இது தடைசெய்யப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை – விழிப்புணர்வு
இது தடைசெய்யப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை – விழிப்புணர்வு
பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில
புதுவரவாக வந்து, தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் போதே இறப்பு என்ற ஒன்றும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையில்தான் அவன் எத்தனை எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்கிறான்.
அப்படி அந்த மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிக முக்கியமான இன்றியமையாதவைகளில் ஒன்றுதான் பாலியல் தொல்லைகள், மற்றும் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமையே!
முன்பெல்லாம், ஒரு பெண் பருவமடைந்தபின்தான் அவளுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடங்கும். ஆனால் இன்றோ மழலை மொழி மாறாத குழந்தைகள் கூட பாலியல் தொந்தரவுக்கு ஆட்படுவதுதான் வேதனைக்குரிய செய்தியாக இருக்கிறது.
பள்ளிப்பருவத்தில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இயல்பாகவே தனது உடலில் நடக்கும் பாலியல் ரீதியான மாற்றங்களைக் கண்டு, அவர்களின் மனம் ஒருவித குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு, பல தவறான வழிகளுக்கு சென்று விடுகின்றனர். இன்னும் சிலரோ தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை வந்து விட்டது என்று எண்ணி இதை தனது தாய் தந்தையரிடம் கேட்க அச்சப்பட்டு, கூச்சப்பட்டு தனது நண்பர்களிடம் கேட்கின்றனர். அந்த நண்பர்களோ, தெரிந்தோ தெரியாமலோ அவர்களை தவறான வழிகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் ஆட்படுத்தி விடுகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால், காமவெறி பிடித்தவர்களிடம் சிக்குண்டு, அவர்களது மிரட்டலுக்கு பயந்து, தத்தமது அந்தரங்க உறுப்புகளை, அவர்கள் தொடுவதற்கும், நாசவேலை செய்வதற்கு அடிபணிந்து தங்களது வாழ்க்கையையே தொலைக்கும் அவலம் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதை செய்தித்தாள் களின் வாயிலாக நான் அறிவோம். முன்பெல்லாம் வீட்டில் பாட்டிகள் இருப்பார்கள் அவர்கள் பெண் பிள்ளைகள் பருவம் எய்தும்போதும் எய்துவதற்கு முன்பும் சில ஆலோசனைகளைச் சொல்லியும், சில மூலிகைசார்ந்த உணவுகளை கொடுத்து சாப்பிடவும் சொல்வார்கள். ஆனால் இன்றோ பாட்டிகளையும் தாத்தாக்களையும் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, சம்பளத்திற்கு ஆள் வைத்து, ஆண், பெண் பிள்ளைகளை அவர்கள் கண்காணிப்பில் விட்டு விடுகிறோம். இத்தகை பாலியல் தொந்தரவுகள், பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழவில்லை.ஆண் குழந்தை களுக்கும் இவர்களது கோரப்பிடிக்கு ஆளாகிவருகின்றனர்.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வியை சொல்லித்தரும்போது, ஒரு சிறுவனின் புகைப் படம் தாங்கிய புத்தகத்தை காண்பித்து, கண், காது, வாய், நாக்கு, தலை, முடி, கால், முட்டி, கை மணிக்கட்டு, போன்றவற்றை சுட்டிக்காட்டி, மனிதன் வெளி உறுப்புக்களின் பெயர்களை அறிய வைத்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுவோம்.
இன்னும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைக்கு தனது உடலில் இயங்கும் இதயம் (Heart), சிறுநீரகம் (Kidney), கணையம், நுரையீரல், மூளை போன்ற பல உள் உறுப்புக்களின் இயக்கத்தை சொல்லிக் கொடுப்போம். ஆனால் அவர்களது பிறப்புறுப்பின் இயக்கம் பற்றியும், அதன் தனித்தன்மை பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோமா என்று கேட்டால், இதற்கு பதில் இல்லை என்றுதான் வரும்.
குழந்தைகள் 4 வயதைத் தொடும்போதே அவர்களுக்கு அவர்கள் உடல்சார்ந்த விழிப்புணர்வு அவசியம் தேவைப்படும். ஆகவே அந்த வயதில் பெற்றோர், அவர்களை அழைத்து அதுகுறித்து விழிப்புணர்வுத் தகவல்களை, அவர்களின் வயதிற்கேற்ப, மனநிலைக்கேற்ப படிப்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தொடுதல் குறித்த விழிப்புணர்வு அதாவது, யாராவது வந்து அவர்களிடம் பேசும்போது, அவர்கள் அவர்களின் உடலை எங்கே தொட அனுமதிக்க வேண்டும் எங்கே தொட அனுமதிக்க கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை மட்டுமல்ல கட்டாயமும் கூட• அப்படி மீறி யாராவது தொட்டாலோ அல்லது வேறு லீலைகள் செய்யத் துணிந்தாலோ, அக்கணமே அங்கிருந்து ஓடிவிந்து பெற்றோர் ஆகிய உங்ளிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். நட்போடு பழகுங்கள்.
அதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் காமவெறி பிடித்தவர்களிடம் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி Cell: 98841 93081