Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிராணாயாமம் இன்றியமையாததா? – ரமணர்

மனத்தை நேரே விசாரத்தாலோ பக்தியினாலோ வசமாக்க முடியாத வரே பிராணாயாமத்தை அனுஷ்டிக்க வேண்டிவரும். பார்க்கப் போனால், பிராணாயாமத்தின் மூன்று நிலைகளான ரேசகம் (சுவாச த்தை வெளி விடுதல்), பூரகம் (உள்வாங்குதல்) மற்றும் கும்பகம் (மூச்சை அடக்குதல்) என்பவற்றை முறையே தேகாத்ம புத்தியை (இவ்வுடலே நான் என்ற எண்ணத்தை) விடுதல், தன்னை உள்ளே தேடுதல், மற்றும் தானாய் நிற்றல் என்பதாகவே ஞானவழியே செல்வோர் சொல்வர்.

அவை மூன்றும் நாஹம், கோஹம், ஸோஹம் (நானல்ல, நான் யார், நானே அவன்) என்று சுருங்கக் கூறப்பெறும். இவை மூன்றிலும் ‘அஹம்’ (நான்) என்பதே தொடர்ந்து வருகிறது. அதனைப் பற்றி அதுவாகவே இருக்க வேண்டும் (தன்னைப் பற்றித் தானாகவே நிற்றல் வேண்டும்) என்பதே நேரடி சாதனையாகும். ஆகவே, அலையும் மனத்தை அமையுறச் செய்ய மூச்சுப் போக்குவரவைக் கவனித்தல் ஓர் உபாயமேயன்றி வேறல்ல.

மனம் அடங்குவதற்கு (ஆன்ம) விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்கள் இல்லை. மற்ற உபாயங்களினால் அடக்க முற்பட்டால், மனம் அடங்கினாற் போலிருந்து, மறுபடியும் கிளம்பிவிடும். பிராணாயாம த்தாலும் மனம் அடங்கும். ஆனால் பிராணன் அடங்கியிருக்கும் வரையில் மனமும் அடங்கியிருந்து, பிராணன் (மூச்சு) வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தால் (மனத்தில் பதிந்துள்ள எண்ணப் போக்குகளால்) அலையும்.

பிராணாயாமம் மனத்தைக் கட்டுப்படுத்த உதவு‌கிறது என்பதன் காரணமாக, அவ்வாறான சகாயமின்றி மன ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த இயலாதவர்களுக்கு மட்டுமே அது சிபாரிசு செய்யப்ப டுகிறது. மனத்தை அடக்கி ஒருமுகப்படுத்தக் கூடியர்க ளுக்கோ பிராணாயாமம் அவசியம் இல்லை. வேண்டுமானால், ஆரம்ப நிலையில் அதைப் பயன்படுத்தி, மனத்தை அடக்குவது கை கூடியவுடன் பிராணாயாம அப்பியாசத்தை விட்டுவிடத்தான் வேண்டும்.

பிராணாயாமமும் உதவிகரமானதே. மன ஏகாக்கிரத்திற்கு (மனம் ஒருமுனைப்படுவதற்கு) உதவும் மார்க்கங்களில் அதுவும் ஒன்று. அலைபாயும் மனத்தை இழுத்து அடக்குவதற்கு அதைப் பயன் படுத்தலாம் தான். ஆனால், எவரும் அத்தோடு நின்று விடுவதற் கில்லை. பிராணாயாமம் மூலம் மனம் அடக்கம் எய்த நிலையில் கிடைக்கப்பெறும் அனுபவங்கள் எதிலும் லயித்துவிடாமல், ‘நான் யார்?’ எனும் ஆன்மார்த்தக் கேள்வியால் மனத்தை கவசமிட்டு, ஆன்மாவில் மனம் இரண்டறக் கலக்கும் வரையில் அகமுக நாட்டத்தைத் தொடர வேண்டும்.

(((((இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: