தினமணியில் வெளிவந்த தலையங்கம்
மாற்றுக் கருத்துக்கும் மரியாதை அளிப்பது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப் படையே. மன்னராட்சியிலும், சர்வாதி கார ஆட்சியிலும், ராணுவ ஆட்சியிலும் போலல்லாமல் மக்க ளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவை யில் பெரும்பான்மை நம்பிக்கை பெற்ற ஒருவரைத் தேர்ந் தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் வழிமுறை. அப்படி அமையும் ஆட்சி, குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரின் ஆட்சி என்றுதான் அழைக்கப்படும். அதுதான் மரபு. கர்நாடக மாநிலத்தில் நடக்கும் அரசியல் கூத்துகள், நமது அரசியல் வாதிகள் எந்த அளவுக்குப் பதவிப் பித்துப் பிடித்து அலைகிறார்கள் என்பதையும், அரசியல் சட்ட அமைப்புகள் எப்படியெல்லாம் முறை கேடாகப் பயன் படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டு கின்றன. மக்களால் நல்லாட்சி தருவதற்காகத் தேர்ந் தெடுக்கப் பட்ட முதல்வர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார். நடுநிலைமை வகிக்க வேண்டிய ஆளுநர், தரம்கெட்ட அரசியல் செயல் பாடுகளில் கூச்சமே இல்லாமல் ஈடுபடுகிறார். ஆளுநர் பதவி பற்றி மூதறிஞர் ராஜாஜி கூறிய கருத்து ஒன்று உண்டு. “”ஆளுநர் என்பவர் தீயணைக்கும் வாகனம் போன்றவர். மிகப்பெரிய அரசியல் சிக்கல்கள் ஏற்படும் போதுதான் அவர் செயல்பட வேண்டுமே தவிர, அன்றாட நடவடிக் கைகளில் தலையிடக் கூடாது. எப்போதாவதுதானே செயல்படுகிறார் என்பதற்காக ஆளுநர் பதவியே வேண்டாம் என்று சொல்வது, எப்போதாவது தானே தீவிபத்து ஏற்படுகிறது என்பதற்காகத் தீயணைக்கும் படையே தேவையில்லை என்று சொல்வதுபோல அபத்த மானது!” எப்போதாவது செயல்பட வேண்டிய, அரசியல் சாசனச் சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டுமே செயல்பட வேண்டிய ஆளுநர்கள், காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், எதிர்க் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநில ங்களில் மட்டும் அன்றாட அரசியலில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்துவிட்டால், அந்த மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வமற்ற தலைமையகமாக ஆளுநர் மாளிகைகள் செயல்படுவது வழக்கமாகிவிட்டது. 1980-85-ல் அன்றைய கேரள முதல்வர் ஈ .கே. நாயனார், ஆளுநர் ராம் துல்ஹாரி சின்ஹா விடமும், 1985-90-ல் அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி . ராமராவ், ஆளுநர் குமுத்பென் ஜோஷியிடமும் பட்ட பாடுகளைப் பற்றிப் புத்தகமே எழுதலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஈ .கே. நாயனாரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்த என்.டி. ராமராவும் பட்ட அதே பாடுகளைத் தான் இப்போது பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இன்றைய கர்நாடக ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜிடம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ராம் துல்ஹாரி சின்ஹாவோ, குமுத்பென் ஜோஷியோ ஆளுநர் பரத்வாஜ் அளவுக்குத் தரம்தாழ்ந்து செயல்படவில்லை என்பதுதான் வித்தியாசம். முன்பே குறிப்பிட்டதுபோல, ஓர் அமைச்சரவை ஆளுநரின் இஷ்டப்படிதான் அமைகிறது. ஆளுநர் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் அமைச்சரவை அமைக்க அழைக்க லாம். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் அவையில் தனது பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் அவ்வளவே. அப்படி இருக்கும் போது, ஓர் ஆளுநர் தான் நியமித்த, அவையின் நம்பிக்கையைப் பெற்ற முதல்வரைத் “திருடன்’ என்று வர்ணிப் பாரேயானால், எந்த அளவுக்குக் கர்நாடக ஆளுநர் தரம் தாழ்ந்தி ருக்கிறார் என்பதைத்தானே அது காட்டுகிறது? ஆளுநர் ஹன்ஸ் ராஜ் பரத்வாஜின் செயல் பாடுகளைப் பார்க்கும்போது அவர் தனிப்பட்ட விரோதத்தால், முதல்வர் எடியூரப்பாவின்மீது காழ்ப்பு ணர்ச் சியுடன் செயல்படுகிறார் என்று தோன்றவில்லை. முன்னாள் சட்ட அமைச்சரும், தேர்ந்த வழக்குரை ஞருமான அவருக்கு அரசியல் சட்ட நிலைப்பாடு தெரியாதா, என்ன? காங்கிரஸ் மேலிடத்தின் முழு ஆதரவுடனும், வழிகாட்டுதலின் படிதான் ஆளுநர் பரத்வாஜ் செயல்படுகிறார் என்கிற பாஜக வினரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. காமன் வெல்த், ஆதர்ஷ் குடியிருப்பு, ஸ்பெக்ட்ரம், ஸ்விஸ் வங்கிக் கறுப்புப் பணம் என்று ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் ஊழல் விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, காங்கிரஸ் தலைமை மேற்கொண்டிருக்கும் யுக்திதான் கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் மூலமாக எடியூரப்பா அரசுக்குக் கொடுக்கப் படும் நெருக்கடி என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும். அதற்காக இந்த அளவுக்கு ஆளுநர் பதவி தரம் தாழ்த் தப்பட வேண்டுமா என்பதுதான் கேள்வி. முதல்வர் எடியூரப் பாவின் நில ஒதுக்கீட்டு முறைகேடு அப்பட்டமாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியையும், மத்திய ஆட்சியிலுள்ள ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியையும் ஊழலின் மொத்த உருவமாக வர்ணிக்கும் பாரதிய ஜனதாக் கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? குற்றம் சாட்டப்படும் முதல்வர் எடியூரப் பாவைப் பதவி விலகச்சொல்லி விசாரணையை எதிர்கொள்ளச் சொல் வது தானே நியாயம்? இல்லை, துணிந்து ஆட்சியைக் கலைத்து விட்டுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது தானே? முறை கேடுகளில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படும் ஒருவரை முதல்வராக வைத்துக்கொண்டிருக்கும் பாஜகவுக்குக் காங்கிரஸக் குறைகூற என்ன யோக்கியதை இருக்கிறது? காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாக் கட்சிக்கும் உண்மை யிலேயே ஜன நாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், ஆளுநர் பரத்வாஜும், முதல்வர் எடியூரப்பாவும் அவரவர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். இவர்கள் தொடர்வது கட்சிக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல, இந்திய ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல!