Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல்வர் பதவியில் இருந்து கட்சிப் பணிக்கே திரும்புவேன்: கருணாநிதி

முதலமைச்சர் என்று சொல்லும்போது காட்டும் ஆர்வத்தை விட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்று சொல்லும்போது தொண்டர்கள் காட்டும் ஆர்வம் அதிகம் என்பதால், விரைவில் அந்த முடிவுக்கே நான் வருவேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பனின் மகன் டாக்டர் கோகுல கிருஷ்ணன் – பாரு பிரிய தர்ஷினி ஆகியோரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் இவ்வாறு கூறினார்.இந்த விழாவில் முதல்வர் ஆற்றிய உரை குறித்த அரசின் செய்திக் குறிப்பு:மத்திய உள்துறை அமைச்சர் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக் கொண்டார்.  ஆகவே, நான் இயல்பாக பெண் வீட்டுக்காரனாக என்னை ஆக்கிக் கொண்டு, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்தி – மணமக்களை வாழ்த்த வந்திருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தின் பெருமக்களையும், வாழ்வதற்கு வகை கண்டு நம்முடைய கடமையை ஆற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.பெரிய கருப்பன் அவர்கள் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று ஆற்றி வருகின்ற பணிகள் என்னையும் ஆன்மீகப் பெருமக்களையும் மகிழ்ச்சியிலே ஆழ்த்தக்கூடியவையாக இருக்கின்றன.  இவரை எப்படி நான் அறநிலையத் துறை அமைச்சராக ஆக்கினேன் என்று உள் துறை அமைச்சர் வியப்பு தெரிவித்தார்.  ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து, “இவர்தான் சரியான ஆள் –  அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு’’ என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன். அறநிலையத் துறையில் நல்லவர்கள் அமைச்சர்கள் ஆக வேண்டும். அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்.  மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும்.  ஆன்மீகத்திற்கும் அவர்கள் அன்பர்களாக இருக்க வேண்டும்.  அதே நேரத்தில் மனிதாபிமானத்திற்கும் அவர்கள் அரும்பணி ஆற்ற வேண்டும்.   அப்படிப்பட்டவர் யார் என்று பார்த்தால், அவர்  நம்முடைய பெரியகருப்பன்தான்.பெரியகருப்பனைப் பற்றி வைரமுத்து இங்கே சொன்னபோது, மீசையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்.  முகத்தில் உள்ள மீசை மாத்திரமல்ல, அகத்திலே உள்ள ஆசை எனக்குத் தெரியும்.  அவருடைய அகத்திலே உள்ள ஆசை, மீசையை விடப் பெரியது.  அந்த ஆசை என்னவென்றால், தமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும்; தமிழகத்தில் இன்னும் பல திட்டங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்; தமிழகத்திலே இந்த ஆட்சி தொடர்ந்து இருந்து மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டுமென்கின்ற அந்த ஆசை.  அதனால்தான் இங்கே அவருடைய பெயரைச் சொல்லும்போது, நீங்கள் காட்டிய ஆர்வம் –  அவரை “அமைச்சர்’’ என்று விளித்தபோது, காட்டப்பட்ட ஆர்வத்தைவிட – “மாவட்டச் செயலாளர்’’ என்று சொன்னபோது, அதிக ஆர்வத்தை நீங்கள் காட்டினீர்கள். எனக்குக் கூட அப்படியொரு ஆசை இருக்கிறது. “முதலமைச்சர்’’ என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா?  அல்லது “திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்’’ என்று சொல்லுகிற நேரத்திலே,  ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், –  “தலைவர்’’ என்று சொல்வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்து, “மணமக்கள் வாழ்க! வாழ்க!’’ என்று கூறி விடைபெறுகிறேன்.இவ்வாறு முதல்வர் பேசியதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply