அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் ஏற்படுத்தப்ப ட்டதுதான் தொலைநிலை கல்வி இயக்ககம். |
இந்த முறையில் பல இளநிலை, முதுநிலை, இளநிலை டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்ட பல படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த தொலைதூர கல்வியின் மூலம் வயது வித்தியாசமின்றி பலரும் பயன் பெறுகின்றனர். நேரடியாக சென்று படிப்பதைவிட, குறைந்த செலவில் தொலைநிலை படிப்புகள் கிடைப்பதால், இதன்மூலம் ஒரு புதிய கல்வி புரட்சியே நாட்டில் ஏற்பட்டுள்ளது எனலாம். இந்த முறையில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதிலும் யோசித்து செயல்படுவதற்கு, நன்கு திட்டமிட்டு முடிவெடுப்பதற்கு, கவனத்துடன் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இல்லையெனில், பெரிய ஆசைகளுடனும், கனவுகளுடனும், காலம் மற்றும் பணத்தை செலவுசெய்து படிக்கும் தொலைநிலை பட்டப்படிப்பு வீணாகிவிடும். எனவே மாணவர்கள் ஏமாறாமல் நன்மையடையும் விதமாக, ஒரு தொலைநிலை கல்வியை மேற்கொள்வதற்கு முன்பாக ஆய்வுசெய்ய மற்றும் யோசிக்க வேண்டிய பல வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
* ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தின் மூலம் நீங்கள் படிக்கவிருக்கும் தொலைநிலை கல்வி பட்டமானது, இந்திய தொலைநிலை கல்வி கவுன்சிலால்(டி.இ.சி) அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். ஏனெனில் முறையான அங்கீகாரம் இல்லாமல் நீங்கள் படிக்கும் படிப்பானது, வேலை வாய்ப்பிற்கோ அல்லது உயர்கல்விக்கோ உதவாது. * நீங்கள் தொலைநிலை கல்வி முறையில் படிக்கும் பாடம், ஏற்கனவே ஏதேனும் பல்கலைக்கழகத்தாலோ அல்லது கல்வி நிறுவனத்தாலோ முழுநேர படிப்பாக நடத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ளவும். அப்படி நடத்தப்படின், அந்த முழுநேர பாடத்திட்டத்தையும், தொலைநிலை பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கவும். * நீங்கள் தொலைநிலை கல்வியில் படிக்க நினைக்கும் படிப்பானது, வேலை தரும் நிறுவனங்களால் வரவேற்கப்படுகிறதா என்பதை தெரிந்துவைத்துக் கொள்ளவும். ஏனெனில் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் மதிப்பை பெற்ற படிப்புகளை படித்தால்தான், பிற்காலத்தில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். * நீங்கள் படிக்க விரும்பும் படிப்பில் ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் அனுபவத்தை கேட்கவும். இது உங்களின் சொந்த திட்டத்தை வகுக்க உதவும். * குறிப்பிட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தில் நீங்கள் படிக்கவிருக்கும் பாடத்திட்டத்தின் பயிற்சி தன்மைகளை மதிப்பாய்வு செய்யவும். உயர்தரமான பயிற்சி திட்டங்கள் உங்களின் பிற்கால வேலைவாய்ப்பிற்கு உதவும். * ஒரு தொலைநிலை படிப்பில் சேரும் முன்னர், அதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி நீங்கள் சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். அந்த பாடத்தை படிக்க ஒரு நாளைக்கு மற்றும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதைப் பற்றிய கணக்கீடு இருக்க வேண்டும். கடினமான பாடங்களுக்குத்தான் அதிக மதிப்பிருக்கும் மற்றும் நிறைய வேலைவாய்ப்பு இருக்கும் போன்ற நினைப்புகள் தவறானவை. மேற்சொன்ன விஷயங்களை சரியாக யோசித்து திட்டமிடாமல், உங்களுக்கு கடினமாக இருக்கும் ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்தால், விரைவில் ஆர்வமிழந்து, பாதியிலேயே படிப்பை விட வேண்டியிருக்கும். * தொலைநிலை கல்வியில் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்கும் முன்னர், அந்த பாடத்திற்கு சம்பந்தப்பட்ட பல்கலை மற்றும் கல்வி நிறுவனத்திடமிருந்து பயிற்சி வகுப்புகள்(ஸ்டடி சென்டர்), தொடர்பு வகுப்புகள்(கான்டாக்ட் கிளாஸ்), ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாட உபகரணங்கள்(ஸ்டடி மெட்டீரியல்) போன்றவை மூலமாக கிடைக்கும் ஒத்துழைப்பை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் அந்த கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் நூலகம், ப்ராஜக்ட் பணிகள் போன்ற வசதிகளையும் தரக்கூடிய நிலையில் இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துவைத்தல் நல்லது. * சில பல்கலைக்கழகங்கள், சிலவிதமான தொலைநிலை படிப்புகளுக்கு, எத்தனை நாட்கள் கட்டாயம் பயிற்சி வகுப்புகள் மற்றும் தொடர்பு வகுப்புகளில் கலந்துகொண்டிருக்க வேண்டுமென்ற விதிமுறைகளை வைத்திருக்கும். அதுபோன்ற படிப்புகளை நீங்கள் மேற்கொள்ள நினைக்கும்போது, உங்களால் அந்த குறிப்பிட்ட நாட்கள் வருகைப் பதிவை தர முடியுமா என்பதை ஆய்வு செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை, பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க உங்களால் முடியாத சூழலில், அவற்றில் கலந்துகொண்ட இதர மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, வழங்கப்பட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுதல் நல்லது. * தொலைநிலை கல்வி மாணவர்களுக்கான தேர்வுகள் பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களால் தனியாக நடத்தப்படுகின்றன. அதற்கும், நேரடி கல்வி மாணவர்களுக்கான தேர்வுகளுக்கும் சம்பந்தமில்லை. தொலைநிலை கல்விக்கான தேர்வை, சில சமயங்களில் பல்கலைக்கழகம் நேரடியாக நடத்தலாம் அல்லது பயிற்சி மையங்களும் நடத்தலாம். ஆனால், பல்கலை அல்லது கல்வி நிறுவனம் நேரடியாக தேர்வை நடத்தக்கூடிய பாடங்களையே தொலைநிலை கல்வியில் எடுத்து படிப்பது நல்லது. ஏனெனில் அதற்கு மதிப்பு அதிகம். * &’பழைய மாணவர் நெட்வொர்க்&’ என்பது பல்கலை அமைப்பில் பிரதான முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். &’பழைய மாணவர் நெட்வொர்க்&’ என்பது, பாடத்திட்டங்கள், மாணவர் வேலைவாய்ப்பு, பல்கலை மற்றும் தொழிற்கூடங்களுக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துவது போன்ற பல முக்கிய அம்சங்களில் பங்காற்றுகிறது. ஒரு தொலைநிலை கல்வி மாணவருக்கு, நல்ல &’பழைய மாணவர் நெட்வொர்க்&’ பல வழிகளில் உதவி செய்கிறது. * நீங்கள் ஒரு தொலைநிலை பாடத்திட்டத்தில் மாணவராக சேரும்போது, அதற்கான கட்டணம் உங்களுக்கு கட்டுபடியாகக்கூடிய நிலையில் இருக்கிறதா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். படிப்பு முடியும் காலம் வரையிலும் செலவிட வேண்டிய மொத்த தொகையை தெரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவெடுத்தால், பொருளாதார ரீதியான சிக்கல்களை தவிர்க்க முடியும்.
( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ) |