மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று
விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் “விசிடி”கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன. சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர்.
சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது.
அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் “கீ ஸ்டோன்” என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக சாப்ளின் நடித்தார். படத்தின் பெயர் “மேக்கிங் எ லிவிங்”. அதில் அவர் வில்லனாக நடித்தார். அப்படம் வெற்றி பெறவில்லை. “கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்” என்பது அவரு டைய இரண்டாவது படம்.
அதில்தான் அவர் காமெடி வேடத்தில் நடித்தார். தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி _ இத்தகைய “மேக்கப்”புடன் தோன்றி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். பின்னர் இத்தகைய வேடமே அவருக்கு “டிரேட் மார்க்” ஆகியது.
வரிசையாக சார்லியின் வெற்றிப் படங்கள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். எல்லாமே வெற்றிப் படங்கள்தான். தி கிரேட் டிக்டேட்டர் (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படத்தில் ஹிட்லர் வேடத்தில் நடித்தார். 1916_ம் ஆண்டில், வாரம் 10 ஆயிரம் டாலர் சம்பளத்தில் ஒரு படக்கம்பெனியில் சேர்ந்தார்.
படங்களுக்கு கதை, வசனம் எழுதி நடித்தார். பல படங்களை டைரக்ட் செய்தார். உலகப் புகழ் பெற்றார். 1919_ம் ஆண்டில் “யுனைட்டெட் ஆர் டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தை, வேறு சிலருடன் சேர்ந்து கூட்டாகத் தொடங்கினார். படங்களைத் தயாரித்ததுடன், படங்களை விநியோகம் செய்வதிலும் இந்தக் கம்பெனி ஈடுபட்டது.
1931_ல் அவர் நடித்த “சிட்டிலைட்ஸ்” என்ற படம் மிகப் புகழ் பெற்றது. மவுனப் படயுகம் முடிவடைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கி யிருந்த காலகட்டத்தில் 1936_ம் ஆண்டு “மாடர்ன் டைம்ஸ்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சார்லி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.
அப்படமும் மகத்தான வெற்றி பெற்றது. 1940_ம் ஆண்டு சாப்ளின் தயாரித்த “தி கிரேட் டிக்டேட்டர்” சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஹிட்லர் வேடத்தில் சாப்ளின் பிரமாதமாக நடித்தார். அவர் பேசி நடித்த முதல் படம் இது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1952_ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார். சாப்ளின் தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார். செலவைப்பற்றி கவலைப்பட மாட்டார். “தி கிட்” படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி படம் எடுத்தார்.
அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது. எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. முதல் மனைவி மாக்மர்ரே, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்ததுடன் 10 லட்சம் டாலர் ஜீவனாம்சம் பெற்றார். அடுத்து நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன.
பிறகு, “ஓனா_ஓ_நீல்” என்ற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இந்தப் பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இந்த மனைவிதான் சார்லியின் இறுதிக்காலம் வரை அவருடன் வாழ்ந்தவர். சார்லி வெறும் நடிகர் அல்ல. மனித குலத்திற்கு வழிகாட்டிய மேதை.
அதனால்தான், “திரை உலகின் ஒரே மேதை சார்லி சாப்ளின்” என்று பெர்னாட்ஷா பாராட்டினார். இங்கிலாந்து அரசாங்கம் சார்லி சாப்ளினுக்கு “சர்” பட்டம் கொடுத்துக் கவுரவித்தது. 1928, 1972 ஆகிய ஆண்டுகளில் “ஆஸ்கார்” விசேஷப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
1977 டிசம்பர் 25_ந்தேதி சாப்ளின் மறைந்து விட்டாலும், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))