…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!
…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!
அன்புள்ள அம்மா —
நான், 31 வயது பெண்; என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, இரு அண்ணன் கள்; மூவருக்கும் திருமணமாகி விட்டது. அம்மா… நான்
கடந்த, நான்கு ஆண்டுகளாக ஒருவரை காதலிக்கிறேன்; அவர் தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். நான், அரசுப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன். இருஆண்டுகளுக்குமுன், என் தந்தையிடம், என் காதல் விஷயத்தை தெரிவித்தேன்.
என்னவரை வரவழைத்து பேசிப் பார்த்ததுடன், அவர் வீட்டிற்கு சென்றும் பேசினார் அவங்க எல்லாருக்கும் சம்மதம். எங்கள் வீட்டிலும் என் அப்பா மற்றும் உடன் பிறந்தோருக்கு சம்மதம். ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!
அவர் குடும்பத்தினரும் என் அம்மாவிடம் பலமுறை பேசி விட்டனர். ஒரே யடியாக, ‘நான் செத்த பின், அவருக்கு கல்யாணம் செய்து வைங்க…’ என்கிறாள் அம்மா.
எப்ப திருமணப் பேச்சை எடுத்தாலும், இதே பதிலைத் தான் சொல்கிறாள். ஜாதியை தவிர வேற காரணம் அவளால் சொல்ல முடியல.
‘என் சொந்தக்காரங்க முன் கவுரவமா வாழணும்ன்னு ஆசைப்பட்டேன்; அதை நீ கெடுத்துட்டே…’ என்கிறாள். அம்மாகூட பிறந்தவங்க, எந்த நல்ல து, கெட்டதுக்கும் வந்தது இல்ல; நாங்க அவங்கள பார்த்தது கூட இல்ல. ஆனா, அம்மாவுக்கு அவங்க தான் முக்கியம்.
என் கூட பிறந்தவங்களும் இந்த விஷயத்தில் தலையிடுவது கிடையாது. பொத்தாம் பொதுவாக, ‘அம்மாவிடம் பேச முடியாது’ன்னு சொல்றாங்க. ஏன்னா இதைப் பற்றி பேச ஆரம்பிச்சதும், அறைக்குள் சென்று கதவை மூடி, ‘செத்துடுறேன்’ன்னு சொல்லி, சுவரில் தலையை முட்டிக்கிறாள்.
எல்லாத்தையும், ‘நெகடிவ்’வா எடுத்துக் கொள்வதுடன், யாருமே தன்னி டம் பாசமா இல்லன்னும், சொல்றாள். அதே சமயம், அன்பா பேசுனா, நடிப் புன்னு ஏசுகிறாள். அத்துடன், எதற்கெடுத்தாலும் அழறதுடன், அப்பாவை யும் மட்டம் தட்டுகிறாள்.
அம்மாவோட மனசுல, அவளோட, 10 – 25 வயது வரை உள்ள நினைவுகள் தான் அதிகம் இருக்கு. 17வயசுல திருமணம் ஆனதால, கல்யாணம்கிறதே அவளுக்கு வெறுப்பா இருக்கு. என்ன நடந்தாலும், உதாரணத்துக்கு தன் னோட கல்யாணத்தை பத்திதான் பேசுறா. கல்யாண வயசுமீறி பொண் ணு இருக்குறதோ, பேரன், பேத்திகளை பற்றியோ நினைப்பதில்ல.
வீடு ரொம்ப இறுக்கமான சூழ்நிலையில இருக்கு. எங்க அம்மாவால, யார் முகத்திலேயும் சிரிப்பு இல்ல; இது, எங்க அம்மாவுக்கு புரியல.
எனக்கும்வாழணும்ன்னு ஆசையாஇருக்கு. அதுக்காக, நான் காதலிச்சவ ர விட்டுட்டு, வேற யார் கூடயும் என்னால வாழ முடியாது. வீட்ட விட்டு ஓடிப் போகவும் மனசு இல்ல. அவங்க வீட்ல உள்ளவங்க, ‘எங்க பையன் வேணும்ன்னா வீட்ட விட்டு வா’ன்னு கூப்பிடுறாங்க. ஆனா, என்னால தான், என் பெற்றோரை அசிங்கப்படுத்திட்டுப் போக முடியல.
எங்க வீட்ல, என் கல்யாணத்த பத்தி ஆறு மாசத்துக்கு ஒருமுறை, நானா பேசுனா தான் உண்டு. நான் ஒரு அனாதை மாதிரி இருக்கேன்.
எங்க அம்மா எனக்காக இல்லாட்டாலும், என் குடும்பத்துக்காகவாவது மாறணும். என் கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதற்கு நீங்க நல்ல வழியை காட்டணும்.
— உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.
அன்புள்ள மகளுக்கு —
உன் அம்மாவிற்குள் ஏற்பட்டுள்ள ஜாதிவெறி, அவளது பெற்றோரால், அவ ளுக்குள் திணிக்கப்பட்டதாக இருக்கலாம். உன் தந்தையுடனான திருமண வாழ்வில், உன் தாய் சுகப்படவில்லை. அதனால், ‘மகளும் திரு மணம் செய்து துன்பத்தில் உழல வேண்டாம்…’ என கருதுகிறாள் போலி ருக்கு.
மகள் திருமண வயதை கடந்து விட்டாள்; திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்கிற கசப்பான உண்மையை ஜீரணி க்க, உன் தாயால் முடியவில்லை.
எது எப்படி இருந்தாலும், உன்தாயின் வறட்டுபிடிவாதம் கண்டிக்கதக்கது. உன் தாய், சமீபத்தில் தான், ‘மெனோபாஸ் பிரீயடை’ கடந்திருக்கலாம். அதனால், எரிச்சலும், பிடிவாதமும், தாழ்வு மனப்பான்மையும் அவளுள் மிகுந்துள்ளது. பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் கணவனுக்கு பய ந்து, விருப்ப அடிமையாக நடப்பர். 50 வயது நெருங்கும் போது, கணவன் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களையும், ‘டாமினேட்’ செய்வர்.
உன் கடிதத்தின் உள்ளடக்கத்தை, மனநல மருத்துவரிடம் விவரித்தேன். அவர், ‘உன் தாய்க்கு கலாசார வீம்பு, ஆளுமை கோளாறு மறறும் ஒரே விஷயத்தை பிடித்து தொங்கும் மனோபாவம் இருக்கலாம்; உன் தாயை, மனநல மருத்துவரிடம் காட்டி, மனநல ஆலோசனை பெறலாம்…’ என்கி றார்.
மருத்துவரீதியான மனநலஆலோசனையுடன், வாரத்திற்கு மூன்றுமுறை கோவிலுக்கு அழைத்து சென்று, உன் தாயின் மனம் உருகும் விதமாய் பேசி, தாயின் சம்மதம் பெறு.தாயுடன் பேச சங்கோஜமாய் இருந்தால், மன தில் இருப்பதை, கடிதமாக எழுதி படிக்கச் சொல்.
எதற்குமே உன் தாய் மசியா விட்டால், திருமணத்திற்கு தயார் என, உன் காதலன் வீட்டிற்கு குறிப்பு காட்டு. அம்மாவை மட்டும்விலக்கி, உன் குடும் ப அங்கத்தினர்கள் அனைவருடனும் கூட்டணி அமை. அம்மாவை எதிர்த் து திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு, உன் காதலன் உத்திரவாதமா னவன் தானா என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்.
உன் தாயின் விரைப்பும், முறைப்பும் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் இருக்கும். பிறர் நலம் கெடுக்காத சுயநலம் தவறில்லை; உன க்காகவும் நீ வாழப் பார். உன் காதல் திருமணம், வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்