Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேலாண்மை கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி? –

சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது சவாலான விஷயமாக இருக்கிறது.

எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. மூலைக்கு ஒன்றாக முளைக்கும் பல தரமற்ற வணிகப் பள்ளிகளிடம் (பி-ஸ்கூல்) மாணவர்கள் ஏமாறு வதும்  அதிகரித்துள்ளது. எனவே நியாயமான செலவில், சிறப்பான எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள் வதற்கு,  நல்ல வணிகப் பள்ளியை  தேர்ந்தெடுப்பதற்கான  பல வழிமுறைகளை ஏற்கனவே வழங்கி யிருந்தாலும், மாணவர்களின் நலன்கருதி மேலும் பல ஆலோசனை களை வழங்குகிறோம்.

ஜி.டி/பி.ஐ. நிலைகளுக்கு தேர்வாதல்:

சில வணிகப் பள்ளிகள், ஜி.டி/பி.ஐ.(குரூப் டிஸ்கஷன்/பர்சனல் இண்டர் வியூ) தேர்வுகளுக்கு நீங்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறி, உங்களுக்கு அவற்றில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும். இதேபோன்று உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பெயர்பெற்ற நிறுவனமும், தன்னுடைய கிளை வளாகத்தை திறக்கும்போது அழைப்பு விடுக்கும். உங்களுக்கு அந்த கல்வி நிறுவனத்தின் நற்பெயரில் மதிப்பிருந்தால் அந்த தேர்வுகளில் கலந்து கொள்ளவும். அதேசமயம் ஜி.டி/பி.ஐ. தேர்வுகளில் 8/10 என்ற அளவில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சேர்க்கை அனுமதி பெற்றால், நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் அந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திற்கு போதிய மாணவர்கள் சேராத நிலையில், அந்த நிறுவனம் கிடைத்த மாணவர் களை முடிந்தளவிற்கு எடுத்துக் கொள்கிறது என்று அர்த்தம். எனவே அதுபோன்ற நிறுவனத்தை தவிர்க்கவும்.


நீண்ட மாணவர் சேர்க்கை செயல்முறைகள்:

சில வணிக கல்வி நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்திற்கு 6 மாதம் முன்பாகவே மாணவர் சேர்க்கை செயல்முறையை ஆரம்பித்துவிடும். மேலும் அந்த நிறுவனங்கள் சேர்க்கை காலம் முடிந்த பின்னரும் சில மாதங்களுக்கு மாணவர் சேர்க்கை செயல்பாடுகளை மேற்கொள்ளும். இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் நீங்கள் சேர்ந்தால், சரியான நேரத்தில் உங்களால் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ள முடியாமல் போவதோடு, தரநிலைகளை பொருட்படுத் தாமல், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பே உங்களுக்கும் கிடைக்கும். அதுபோன்ற படிப்புகளில் நீங்கள் தரத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே நீண்ட சேர்க்கை செயல்முறைகளை கொண்ட வணிகப் பள்ளிகளை நிராகரித்து விடவும்.

பலவித பட்டங்களை வழங்குதல்:

சில வணிகப் பள்ளிகள் பி.ஜி.டி.எம். மற்றும் அது சம்பந்தப்பட்ட பல படிப்புகளை வழங்கும். அந்த படிப்புகள் மாநில பல்கலையிடமிருந்து ஏ.ஐ.யு/யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற பட்டங்களை பெறும் என்றும் சொல்லப்படும். இதுபோன்ற நிலையானது இருபக்க கத்தி முனையில் மாட்டிக்கொண்டதை போலாகும். அதுபோன்ற கல்வி நிறுவனங்கள், தொலை தூர எம்.பி.ஏ. படிப்பைத்தான் வழங்குகிறோம் என்று உண்மையை பேசாத நிலையில், அக்கல்வி நிறுவனத்தில் நீங்கள் சேர்வது மிகுந்த சிக்கலான ஒன்றாகும். உங்களின் குழப்ப நிலையை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் இதுபோன்ற ஒரு கல்வி நிறுவனம் மீன்பிடிக்க நினைத்தால், அந்நிறுவனத்தில் சேர்வதை மறந்துவிடுதல் நல்லது.

என்.ஆர்.ஐ/நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்:

ஜி.டி/பி.ஐ. முடிந்த பிறகு சில வணிகப் பள்ளிகள் உங்களுக்கு என்.ஆர்.ஐ. மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் தருவதாக சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ள கூடாது. ஏனெனில் இதுபோன்ற ஒதுக்கீடுகளில் படிப்பு செலவானது 200% முதல் 300% வரை அதிகரிக்கும். அதுபோன்ற ஒதுக்கீடுகளில் உள்ள மாணவர்களுக்கு, அத்தகைய வணிகப் பள்ளிகளில் இடம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.

கேம்பஸ் இன்டர்வியூ நிலைகளை ஆய்தல்:

வணிகப் பள்ளிகள் வழங்கும் வேலை வாய்ப்பு முகாம் விவரப் பட்டியலிலுள்ள கம்பெனிகளின் பெயர்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். சில வணிகப் பள்ளிகள் ஏராளமான கம்பெனிகளின் பெயர்களை, அவை எப்போது அந்த பள்ளியின் வளாகத்திற்கு வந்தன என்ற ஆண்டு விவரத்தை கொடுக்காமல் குறிப்பிட்டிருக்கும். சில பள்ளிகளோ, ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பிரதிநிதி, சாதாரண காரணத்திற்காக அந்த பள்ளிக்கு வந்திருந்தால்கூட, அந்த கம்பெனியின் பெயரை வேலைவாய்ப்பு நிறுவன பட்டியலில் சேர்த்துவிடும். எனவே இது விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. ஒரு வணிகப் பள்ளி அளிக்கும் பட்டியல் மிக சிறியதாக இருந்தாலும்கூட, அப்பட்டியலில் இருக்கும் கம்பெனிகள் கடந்த வருடம் அப்பள்ளியின் வளாகத்திற்கு வந்து மாணவர்களை பணிக்கு எடுத்தன என்று உறுதியாக தெரிந்தால், அதுபோன்ற பள்ளிகளை படிக்க தேர்ந்தெடுப்பது நல்லது.

போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா?

சில வணிகப் பள்ளிகள் குறைவான ஆசிரியர்களை கொண்டிருந்தால், அந்த குறைபாட்டை மறைக்க, அந்த குறைந்த எண்ணிக்கையை பல வகைகளில் பிரித்து(கெஸ்ட், பெர்மனன்ட், விசிடிங்), பட்டியலில் குறிப்பிட்டிருக்கும். பல வணிகப் பள்ளிகள், தங்களின் வளாகத்தில் ஒரே ஒரு ஆசிரியரையே கொண்டுள்ளன. மேலும் பல புதிய வளாகங்களை திறந்திருக்கும் வணிகப் பள்ளிகள், ஆசிரியர்களின் விஷயத்தில் பெரியளவில் ஏமாற்ற முயலும். அனைத்து வளாகங்களுக்குமான ஆசிரியர்களை பட்டியலில் பொதுவாக குறிப்பிட்டிருக்கும். அந்த எண்ணிக்கையை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு வளாகத்திற்கும் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது நமக்கு தெரியவரும். எனவே நீங்கள் வணிகப் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது, ஆசிரியர் எண்ணிக்கை சம்பந்தமாக சீரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

கன்சல்டன்ட் சேவைகள்:

சில வணிகப் பள்ளிகள், தங்களிடம் மாணவர்களை சேர்க்கும் பொறுப்பை சில ஆலோசனை மையங்களிடம் கொடுத்திருக்கும். வேறு சில பள்ளிகள் தங்களின் வளாகத்திற்குள்ளேயே ஆலோசனை சேவை மையங்களை வைத்திருக்கும். ஆனாலும் பல வணிகப் பள்ளிகள் போதுமான மாணவர்களை சேர்க்க திணறுகின்றன. வெளியிலிருக்கும் ஆலோசனை மையங்கள், தாங்கள் சேர்த்துவிடும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணங்கள் பெறுகின்றன. இதுபோன்று வெறும் பணத்திற்காக மட்டும், தரத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படும் ஆலோசனை மையங்களின் மூலம் கிடைக்கும் எம்.பி.ஏ. படிப்பை முடிக்கும் மாணவர்கள் விற்பனை பிரதிநிதி என்ற நிலையில்தான் இருப்பர். விற்பனை பிரதிநிதி என்பது மட்டமான வேலை இல்லை என்றாலும், அந்த வேலைக்கு செல்ல, அதிகம் செலவழித்து எம்.பி.ஏ. படிக்க வேண்டியதில்லை.

பொது மற்றும் துறைசார்ந்த எம்.பி.ஏ:

எம்.பி.ஏ. படிப்பில் பல விஷயங்களை உள்ளடக்கிய பொது எம்.பி.ஏ. மற்றும் சில குறிப்பிட்ட துறைகளுக்காக(சில்லறை வணிகம், எச்.ஆர், சந்தைப்படுத்தல், விருந்தோம்பல், சுகாதாரம் போன்ற) மட்டுமே உள்ள துறைசார்ந்த எம்.பி.ஏ. போன்றவை உண்டு. மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் நீண்டகால ஆர்வமும், அதிலேயே நிலைத்திருக்கும் தன்மையும் கொண்டிருந்தால் மட்டுமே துறைசார்ந்த எம்.பி.ஏ. படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் பொது எம்.பி.ஏ. படிப்பை தேர்ந்தெடுப்பதே பல வகைகளில் நன்மை பயக்கும். ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு, பொது எம்.பி.ஏ. மாணவர்களை காட்டிலும் வேலைவாய்ப்பும், சம்பளமும் குறைவாகவே உள்ளது. எனவே பிரச்சினையில்லாத, நீடித்த வாழ்வை விரும்புபவர்கள் பொது எம்.பி.ஏ. படிப்பதே நல்லது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்தது  )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: