Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆதர்ச’ அமைச்சர்

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

இந்தியாவில்கூட இப்படியெல்லாம் நடக்குமா? ஓர் அமைச்சரால் இப்படிக்கூடச் செயல்பட முடியுமா? வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறையின் அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ். முறையாக அனுமதி பெறாமல், வரைமுறைகளை மீறி மும்பையில் எழுப்பப்பட்ட 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட உத்தரவு பிறப்பிக்கும் தைரியத்துக்காகவே அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைப் பாராட்ட நாம் கடமைப் பட்டிருக்கிறோம். ஆதர்ஷ் கூட்டு றவுக் குடியிருப்பு சங்கம் சார்பில் மும்பையிலுள்ள கொலாபா பகுதியில் எழுப்பப் பட்டிருப்பதுதான் இந்த 31 மாடிக் குடியிருப்பு. கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக எழுப்பப் படுகிறது என்கிற போலிச் சாக்கில், பல சட்டதிட்டங்களை, வரைமுறைகளை, பெற வேண்டிய முறையான அனுமதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒரு சில அரசியல் பெரும் புள்ளிகளின் உறவினர்களுக்குச் சில குடியிருப்புகளை வழங்கி எழுப்பப்பட்டதுதான் இந்த ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு. கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் விதவை களுக்காகக் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், மூன்று முன்னாள் ராணுவத் தளபதி களுக்கு வீடு வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் தரைப்படைத் தளபதி களான ஜெனரல் தீபக் கபூர், ஜெனரல் விஜ், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் மனவேந்திர சிங் உள்ளிட்ட சில ராணுவ உயர் அதிகாரிகளும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணின் உறவினர் உள்ளிட்ட  சில அரசியல் பெரும்புள்ளிகளும் இந்த சொகுசுக் குடியிருப்பில் இடம் வாங்கி இருப்பது தெரிந்ததும், ஆதர்ஷ் குடியிருப்பு விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடற்கரைப் பகுதி ஒழுங்காற்று விதிகளை மீறி இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்  கட்டப்பட்டது என்பது முதல் விதி மீறல். சில முக்கியமான ராணுவப் பகுதிகளின் அருகில் எழுப்பப்படுவதால் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பால் பாது காப்புப் பிரச்னைகள் எழக்கூடும்   என்கிற கடற்படையின் எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் கட்டப்பட்டது இரண்டாவது விதிமீறல். (அதற்காகத்தான் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் மனவேந்திர சிங்குக்கு ஒரு ஃபிளாட் வழங்கப்பட்டதாம்!)இதுபோல, மும்பை மாநகராட்சி, பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் என்று பல துறைகளிலிருந்து பெற வேண்டிய முறையான அனுமதிகளைப் பெறாமல் இப்படி ஒரு 31 மாடிக் குடியிருப்பை எழுப்பி இருப்பவர்களைக் குடியுரிமையியல் சட்டத்தின்படியோ, குற்றவியல் சட்டத்தின் படியோ, தண்டிக்கத் தலைப்பட்டால் அந்த வழக்குகள் முடிவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், நமது தமிழக அரசு செய்ததுபோல, மகாராஷ்டிர அரசும் விதிமுறை மீறல் கட்டடங்களை முறைப்படுத்த அவசரச் சட்டம் கொண்டுவந்து, ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டியவர்களைக் காப்பாற்றக் கூடும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ்!””மூன்றே மாதத்துக்குள், முறைகேடாக நீங்கள் கட்டியிருக்கும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பை இடித்துத் தள்ளுங்கள். இல்லை யென்றால், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று அமைச்சர் துணிவுடன் ஒரு முடிவை எடுத்து அறிவித்து இருக்கிறார். அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நினைத்திருந்தால், அனுமதிக்கப்பட்ட உயரத்துக்கு மேல் கட்டப்பட்ட தளங்களை இடிக்கும்படி உத்தரவிடவோ, இல்லை அரசே இக்குடியிருப்பை எடுத்துக்கொண்டு பொது உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவோ உத்தரவு பிறப்பித்திருக்கலாம். அப்படிச் செய்யாததற்கு அமைச்சரைப் பாராட்ட வேண்டும்.அமைச்சரின் உத்தரவுக்கு நிச்சயமாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்யப்படும். அதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்குமா, ஏற்காதா என்பது அடுத்த விஷயம். ஆனால், முறைகேடாகக் கட்டப்பட்ட 31 மாடிக் கட்டடத்தை இடிக்க உத்தரவு பிறப்பிப்பதன் மூலம், விதிமுறை மீறல்களும், சட்டத்தைத் தங்களது பணப லத்தாலும், செல்வாக்காலும் வளைக்க முற்படுபவர்களையும் அங்கீகரிக்கக் கூடாது என்கிற முன்னுதாரணத்தை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்படுத்தி இருக்கிறார்.விதிமுறை மீறல்களை அனுமதிக்கக் கூடாது என்று பல உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல முறை தீர்ப்புகளை எழுதி இருக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்கள் பணமுதலைகளின், சமூகவிரோதிகளின் வேண்டு கோளுக்கிணங்க அந்தத் தீர்ப்புகளை நீர்த்துப்போகச் செய்த சரித்திரம் தான் இதுவரை அரங்கேறி இருக்கிறது. தமிழகத்திலேயே, 2007-ல் அதற்கு முன்னால் நடந்த விதிமுறை மீறல்களை அரசு அங்கீகரித்து முறைப்படுத்தியதன் விளைவாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,500-க்கும் அதிகமான விதிமுறை மீறல் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருப்பதை நமது தலையங்கத்திலேயே சுட்டிக்காட்டி விமர்சித் திருந்தோம். அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்போது உத்தரவு பிறப்பித்திருப்பதுபோல, தமிழக முதல்வரும் 2007-ல் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதத்தில் வரைமுறை மீறல் கட்டடங்களை இடித்துத் தள்ள உத்தரவு பிறப்பித்திருந்தால், காளான்கள்போல விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் எழும்பி இருக்குமா? மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு இருக்கும் துணிவு, தமிழக அரசுக்கு இல்லாமல் போனது ஏன் என்கிற விவாதத்துக்கு நாம் தயாராக இல்லை.விதிமுறை மீறல்கள் அனுமதிக் கப்படாது என்றும், அப்படிக் கட்டடங்கள் எழுப்பப்பட்டால் இடித்துத் தள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்திருப்பது போல துணிந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே, இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அவர் தகர்க்க உத்தர விட்டிருப்பது 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பை மட்டுமல்ல. சட்டமும், விதிகளும் சட்டத்தை மதித்து நடக்கும் பொது மக்களுக்கு மட்டும் தான் என்றும், பணபலமும் அரசியல் பின்புலமும் உள்ளவர்களும், நிழல் மனிதர்களும், தாதாக்களும் எந்த விதிமுறை மீறல்களுக்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஏற்பட்டிருக்கும் பொதுவான கருத்தையும் அல்லவா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உடைத்து எறிந்திருக்கிறார்!”ஆதர்ஷ்’ என்கிற இந்தி வார்த்தைக்கு முன்மாதிரி என்று பொருள். அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்மாதிரியாக ஒரு முடிவை எடுத்து அறிவித்திருக்கிறார்!

Leave a Reply