லட்சம் டன் பருப்பு வகைகளைப் பயன்படுத்தி இருக்கிறோம். இதன் மொத்த மதிப்பு ரூ. 1.4 லட்சம் கோடி. அதாவது, சராசரியாக ஒரு டன்னுக்கு ரூ. 40,000. 1 கிலோ ரூ. 40. சில்லறை விற்பனையில் பொதுமக்கள் இந்தப் பருப்பு வகைகளை என்ன விலை கொடுத்து வாங்கி னார்கள் தெரியுமா? குறைந்தது ரூ. 60 முதல் ரூ. 110வரை! ரூ. 60 என்று வைத்துக்கொண்டாலும்கூட 50 சதவீதம் லாபம் இடைத் தரகர் களுக்குப் போயிருக்கிறது. விவசாயிக்கு மிஞ்சியது உழைப்பும் கடனும்தான் என்பதுதான் வேதனை யிலும் வேதனை. இது ஓர் உதாரணம் மட்டுமே. அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், காய்கறி, பழங்கள் என்று எல்லா பொருள்களிலும் இதே தான் நிலைமை. இதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். முதலாவதும் அடிப்படையா னதுமான காரணம், முறையான சேமிப்புக் கிடங்கு வசதியோ, விற்பனை வசதியோ, விவசாயிக்கு முன்னுரிமை கொடுத்து விலை நிர்ணயம் செய்து அவரது நல் வாழ்வை உறுதிப் படுத்தும் நடவடிக்கையோ இல்லாதது. லஞ்சமும் ஊழலும் நிறைந்த பொதுவிநியோக முறை இருக்கும் வரை இந்தக் குறையைப் போக்க முடியாது என்பது தெரிந்தும், அதற்கான முயற்சிகளை அரசும் செய்யவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் செய்ய ஊக்குவிக்கவில்லை.இரண்டாவது காரணம், விவசாயிக்கு முறையாக நிதியுதவி வழங்கி விவசாய த்தை கௌரவமான, லாபகரமான தொழிலாக நிலை நிறுத்த அரசு முயற்சிக்காதது. சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்றின்படி, 40 சதவீதம் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டு விட்டார்கள் அல்லது விட்டுவிடத் தீர்மானித் திருக்கிறார்கள். இந்த விளைநிலங்கள் அரசின் அனுமதி யுடனும், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் வீட்டு மனைகளாக்கப்படுகின்றன. காரணம், ஊருக்குப் பசி தீர்க்கும் விவசாயம், விவசாயிக்குப் படியளக்கவில்லை, என்பதுதான். உலகின் எந்தப் பகுதியிலும், காலங்காலமாக அரசின் ஆதரவும், முறையான கடன் வசதிகளும் இல்லாமல் விவசாயம் தழைத்த தில்லை. இங்கே அவ்வப்போது கடன் நிவாரணம் என்ற பெயரில் வங்கிகளில் கடன்சுமை இறக்கப்படுகிறதே தவிர, விவசாயியின் சுமை இறக்கப்பட்டதே இல்லை. இடைத் தரகர்கள் விவசாயி களுக்குத் தரப்படும் மானியங்களில் பாதிக்கு மேல் உண்டு கொழுக்கி றார்களே தவிர, விவசாயிக்கு முறையாக மானியங்கள் போய்ச் சேர்வதே கிடையாது. கோடிக்கணக்கான ரூபாய் உர மானியம் என்கிற பெயரில் உரத் தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டும், இன்னும் ஒரு ஹெக்டேருக்கான உரம் அதிகப்படவே இல்லையே, ஏன்? கோடிக்கணக்கான பணம் பாசன வசதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படுகிறதே தவிர, விளைநிலங்களின் பரப்பளவு அதிகரிக்க வில்லையே, ஏன்? பிறகு ஏன் விவசாயிகள் பயிரிடத் தயங்கு கிறார்கள்? எங்கே போயிற்று அந்தப் பணம் எல்லாம்? இந்தியாவின் மொத்தப் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் என்று மார்தட்டிக் கொள்கிறது அரக. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக விவசாய வளர்ச்சி வெறும் 2.2 சதவீதம்தான். மத்திய அரசில் விவசாயிகள் பிரச்னை மற்றும் விலைவாசிப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சகங்கள் 12. மாநில அளவில் 5 அமைச்சகங்கள் விவசாய மற்றும் விலைவாசிப் பிரச்னைகளுடன் தொடர்புடையவை. இவை அனைத்தும் எப்போதாவது ஒன்றாக அமர்ந்து பிரச்னையை அலசி ஆராய்ந்தது உண்டா? தீர்வுகாண முயற்சித்தது உண்டா? இத்தனை அமைச்சகங்கள், இத்தனை அதிகாரிகள், இவ்வளவு பெரிய நிர்வாக இயந்திரம். இவையெல்லாம் இருந்தும், தொலைநோக்குப் பார்வை யுடனும் எச்சரிக்கையுடனும் மக்களின் உணவுப் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறும் ஓர் ஆட்சியை எப்படி நல்லாட்சி என்று ஏற்றுக் கொள்வது? பொறுமை எல்லை மீறுகிறது. பசிவந்தால் பத்தும் பறந்துபோம்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: