பிப்ரவரி (இந்த) மாத உரத்த சிந்தனை மாத இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
இந்தியா ஓர் ஏழை நாடு… ஆனால் இந்தியர்கள் பணக்காரர்கள் – இது 25 ஆண்டுகளுக்கு முன்பே உரத்த சிந்தனை மேடைகளில் விவாதிக்கப்பட்ட தலைப்புக்கான வைர வரிகள்.
ஏழை இன்னும் ஏழையாகவே இருப்பதற்கும் பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவதற்கும் எது காரணம்?
தனி மனித வாழ்க்கைத் தரம் உயர்ந்த அளவுக்கு நாட்டின் பொருளாதார பலம் உயராமல் இருப்பதற்கு யார் காரணம்?
இருப்பவனிடம் கேட்டுப்பெற்று, இல்லாதவனுக்குக் கொடு என்கி றது உலக நீதி. ஆனால் இல்லாதவனை அடித்து, மிரட்டி, சுரண்டி, பிடுங்கி இருப்பவன் மேலும் மேலும் கொழுப்பது உலக மகா அநீதி. இந்த அநீதி இந்தியாவில் அதிகரிக்க என்ன காரணம்?
சுருக்கமான பதில் கறுப்புப் பணச் சந்தை என்பதுதான்.
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியப் பண முதலைகள் திருட்டுத் தனமாய் சேர்த்துள்ள தொகையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், இந்தியா தன்மீதுள்ள கடன்களையெல்லாம் செலுத் தியது போக, உலக நாடுகள் அனைத்திற்குமே கடன் தர முடியும்.
இந்த வங்கிகளில் இப்படி முதலீடு செய்த வேறு சில நாடுகள் இந்த வங்கிகளிடமிருந்து பட்டியலைப் பெற்று, பணத்தை மீட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு, தண்டனையும் வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இது முடியவில்லை. சக்திவாய்ந்த மத்திய அரசோ சலனமேயில்லாமல் (சுரனையில்லாமல்) இருக்கிறது. உலகமே ஒப்புக்கொண்ட பொருளாதார மேதையான நம் பிரத மரோ இந்தப் பட்டியலை வெளியிடவே முடியாது என்று அடம் பிடிக்கிறார்.
வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலோ அவர்கள் எப்படி பணம் சேர்த்தார்கள் என்ற விவரமோ… அவர்கள் மீது நடவடிக்கையோ எதுவுமே இப்போது வேண்டாம்.
எடுத்த இடத்தில் ஓசைப்படாமல் வை என்பார்களே, அதுபோல எப்படிச் சத்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் நம் இந்தியரின் பணம் அங்கு சென்றதோ… அப்படியேச் சத்தமின்றி யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து சேர வேண்டும்.
காரணம்…. வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக்கொண்டிருக்கும் பணம் … இந்திய தேசத்தின் வறுமைக் கோட்டை தன் அடிவயி ற்றில் தாங்கியவர்கனின் வரிப்பணம். உதிரம் சிந்தி உழைத்த வனின் உயிர்த்துடிப்பு.
இந்தப் பணத்தை மீட்பது மட்டுமே நம் அப்பாவி மக்களுக்கு, அடப்பாவி அரசாங்கம் செலுத்துகின்ற நன்றிக்கடன்.