Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (27/02)

அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 20 வயது பெண்; எம்.ஏ., தமிழ் படிக்கிறேன். எனக்கு, கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். பெண் எழுத் தாளர்கள் எழுதிய புத்தக ங்களாய் தேடிப் பிடித்து படிப்பேன். என் தாயை, இரண்டாம் தாரமாக திரு மணம் செய்து கொண்டார் என் தந்தை. எனக்கு இர ண்டு அக்கா. ஒருத்தி, எகனாமிக்ஸ் பி.எச்டி., படிக்கிறாள்; இன்னொருத்தி, எம்.எஸ்சி., நர்சிங் படிக்கிறாள். ஒரு தங்கை, பி.ஏ., படிக்கிறாள். இரு தம்பிகளில் மூத்தவன், போலியோவால் பாதிக்கப்பட்டவன்; எலக்ட்ரிகல் டிப்ளமோ படிக்கிறான். இன்னொரு தம்பி, பிளஸ் 2 பெயிலாகி, பெயிலாகி படிக்கிறான். அப்பாவின் முதல் தாரம், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்; எங்களுடன் தான் இருக்கிறார். மூத்த தார பிள்ளைகள், தனியாக செட்டிலாகி விட்டனர். அப்பாவுக்கு, 79 வயது; “ஸ்வீட் ஸ்டால்’ வைத்திருக்கிறார். அவருக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உண்டு. அம்மாவுக்கு, வயது 54; தைராய்டு பிரச்னை உள்ளது. என் குடும்பப் பின்னணியை, எனக்கு சொல்ல தெரிந்த அளவுக்கு சொல்லி விட்டேன். கடந்த மூன்று வருடங்களாக, நான் கனவு காணாத நாளே இல்லை. கனவுகள் என்றால், சாதா கனவுகளோ, காதல் கனவுகளோ இல்லை. எல்லாம் திகிலான, பயங்கரமான, ரத்தம் சொட்டும் கனவுகள். எல்லா கனவுகளிலும், என் குடும்ப அங்கத்தினர்களும் ஆஜராகி விடுவர். எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்களை என்னால் காப்பாற்ற முடியாது. நான், அப்பா, கடைசி தம்பி தவிர, மற்ற எல்லாரும் இறந்து விடுவர். நான் கனவு காணும் நேரம், பெரும்பாலும் அதிகாலை மூன்று மணியாக இருக்கும். தூக்க மாத்திரை சாப்பிட்டாலும், கனவு வர மறப்பதில்லை. நான் கண்ட கனவை, என் குடும்பத்தினரிடம் கூறி, கதறி அழுவேன். “நீ மோசமான கனவுகள் கண்டாலும், எல் லாக் கனவுகளிலும், நீ உன் உயிரைக் குடுத்து, எங்களை மீட்க முயற்சிக்கிறாய்; எங்களுக்கு பெருமையாக இருக்கு…’ என்பர். துர்கனவுகள் எனக்கு வராமலிருக்க, வீட்டை வாஸ்து சாஸ்திரப் படி மாற்றி அமைத்தார் அப்பா. பில்லி, சூன்யம் வைத்து விட்டனரா என குறி பார்த்து, பூஜை, பரிகாரங்கள் எல்லாம் கூட செய்யப் பட்டன. கதை புத்தகங்கள் படிப்பதை நிறுத்தினேன். தலையணைக்கு அடியில், கந்தசஷ்டி கவசம் வைத்து படுத்தும் பயனில்லை. இந்த விஷயம், என்னுடன் படிக்கும் சக மாணவி யருக்கு தெரிந்து, என்னை பரிகாசம் செய்கின்றனர். விடியற் காலை, மூன்று மணிக்கு கனவு கண்டு எழுந்து விட்டால், அதன் பின் தூக்கம் வராது; கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு இருப் பேன். அதனால், கண்களைச் சுற்றி கருவளையம் பூத்து விட்டது.
கனவுகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அம்மா? நான் காணும் கனவுகள், எனக்கு எதை உணர்த்த முயற்சிக்கின்றன? கனவு களே காணாது தூங்க, மருத்துவம் ஏதாவது இருக்கிறதா? எனக்கு, யாராவது செய்வினை செய்து விட்டனரா? உங்கள் பதில், என்னை நிம்மதி படுத்த வேண்டும்.
— இப்படிக்கு,
கனவுகளுடன் மல்லாடும் மகள்.

அன்புள்ள மகளுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. கனவுகள் உன்னை வேட்டையாடி வரு கின்றன என எழுதியிருந்தாய். இதற்கெல்லாம் சூத்திரதாரி யார் என்பது எனக்கு தெரியும். பட்டென்று போட்டு உடைத்து விடவா? த்ரீ… டூ… ஒன்… ஜீரோ… அந்த சூத்திரதாரி சாட்சாத் நீயே தான். எதிர்காலத்தை நினைத்து சதா பயப்படும் பாதுகாப்பு உணராத பொறாமைக்கார உன் ஆழ்மனம் தான் வில்லன். அது தான், ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் காம்ரூன் பிரமாண்டத்தில், திகில் கனவுகளை உற்பத்தி செய்து, மனக்கண்ணில் போட்டு காட்டு கிறது. “என்னடா இது… கடிதம் எழுதின நம்மையே சகுந்தலா குற்றஞ்சாட்டுகிறாளே…’ என, கவலைப்படாதே! உன் ஆழ்மனம் செயல்படுவதை, நீ வெளிப்படையாய் உணர மாட்டாய். கனவு கள் கண்களின் சுவாசம். பிறந்த குழந்தைகள் கூட, கனவு காண் கின்றன. கனவு காண்பதை நிறுத்த, எந்த மருத்துவத்தாலும் முடியாது. கனவுகளே இல்லாதிருந்தால், மனிதன் ஆதிவாசி யாகவே இருந்திருப்பான். கனவுகள் மெய் ஞானத்தின், விஞ்ஞா னத்தின் கச்சாப் பொருள். உன் ஆழ்மனம் இப்படிப்பட்ட கனவு களை ஏன் உற்பத்தி செய்கிறது என்பதை பார்ப்போம்… இன்னும் அதிகபட்சம் நான்கைந்து ஆண்டுகளே உயிர் வாழப் போகும் அப்பா. அந்த அப்பாவின் சம்பாத்தியத்தை நம்பித்தான் உன் முழு குடும்பமும் இருக்கிறது. மனநோயாளி பெரியம்மா; தைராய்டு அம்மா. கல்யாணமாகாத இரு அக்கா. உனக்கு பின்னால் காத்தி ருக்கும் தங்கை. போலியோ தம்பி. பிளஸ் டூ தேர்டு இயர் தம்பி. உனக்கு குடும்ப அங்கத்தினரால் என்ன பிரச்னை? உன் பணி, திரு மணம் சார்ந்த எதிர்காலத்துக்கு முன்னும், பின்னும் தடை கற்களாக இருக்கும் இரு அக்காக்களும், ஒரு தங்கையும் உன் வழியிலிருந்து, “எலிமினேட்’ ஆக வேண்டும். மனநோயாளி பெரியம் மாவும், தைராய்டு அம்மாவும் தடைகற்களாக இல்லா விட்டாலும், அவர்கள் தேவையற்ற, “எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள்!’ அவர்களும், உன் போலியோ தம்பியும் “எலிமினேட்’ ஆக வே ண்டும். உன்னையும் சேர்த்து மொத்தம் ஒன்பது குடும்ப அங்கத்தினர். சம்பாதித்து போடவும், உனக்கு திருமணம் செய்து வைக்கவும், அப்பா தேவை. எந்த வழியிலும், உனக்கு தடைக் கல்லாய் அவர் இல்லை. தவிர, கடைக்குட்டி தம்பி செல்லம்; அவன் தேவை. ஆகவே, உன் கனவுகளில், ஆறு அங்கத்தினர் மட்டும் கொல்லப்படுகின்றனர்; உன்னோடு, அப்பா மற்றும் கடைசி தம்பி உயிர் தப்பிக்கின்றனர். உனக்கு சுமையாய், தடைக் கற்களாய், தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் இருக்கும் ஆறு பேரையும், யாராவது கடத்தி போய், அலாஸ்காவில் விட்டால் கூட போதும் உனக்கு. உன் ஆழ்மனம் தான் அவசரப்பட்டு கனவுகளில் வன்கொலை புரிகிறது. நீ காணும் கனவுகள் ஒரு வகை, “எஸ்கேப்பிசம்’ அல்லது 30 நொடி தீர்வு அல்லது யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பேன்டசி. உன் கனவுகளில், நீ குடும்ப அங்கத்தினரை காப்பாற்ற முயற்சிப்பது… உன் ஆழ்மனம் முயற்சிக்கும் பாவ்லா. மூன்று சீட்டு ஆசாமிகள் செய்யும் கண்கட்டு வித்தை. கெட்ட எண்ணங்களுக்கு ஆழ்மனம் போடும் முகமூடி. செய்வினை, 99.9 சதவீதம் கற்பனை. மந்திரி த்தல், தாயத்து கட்டுதல், கிரிமினல் வேஸ்ட். இனி, கெட்ட கனவு கள் உனக்கு வராமலிருக்க, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நம் குடும்பச்சூழல் இறைவனாலும், நம் பிறவிப் பயனாலும் அமைவது. உன்னை விட அவலமான சூழலில் உள்ள எவ்வ ளவோ பேர், நெகடிவ் எண்ணங்களுக்குள் சிக்காது, போராடி, வாழ்க்கையில் ஜெயிக்கின்றனர். எந்த குடும்ப அங்கத்தினரை உன் ஆழ்மனம் குரூரமாக பார்க்கிறதோ, அந்த உறுப்பினர் களுடன் நெருங்கி பழகு. அவர்களின் உள்மனங்களை டிகோடிங் செய். மனநோயாளி பெரியம்மா, போலியோ தம்பி வாழ்க்கை யிலும் சில அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இரு அக்காக்களுடன் கலந்து பேசி, அவர்களின் திருமணங்களை முன் தேதி பண்ணு. உனக்கு வயது 20. அடுத்த ஐந்து வருடங்களில், நீ நல்ல பணி செல்லவும், தக்கத் துணை பெறவும் திட்டமிடு. இரவு, தனி மையில் தூங்காது, ஒரு தடவை பெரியம்மாவுடன், ஒரு தடவை அம்மாவுடன், ஒரு தடவை அக்காக்களுடன், ஒரு தடவை தம்பி, தங்கையுடன் தூங்கு. தினம் காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று, “நான் என் குடும்ப அங்கத்தினரை மெய்யாலுமே நேசிக்கிறேன். அவர்கள், எனக்கு தடைகற்கள் அல்ல. என் விருப் பத்துக்கும், பாசத்துக்கும் எதிரான கனவுகளை நான் அடியோடு வெறுக்கிறேன். இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும், மனுஷிக் குமான சந்தோஷங்களை, வாய்ப்புகளை, வெற்றிகளை ஓரவ ஞ்சனை இல்லாது வழங்கி இருக்கிறான். அப்படி இறைவன் தந்திருந்தால் மகிழ்ச்சி. தராவிட்டால், ஏதாவது ஒரு காரணத்துக்காக தர மறுக்கிறான் என உணர்வேனாக!’ என சுய வசியம் செய். தீய கனவுகளிலிருந்து நீ விடுதலை பெற, எல்லாம் வல்ல பரம் பொருளை இறைஞ்சுகிறேன்.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 

Leave a Reply