Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர்

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர்

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர்

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள‍ எனது அலுவலகத்தில் எனது

அம்மா வரைந்த ஓவியங்களை, அலமாரியில் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைத்திருந்தேன். அந்த ஓவியங்களில் இராஜாஜி, பெரியார், காமராஜர், கலைஞர் மற்றும் MGR போன்ற தலைவர்களின் படங்களும் அடக்க‍ம். இன்று காலையில் எனது கடைக்கு கோவில் அர்ச்சகர் ஒருவர், வேறு வேலையாக எனது அலுவலத்தி ற்கு வந்திருந்தார். அப்போது எனது அலுவலகத்தில் இருக்கும் ஓவியங்களை ஒவ்வொன்றாக ரசித்து பார்த்துக் கொண்டே வந்தவர், பெரியார் ஓவியத்தையும் பார்த்தார். உடனே பெரியார் ஓவியத்தை, பயபக்தியோடு தொட்டு வணங்கினார். இந்த தருணத்தில் எல்லோர் மனத்திலும் எழும் அதே கேள்வியைத்தான் நானும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன‍ பதிலை ஒரு வார்த்தைகூட மாற்றாமல் (பேச்சுத் தமிழில் இருந்து எழுத்துத் தமிழில் )கீழே குறிப்பிடுகிறேன்.

என்னுடைய வயது 77. நான் என் சிறுவயதில் இருந்தே கோவில் அர்ச்ச‍கராகவும் புரோகிதராகவும் இருந்து வருகிறேன். எனக்கு 3 அக்காள்கள் உண்டு. எங்கள் சொந்த ஊர் திருவையாறு. எனக்கு திருமணமாகி 3 பெண்குழந்தைகள் உள்ள‍னர். எனக்கு அப்போது 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அக்காளுக்கு அப்போது வயது 14 அந்த‌ சிறுவயதிலேயே அவளுக்கு திருமணம் முடித்து அதாவது பால்ய விவாகம் முடித்து விட்ட‍னர். துரதுஷ்டவசமாக திருமணம் முடித்த அடுத்த‍ 5 ஆண்டுகளின் எனது அக்காள் கணவர் இறந்து விட்டார். இன்னொரு அக்காளுக்கும் 12 வயதிலேயே திருமணம் முடித்து விட்ட‍னர். ஆனாலும் சில மாதங்களிலேயே அந்த மாப்பிள்ளையும் காணாமல் போய்விட்டார். மூன்றாவது அக்காளுக்கும் 10 வயதிலேயே திருமணம் முடிக்க‍ எண்ணி அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அந்த தருணத்தில் பெரியாரின் தொண்டர்கள், அந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, எனது மூன்றாவது அக்காளின் வாழ்க்கையை காப்பாற்றி விட்ட‍னர். அது மட்டுமல்ல‍ எனது முதலிரண்டு அக்காள்களை சிறுவயதில் விதவை கோலம் பூண்டு, அவர்களை, எந்த வித சுப நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள‍ விடாமல் தடுத்து வீட்டு மூலையிலும், கொல்லைப்புறத்திலும் இருக்க‍ச் சொல்லி, எனது சமூகத்தினர் ஒதுக்கி வைத்துவிட்ட‍னர். ஒருபுறம் பெற்ற‍ பெண்களின் விதவைக் கோலத்தை கண்ணீர் வடிக்கும் எனது பெற்றோர், மறுபுறம் சமூகத்தின் கட்டுப் பாட்டையும் மீற முடியாமல் இருதலைக்கொல்லி எறும்பாக தவித்தனர்.

இப்ப‍டியே சில ஆண்டுகள் கழிந்தன• என்னுடைய முதல் அக்காளுக்கு 22 வயது ஆனது. அவளை, பெரியார் தொண்டர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்தார். அவரும் அவருடைய பெற்றோருடன் மிகவும் நாகரீகமாக எங்கள் வீடு தேடி வந்து பெண் கேட்டார். ஆனால் எனது பெற்றோர் சமூகத்திற்கு பயந்து மறுத்து விட்டார். அதன்பிறகு அவரும் என் அக்காளுக்கு தொந்தரவு கொடுக்காமல் நாகரீகமாக ஒதுங்கி கொண்டார்.

எனது வயது 21, எனது அக்காளுக்கு வயது 27 ஆனது. ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் என் அக்காவை ஒருதலையாக காதலித்த‍ அந்த நபரை யதார்த்த‍மாக சந்திக்க‍ நேர்ந்தது. அப்போது, அவரிடம் பேசினேன். அவர் இன்னும் திருமணம் செய்யாமல் என் அக்காள் மீது அதே காதலோடு இருப்ப‍தாக என்னிடம் தெரிவித்தார். இதனை வீட்டிற்கு வந்து என் அக்காவிடம் சொன்னேன் அவள் என்னிடம், ‘உனக்கு எதற்கு இந்த அதிக பிரசங்கித்தனம் பேசாமல் வேலையை பார்’ என்றார். நான் விட வில்லை. தினந்தோறும் அவளிடம் பேசி பேசி அவளை சம்ம‍திக்க‍ வைத்தபிறகு என் பெற்றோரிடம் பேசினேன் அவர்கள், சமூகத்திற்கு பயந்து, கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததோடு என்னையும் அடித்துவிட்ட‍னர். ஆனாலும் நான் விட வில்லை. என் அக்காளுக்கு நல்ல‍ வாழ்க்கை அமைத்திட துடித்தேன். நேராக என் அக்காவின் காதலரிடம் சென்று, உங்கள் இருவருக்கும் நான் உங்கள் இருவருக்கும் திருமணம் முடிக்கிறேன். என் அக்காவை நல்ல‍படியாக பார்த்துக் கொள்வீர்களா என்று உறுதிமொழியை மட்டும் கேட்டுப் பெற்றேன்.

ஏதோ ஒரு பொய்யான காரணத்தை கூறி எனது அக்காவை ஈரோட்டிற்கு அழைத்து வந்தேன். அங்கே என் அக்காவை காதலிக்கும் நபரையும் வரவழைத்தேன். அங்கு தந்தை பெரியார் முன்னிலையில் சீர்திருத்த‍த் திருமணம் நடந்தது. நான் திருமணம் முடித்த‍ தகவல் எப்ப‍டியோ எனது பெற்றோருக்கும் எனது சமூகத்திற்கும் தெரிந்து விட்ட‍து. இதனால் கோபத்துடன் ஈரோட்டிற்கு வந்து,. என்னையும் அக்காவையும் அவரது கணவரையும் வசைபாடினர். என் அக்காவிடம் ஏதோ ஏதோ சொல்லிப் பார்த்த‍னர். ஆனாலும் என் அக்கா மிகவும் உறுதியாக இருந்ததனால், எங்களுக்கு கொடுர சாபங்கள் பல கொடுத்து சென்றனர்.. என்னையும் எனது அக்காவையும் இறந்து விட்ட‍தாக எண்ணிக் கொள்கிறோம் என்றனர். இவர்களிடம் இருந்து பெரியார் தொண்டர்கள் எங்களை காப்பாற்றினர்.

நாட்கள் நகர்ந்தன• சென்னை கொத்த‍வால் சாவடியில் குடியேறினோம். என் அக்காவின் கணவர், காய்கறி வியாபாரம் செய்வது பணம் வேண்டுமே என்ன‍ செய்வது என்ற திகைத்த‍போது, பெரியார் தொண்டரிடம் பண உதவி பெற்று நல்ல‍ முறையில் காய்கறி வியாபாரம் தொடங்கி லாபகரமாக‌ செய்து வந்தார். நான், கோவிலில் அர்ச்சனை செய்வது மற்றும் அக்க‍ம் பக்கத்து வீடுகளில் புரோகிதம் செய்து வந்தேன்.

நாங்கள் மட்டும் அவ்வ‍ப்போது எனது இரண்டாவது அக்காவிடம் கடிதம் மூலமாக தொடர்பில் இருந்து வந்தோம். எங்கள் மூத்த அக்காவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சேதி தெரிந்தவுடன், எனது பெற்றோரின் கோபம் சற்றே தணிந்து, சென்னைக்கு வந்து பேரனை பார்த்த‍னர். எங்கள் மீதும் கோபம் கொஞ்சம் தணிந்திருந்தது. எனது இரண்டாவது விதவை அக்காவின் அவலநிலையையும் எடுத்துச் சொல்லி, அவளுக்கு ஒரு திருமணம் முடிக்க‍ வேண்டும் என்பதை எனது பெற்றோருக்கு எடுத்துரைத்து, எனது முதல் அக்காவின் கணவரின் தம்பியையே எனது இரண்டாவது அக்காவுக்கும் ஈரோட்டில் பெரியார் முன்னிலையில் சீர்திருத்த‍ திருமணம் நடந்தது. இதற்கிடையில் எனது மூன்றாவது அக்காவுக்கும் நல்ல‍ இடத்தில் திருமணம் முடித்திருந்தனர்.

நோய்களின் பாதிப்புக்களால் எனது அம்மாவும், அப்பாவும் ஒருவர் பின் ஒருவராக மரணத்தை தழுவினர். இப்போது என் அக்காக்கள் எல்லோரும் நல்ல‍ வசதியாக இருக்கின்றனர். எனக்கு ஒரு நல்ல‍ பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைத்தது என் மூத்த‍ அக்காவின் கணவர்தான்.

என் குடும்பம், என் மூன்று அக்காக்களின் குடும்பம் என்று அதே கொத்த‍வால் சாவடியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எனது மூத்த‍ அக்காவின் கணவர் சென்ற ஆண்டு காலமாகி விட்டார். இன்று நாங்கள் நல்ல‍ நிலையில் இருப்ப‍தற்கு எனது மூத்த‍ அக்காவின் கணவர்தான் காரணம்.

இது முழுக்க‍ முழுக்க‍ சாத்தியமானது தந்தை பெரியாரால்தான் என்பதால் இவரது படத்தை பார்க்கும்போது அவரும் என் கண்களுக்கு ஒரு கடவுளாகவே தெரிகிறார் அதனால் அந்த கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை நான் பெரியாருக்கும் கொடுத்து வருகிறேன் என்று சொல்லி என்னை வியக்க வைத்தார்.

இதனை, விதை2விருட்சம் இணையத்தில் பகிர விரும்புகிறேன் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், எங்கள் பெய்ர்களை மட்டும் குறிப்பிடாமல் பகிருங்கள் என்றார்.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#Periyar #ThanthaiPeriyar #தந்தைபெரியார் #பெரியார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: