Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேர்தல் கூட்டணி மற்றும் மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட . . . – துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணி பற்றி தலைவர் கருணாநிதி முடிவு செய்து புதிய வியூகம் அமைத்து கொடுப்பார் என்றும், மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட உறுதி எடுத்துக் கொள்வோம் எனடறும் பரமத்தி வேலூர் பொதுக் கூட்டத்தில் துணை  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
நாமக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு பரமத்திவேலூர் பை-பாஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி காந்தி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், இளைஞர் அணி அமைப்பாளர் ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-   இந்த கூட்டத்துக்கு பெரும் அளவில் திரண்டு வந்திருக்கும் உங்களை பார்க்கும் போது இந்த கூட்டம் பொதுக்கூட்டமா? அல்லது மாநாடா? என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது.

இந்த அளவுக்கு நீங்கள் திரண்டு வந்திருப்பதற்கு காரணம் இந்த ஆட்சியின் மீதும், இதை வழிநடத்தி செல்லும் தலைவர் கலைஞர் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப் படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் 100-க்கு 100 சதவீதம் நிறை வேற்றி உள்ளது.
அதனால் விரைவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை யொட்டி நாம் தெம்போடு மக்களை சந்திக்க இருக்கிறோம்.   நாம் தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் மக்கள் நம்மளை சந்திக்கும் போது நமது அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி மகிழ்ச்சியோடு பேசுவதை காணமுடிகிறது.

இங்கு எனக்கு முன்பு பேசிய தமிழக சட்டசபை துணை சபா நாயகர் அண்மையில் ஒரு கட்சி நடத்திய மாநாட்டை பற்றியும் அதற்கு பதில் அளிக்கும் வகையிலும் சில கருத்துக்களை கூறினார். என்னை பொறுத்தவரையில் அவர்களை நாம் பொருட் படுத்த தேவை இல்லை.

அவர்கள் விரைவில் அரசியல் அனாதைகளாக, அரசியலில் அகதிகளாக ஆக்கப்படக்கூடியவர்கள். இந்த தி.மு.க. மேடைக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில் சரித்திரத்தில் இடம்பெற்ற தலைவர்கள் வரலாற்றை பதிவுசெய்த தலைவர் களுக்கு இது போன்ற தி.மு.க. மேடையில் நாம் பதில் சொல்லி வந்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க நாம் யார்-யாருக்கோ பதில் சொல்லி நமது தகுதியை குறைத்துக்கொள்ள தேவை இல்லை.   நமது கழக அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் விளக்கி சொன்னால் போதும். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது மத்திய மந்திரி சிதம்பரம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது இந்த தேர்தலில் தலைவரின் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று பிரசாரம் செய்தார். அந்த தேர்தல் அறிக்கையை முன்நிறுத்தியே அவர் ஓட்டு கேட்டார். அந்த தேர்தலில் கலைஞர் தந்த உறுதி மொழியை நம்பி தான் மக்கள் நமக்கு இந்த ஆட்சியை உருவாக்கி தந்தார்கள்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் நிறைவேற்றி தந்துள்ளார் கலைஞர். ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கு வோம் என்றார். ஆனால் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார்.

அதே போல இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து உத்தரவு என்பன போன்ற சாதனை திட்டங் களை நிறைவேற்றி உள்ளோம்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டு வந்து தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்து ள்ளோம்.
அதே போன்று சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டு அனைத்து மக்களும் சாதி வேறுபாடுகளை மறந்த வாழ தமிழகம் முழுவதும் சமத்துவ புரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனை திட்டம் கொண்டு வரப்பட்டு 20 ஆயிரத்து 838 பயனாளிகளுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது மக்களிடையே பிரபலமாக விளங்கி வரும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் அவசர சிகிச்சை வசதி கிடைத்துள்ளது. இப்படி எண்ணற்ற சாதனை திட்டங்களை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக கவர்னர் உரையாற்றினார். இந்த உரையை பற்றி கருத்து சொன்ன கம்யூனிஸ்டு தலைவர்கள் இது கவர்னரின் உரை அல்ல. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்று குறை கூறினார்கள்.
நான் அதை பெருமையோடு ஏற்றுக்கொள்கிறேன். அடுத்து வரும் ஆண்டில் தி.மு.க. அரசு நிறைவேற்றும் சாதனை திட்டங்களை பற்றி குறிப்பிட்டால் அதை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்று கூறுகிறார்கள். அதே போல் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடு பற்றி ஜெயலலிதா குறை கூறி வருகிறார்.
அவர் அது வீடு அல்ல. கழிப்பிடம் என்று குறைகூறுகிறார். இது பற்றி மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தி.மு.க. அரசின் திட்டங்களை, சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாமல் தற்போது தி.மு.க. அரசுக்கு எதிராக அபாண்டமான குற்றச் சாட்டுக்களை கூறி சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படி கூறப்படும் அபாண்டமான குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம். இதன் மூலம் தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காணுகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கணக்கு தணிக்கை அதிகாரி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அது என்ன ஆதாரமான குற்றச்சாட்டா? இல்லை. அனுமானத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. தற்போது அந்த துறையின் மந்திரியாக பொறுப்பு வகிக்கும் கபில்சிபலும் அதை தான் சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு திட்டம் நிறைவேற்றப்படும் போது அதனால் அரசுக்கு எந்த லாபம் என்று அந்த அரசும் பார்க்க முடியாது. மக்களுக்கு என்ன பலன் என்ற அடிப்படையில் தான் ஒவ்வொரு திட்டமும் நிறை வேற்றப்படும்.   தமிழ்நாட்டில் அரசு போக்கு வரத்து கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது.

அந்த நஷ்டத்தை அரசுக்கு இழப்பு என்று கூறலாம். ஊழல் என்று கூறமுடியாது. அதே போல் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்துக்காக ஒரு கிலோ அரசியை 15 ரூபாய் 50 காசுக்கு வாங்கி அதை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

இதனால் ஏற்படும் இழப்புக்கு சம்பந்தப்பட்ட துறைக்கு அரசு மானியம் வழங்குகிறது. அந்த வகையில் 2006-2007-ம் ஆண்டில் ஆயிரத்து 784 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. 2007-2008-ம் ஆண்டில் ஆயிரத்து 762 கோடியும், 2008-2009-ம் ஆண்டு 2ஆயிரத்து 917 கோடியும் மானியமாக வழங்கப்பட்டது.

இதை ஊழல் என்று எப்படி கூறமுடியும்? .அதை போல் கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்காக தமிழக அரசு 650 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 48 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன. இது எப்படி ஊழல் ஆகும்? உயிர்களை காப்பாற்றுவது தவறா?   கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கும் 3 லட்சம் வீடுகள் கட்ட 2 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது ஊழலா? இதை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் சிந்தித்து பார்த்து தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். தேர்தல் நெருங்கி வந்து விட்டது. தேர்தல் கூட்டணி பற்றி கழக தலைவர் கலைஞர் முடிவு செய்து புது வியூகம் அமைத்து தர உள்ளார்.

அந்த வியூகத்தின் படி நாம் செயல்பட்டு மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி மலர இந்த நேரத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: