ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவியும் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருகிறார்கள்.
கால், கைகள் கழுவுவதற்காக ஒரு செப்புக் கலயத்தில் தண்ணீரோடு வந்த நான், அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கி றேன்.
“ஆமாம் சுவாமி நான்தான் அது… என்ன வேண்டும்,” என்கிறேன்.
“எங்களுக்கு ஒன்றும் வேண்டாமப்பா, எங் கள் குழந்தையைக் காப்பாற்று” என்கிறார் கள்.
அப்படிச் சொன்னார்களே தவிர, அவர்கள் கைகளிலே குழந்தை இல்லை.
“எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே குழந்தை?” என்கிறேன்.
“திருவொற்றியூரில் இருந்து வருகிறோம். குழந்தை திருவிடை மருதூரில் இருக்கிறது!” என்கிறார்கள்.
`என்ன இது! ஒன்றுக்கொன்று சம்பந்தமி ல்லாமல்? திருவொற்றி யூர் எங்கே? திரு விடைமருதூர் எங்கே?’ என்று நான் சிந்தி த்துக் கொண்டிருக்கும் போது…
“இந்தா! இந்தச் சேலையால் தொட்டில் கட்டு” என்று கூறி ஒரு பழைய சேலை யைக் கொடுக்கிறார்கள்.
அந்தச் சேலையை நான் பிரித்து பார்க் கிறேன். அதில் சிதம்பரம் நடராஜன் கோ யில் நந்தி உருவம் இருக்கிறது. அதைப் பார்த்து விட்டு அவர்களைப் பார்த்தால், அங்கே அவர்கள் இல்லை.
அங்கேயும், ஒரு நந்தி இருப்பது போல தெரிகிறது.
என்ன இது! கூத்தன் கூத்தா டுகிறானோ?
“ஐயா… ஐயா!” நான் கத்துகி றேன்.
“என்ன ஐயா?” என்று சிவகலை விழித்துக்கொள்கிறாள்.
நான் சுற்றுமுற்றும் பார்க்கி றேன். பிறகு நடந்ததை அவளிடம் சொல் கிறேன். பிறகு, ஏதோ இது சிவ சோதனை என்று ஆறுதல டைகிறோம்.
மறுநாள் எனக்கு நிம்மதி இல்லை.
திருவொற்றியூரில் தொடங்கி, திருவிடைமருதூர் வரை யாத்திரை போகும்படி பரமன் பணிக்கின்றானோ என ஐயமுற்றேன்.
தாயிடம் இதைக் கூறினேன்.
“ஒற்றியூரானுக்குச் சாத்துவதற்கு ஒரு வைர மாலையும், வழி நெடுக உள்ள கோயி ல்களுக்குப் புலிக்காசு மாலைகளும் வாங் கிக் கொண்டு, மனைவியையும் அழைத்துக் கொண்டு போய்வா மக னே!” என்றார்கள்.
சிவகலை மகிழ்ந்தாள். திருத்தல விஜயம் என்றாலே எனக்கும் மகிழ்ச்சிதான்; நானும் மகிழ்ந்தேன்.
நாங்கள் இருவரும் தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு புறப்படும் போது, எதிரிலே வந்த தமக்கை ஒரு `நல்ல சொல்’ சொன்னாள்:
“இவ்வளவு நாளாகப் பிறக்காத குழந்தை, திருவொற்றியூர் சென்றா பிறக்கப்போகிறது?” என்பதே அது.
அவளுக்கு மூன்று குழந்தைகள். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றால், எங்கள் சொத்தெல்லாம் `தன் குழந்தைகளுக்குத்தான்!’ என்று அவள் நினைத்தாள்.
நினைக்கட்டும்; பேசட்டும்; கூடப்பிறந்த ரத்தம்; குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
நாங்கள் புறப்பட்டோம்.
ரதம் போய்க்கொண்டே இருந்தது.
திடீரென்று சிவகலையின் முகம் வியர்ப் பானேன்?
நல்ல காற்றோட்டத்தில் வியர்ப்பானேன்.
நான் முகத்தைத் துடைத்து விட்டேன்.
“ஏதோ மயக்கம்” என்றாள் அவள்.
திடீரென்று அவள் மார்பகம் நனைந்தது.
ரதத்தை நிறுத்தினேன்.
காரணமில்லாமல் அவள் அழுதாள். கண்ணீரைத் துடைத்தேன். அப்போதும் அதே குழந்தை கத்தும் சத்தம்!
இதுவும் பிரமைதானா?
ரதத்தின் திரைச்சீலையை வில க்கிக் கொண்டு வெளியில் எட் டிப்பார்த்தேன்.
சாலை ஓரத்தில் ஓர் ஆலமரம்; அருகிலே ஒரு தொட்டில்; அத ன் பக்கத்தில் ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவி யும்; அவர்கள் முன்னாலே யா ராவது காசு போடுவார்கள் என்று விரிக் கப்பட்ட துணி.
அவர்களை உற்றுப் பார்த்தேன். கனவிலே வந்த அவர்களே தான்!
சிவகலையை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்று, “ஐயா, நீங்கள் யார்?” என்றேன்.
“நாங்கள் திருவிடைமருதூர்” என் றார் அவர்.
எனக்கு மெய்சிலிர்த்தது.
தொட்டிலைப் பார்த்தேன். அதே சேலை, அதே நந்தி ஓவியம்!
நான் அவர் காலில் விழுந்து வண ங்கினேன். அவர் என்னைக் கைத் தாங்கலாக எடுத்தார்.
“குழந்தை….” என்று இழுத்தேன்.
“எங்களுடையதுதான், நீண்ட காலம் கழித்துப் பிறந்தது. வயிற்றுச் சோற்றுக்கே வழி இல்லை. இதை எப்படிக் காப்பாற்றப் போகி றோம்? யாரோ பட்டினத்துச் செட்டியாம். அவனிடம் இதைக் கொடு த்தால் எடைக்கு எடை பொன் கிடைக்கும் என்று யாரோ கனவிலே சொன்னார்கள். நடந்தே வந்தோம்; பசி தாங்க வில்லை. யாசகத் துக்காகத் துண்டைக் கீழே விரித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்து விட்டோம்!” என்றார் அவர்.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. எனக்கு அதைத் துடைக்க வேண்டும் போல் தோன்றிற்று. துடைத்தேன். என்ன அதிசயமோ, குழந்தை சிரிக்கிற சத்தம் கேட்டது.
பெரியவரையும் அவர் மனைவியையும் அழை த்துக் கொண்டு புகாருக்குத் திரும்பினேன்.
அது இறைவன் அனுப்பிய குழந்தை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
தத்து எடுக்கும் விழாவைப் பிரமாதமாக ஏற்பாடு செய்தோம்.
“வேறு ஜாதி குழந்தையை தத்து எடுப்பது செல்லாது” என்று தம க்கை வாதாடினாள்.
“தமக்கே வேண்டும்” என்றுதானே `தமக்கை’ நினைப்பாள்! தங்கையா க இருந்தால், `தன் கை யில் உள்ளது போதும்’ என்று நினைப் பாள்.
இதை வேடிக்கையாகச் சொல்கிறேன், சாத்திர மன்று!
எங்கள் பங்காளிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், வேறு ஜாதிப் பிள்ளை என்பதில் எல்லோருக்கும் குறை இருந்தது.
துலாபாரம் நடத்தினோம்.
குழந்தை தன் எடையை விட அதிகமாகப் பொன்னை இழுத்தது. கடைசியில் திருவிடைமருதூர் கோயிலுக்காகச் செய்த காசு மா லையை அதில் போட்டோம். துலாம் சரியாயிற்று.
விழா முடிந்தது.
விடைமருதூரார் விடைபெற்றார்.
பையனுக்கு `மருதவாணன்’ என்று பெயரிட்டு வளர்த்தோம்.
தான் பெற்ற பிள்ளை போலவே சிவகலைக்கு அவன் தோன்றினான்; எனக்கும் அப்படியே.
பருவம் வந்தது; பையனைப் பள்ளிக்கு அனுப்பினோம்.
அப்பனுக்கு ஏற்றபடி பிள்ளையும் தப்பாமல் இருந்தான். அவனும் படிக்க மறுத்தான்.
`ஆண்டவனே! நீ நேரடியாகக் கொடுத்த பிள்ளையும் இப்படியா?’ என்று அவனை நொந்து கொண்டேன்.
பள்ளிக்கூடத்தில் குரு எல்லோரையும் கேள்வி கேட்டால், இவன் குருவைக் கேள்வி கேட்பானாம்!
`ஏண்டா ஒழுங்காகப் படிக்கவில்லை?’ என்று ஒரு நாள் அவனைக் கேட்டேன்.
`நீங்கள் படித்தால்தானே, நான் படிக்க’ என்றான் அவன்.
அப்போது நான் பாடினேன்:
துள்ளித் திரியும் பருவத்திலே என் துடுக் கடக்கி, பள்ளிக்கு அனுப்பிலனே என் தந்தை யாகிய பாதகனே! …. என்று.
எங்கள் பரம்பரைக்கே கல்வி பாக்கியம் இல்லை என்று நான் முடிவு கட்டினேன்.
சொத்துக்களையாவது பையன் காப்பாற்றட்டும் என்று கருதினேன். ஒரு நாள் கடைக்குக் கூட்டிக் கொண்டு போனேன்.
அங்கே அவன் ஒரு மாணிக்கத்தை எடுத்து, `அப்பச்சி, இதை நெருப்பிலே போட்டால் என்னவாகும்?’ என்று கேட்டான்.
`சாம்பலாகும்’ என்றேன்.
`காய்ந்த எரு முட்டையை நெருப்பிலே போட்டால்’ என்றான்.
“அதுவும் சாம்பலாகும்” என்றேன்.
கணக்கு எழுதச் சொன்னேன்.
“முப்பதிலே நாற்பது போனால் எவ் வளவு?” என்று என்னையே கேட் டான்.
“நாற்பது எப்படியடா போகும்?” என்றேன்.
“போகும்” என்றான்.
“போனால் என்ன வரும் தெரியுமா?”
“என்ன வரும்?” என்றான்
நான் பேசாமல் இருந்து விட் டேன்.
இந்தப் பிள்ளை தேறாது என்று முடிவு கட்டினேன். சொத்துக்க ளைப் பத்திரப்படுத்தத் தொட ங்கினேன்.
“பையனைக் கடல்கடந்து அனு ப்பினால், வாணிபத்தில் புத்தி வரும். சொத்துக்களைக் காப் பாற்றும் ஆசை வரும்” என்று என் ஆத்தாள் சொன்னார்கள்.
என்னுடைய தனிக்கப்பலில் அவனைக் கடாரத்துக்கு அனுப்ப ஏற் பாடு செய்தேன். அவனுக்கு அதிலே மிகவும் மகிழ்ச்சி.
“அப்பச்சி, கடாரத்திலே இதுவரை நீங்கள் கொள்முதல் செய்யாத பொருளெல்லாம் நான் கொள்முதல் செய்வேன்!” என்று சூளுரை த்தான்.
“மகனே, அதைத்தானடா உன் னிடம் எதிர்பார்க்கிறேன்” என் று தட் டிக் கொடுத்தேன்.
கப்பலில் அவனை ஏற்றிய போது அவன் பேசிய பேச்சு க்கள், வயது வந்த செட்டிப் பிள்ளையின் அனுபவ ஞான மே அவனுக்கு இருப்பதாகக் காட்டின.
“அப்பத்தாளைக் கவனித்துக் கொள்ளுங்கள் அப்பச்சி!” என்றான். “ஆத்தாள் மோர் ஊற்றிக் கொள்ளக் கூடாது!” என்றான்.
அப்பப்பா! கடல் கடந்து போகிறோம் என்றவுடன் அவனுக்கு வந்த பாசமும், பரிவும், என்னையே திகைக்க வைத்தது.
எண்பத்தியாறு நாட்களுக்குப் பிறகு என் மகனை என் கப்பல் சுமந்து வந்தது.
சுட்டிப் பிள்ளையாகப் போன அவன், இப்போது சிவபக்தனாகத் திரும்பி இருந்தான்.
கப்பலில் நான் வைத்திருந்த திரு நீற்றையெல்லாம் அவன் நெற்றி தான் தாங்கிக் கொண்டிருந்தது!
கப்பலில் இருந்து ஒரு சிறு கைப் பெட்டியோடு இறங்கி வந்த அவ ன், “அப்பச்சி! பணியாட்களை விட்டு செல்வங்களை எல்லாம் இற க்கச் சொல்லுங்கள்; நான் அப்பத்தாளைப் பார்க்கப் போகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அவன் போனதும், நானே முன்னின்று அனைத்தையும் இறக்கச் சொன்னேன்.
அன்று பெட்டி பெட்டியாக இறக்க வேண்டிய பொருள்கள், மூட்டை மூட்டையாக இறங்கின.
தங்கத்தையோ, நவமணிகளை யோ, மூட்டை கட்டக் கூடாதே!
ஒரு மூட்டையை நான் பிரித்துப் பார்த்தேன். உள்ளே எல்லாம் எரு முட்டைகள். தவிட்டு உமிகள்!
எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. ஒரு மூட்டையை அப்படியே தூக்கச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொன்னேன்.
ஆத்திரத்தோடு அவனைத் தேடினேன்.
அதிசயமாக எனக்கு ஆத்திரம் வந்ததைப் பார்த்த என் ஆத்தாள், “என்ன ஐயா! ஏன் இந்தப் பதற்றம்?” என்றார்கள்.
“ஆத்தா! உன் பேரன் கொள்முதல் செய்த செல்வத்தைப் பார்த் தாயா?” என்று சினத்தோடு மூட்டையைக் காலால் உதைத்தேன்.
ஒரு மூட்டை பந்து போல் எழுந்து சுவரில் மோதி விழுந்து உடைந் தது.
நான் திகைத்தேன்; திணறினேன்; உள்ளே அத்தனையும் நவ மணிகள்.
கொட்டிக்கிடந்த தவிட்டு உமிகள் வெறும் உமிகள் அல்ல, தங்க உமிகள்!
எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை; ஒரே கப்பலில் கோடிக் கணக்கில் செல்வம் வந்துவிட்டது; சொத்து குவிந்து விட்டது.
ஆசையோடும் பாசத்தோடும், “மகனே! மகனே!” என்று அவனைத் தேடினேன்.
உடனே என் ஆத்தாள், அவனது கைப்பெட்டியை என்னிடம் கொடுத்து, “இதோ பாரப்பா! அது மருக்கொள்ளிப்பிள்ளை! `அப்ப த்தா, அப்பச்சி வந்ததும் இதைக் கொடுத்துவிடு! என்னை இனித் தேட வேண்டாம் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு போய் விட்டது!” என்றார்கள்.
`மறுபடியும் இது என்ன மாயவேலை?’ என்று எண்ணியவாறு நான் அந்தக் கைப்பெட்டியைத் திறந்து பார் த்தேன்.
உள்ளே ஒரு காதற்ற ஊசியும், ஓர் ஓலை நறுக்கும் இருந்தன.
அந்த ஓலை நறுக்கில், “காதற்ற ஊசி யும் வாராது காண் கடை வழிக்கே” என்று எழுதப் பெற்றிருந்தது.
என் மாளிகை என் கண் முன்னே சுழ ன்றது.
அதில் இருந்து பொடிப்பொடியாக மாணிக்கங்கள் உதிர்ந்தன. என் தாயார் சக்தி போல தோற்ற மளி த்தார்கள். கந்தன் போலவே என் மகன் கற்பனையில் தோன்றி னான். கைலயங்கிரியில் ருத்திர தாண்டவம் நடப்பது போல கண் ணுக்குத் தெரிந்தது.
அது வரையில் எவ்வளவோ கண்டிருந்த எனக்கு, மிகச் சாதாரண மாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் தெரியவில்லையே?
“மகனே…!” என்றழைக்க நா எழுந்தது. `அம்மையே அப்பா’ என்று தான் வார் த்தை வந்தது.
எனக்கு ஞானம் பிறந்தது.
செல்வத்தின் நிலையாமை, பளிச்சென்று என் கண்களுக்குத் தெரி ந்தது.
அங்கிருந்து வீட்டுக்கு ஓடினேன்.
என் இல்லத்தரசி சிவகலையைப் பார்த்தேன்; அந்த உருவம் என க்குத் தெரியவில்லை; ஒரு எலும்புக்கூடே தெரி ந்தது.
கொஞ்சம் திருநீற்றைக் கையில் அள்ளினேன். சாம்பலாகப் போகும் கையோடு அந்தச் சாம் பல் சொந்தம் கொண்டா டிற்று. காயத் தின் நிலையாமையும் அப்போது தான் எனக்குப் புரிந்தது.
“உலகியல் ஆதாரங்கள் எல்லாமே பொய்! பொய்!” என்று யாரோ என் தலையில் அடிப்பது போலிருந்தது.
மனைவி என்றொரு விலங்கு! அவளு க்கு செல்வம் என்றொரு பேராசை!
இவற்றில் எது நிலையானது?
மாடத்தின் மீது ஏறித் திறந்தவெளி மாடத்துக்குப் போனேன். புகார் நகரத் தை உற்றுக் கவனித்தேன்.
என் பொருள் எங்கே என்று கேட்பவ னும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசி ப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்.
கோடி வராகனுக்குச் சொத்துள்ளவ னும் ஓடி ஓடித் தேடுகிறான். கும்பியை நிரப்பக் கூழுக்கு அலைபவனும் ஓடி ஆடுகிறான்.
பொய் பேசும் வணிகன்தான் பொருளைக் குவிக்கிறான்; உண் மையே பேசுகின்றவன் உருப்படாமல் போகிறான்.
மனைவிக்குக் காவல் என்று சொத்து; சொத்துக்குக் காவல் என்று மனைவி.
இந்த கொண்டாட்டத்தில் பிள்ளையோ, பிள்ளை; பொருள் அற்றுப் போனாலோ குடும்பத் தொல்லை; ஓடி விடலாம் என்றாலோ பாசம் போடுகிறது எல்லை. ஆப்பு அசைத்த குரங்கல்லவா மனிதன்?
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி,
நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற்
கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!
கடல் அலைகள் நகரத்தை மோதுவதைக் கண்டேன்.
மோதுகின்ற அலைக்கு ஆசை வெறி; திரும்பிப் போகும் அலைக்கு ஞான வெறி.
நான் திரும்பிப் போக விரும்பினேன்.
எனது சமுதாய தர்மம் பூர்த்தியாகி விட்டதாகக் கருதினேன். மனைவிக்கு மகிழ்ச்சி, சொத்து; இனி எனக்கென்ன கடமை?
நான் என் சுய தர்மத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாக யாரும் சொல்ல முடியாது.
நான் துறவியாக முடிவு கட்டினேன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்