இன்றைய அரசியலை எண்ணி, எண்ணி நாளும் வாடுகிறேன், அதன் விளைவாக,
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய என் எண்ணத்தில் விளைந்த கவிதையே இது. ஆகவே இதனை படித்து, உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். (கவிதை உறவு என்ற மாத இதழில் வெளிவந்துள்ளது.
அடம்பிடிக்கும் ஆளுங்கட்சி – அதனை
படம்பிடிக்கும் எதிர்க்கட்சி
கடம் வாசிக்கும் தேசிய கட்சிகள்
வடம் இழுக்கும் உதிரி கட்சிகள்
திடம் இழந்த மக்களின் கண்ணீரால்
குடங்கள் பல நிரம்பி வழிந்தன.
தடம் மாறும் தமிழகமே உன்
தரம், அதனை இழந்தாயோ?
மாடுகளாய் மாறிய மனிதர்கள்
மனிதர்களாய் போற்றப்படும் மாடுகள்
மதநெறி கொன்று
மதவெறி வளர்கிறதே!
பூ குணம் உனக்கு ஆனால்
போர்க்களத்தில் உதவாது
பூக்கோலத்தை தூக்கியெறி
போர்க்கோலம் பூண்டு வா
மலர்மணம் வீசும்
மனங்களைச் சாகடிக்கும்
மதவெறிக்கு கொடூர
மரணத்தை பரிசளிப்போம் வா
வேளாண்மையை
வேரறுத்து, அவர்களுக்கு
வேலை கொடுப்பது
வேடிக்கை செயல் அன்றோ
வேளாண்மையை ஒழித்துவிட்டால்
வேளைதோறும் சோறு ஏது? –
வேலை வேண்டாம்
வேளாண்மை போதும் – தன்
காலில் நிற்பவனின்
காலை உடைத்து செயற்கை
கால் தருகிறோம் அதில் நீ
காலூன்று என்பதுபோலுள்ளது சில
வேடிக்கை மனிதர்களின்
வாடிக்கையான பேச்சு.
துடிக்கும் உள்ளங்களை
அடிக்கும் அரக்கர்களாய்
ஆளுங்கட்சியும்
அதிகார வர்க்கமும் – இதனை
அநியாயம் என சொல்லி
அநியாயமாய்ச் சாகிறாயே
தடுக்கத்தான் நீ என்செய்தாய் அட
தாண்டத்தான் நீ என்செய்தாய்
தவிடாய் போனதா
தமிழா உன் நெஞ்சுரம்!
வீரிய கருத்துக்களுடன்
விவரிப்போம் இதைபோல – ஆனாலும்
வழக்குகள் பல பாயும் – நம்
வாழ்க்கையும் அதில் மறையும்
நமக்கெதற்கு இந்த வம்பு
நாமுண்டு நம் வேலையுண்டு என்றே
நாமிருந்து நம் கண்முன்னே
நாடழிவதை காண்போமே
ஏளன வரிகள் எதற்கு
எமக்கும் உண்டு நெஞ்சுரம்
என்று வீறுகொண்டு
எவர் பொங்கினாலும்
தேர்ந்தெடுக்க,
தேர்தல் உண்டு
தேர்தல் வரட்டும் அதுவரை
தேயாது நம் மனம் என்பார்
ஓட்டுக்கு இவ்வளவு
நோட்டு என்றே
கச்சிதமாய்
கணக்கிட்டு
விறுக்கென கைநீட்டி வாங்கி
விரல் நீட்டி ஓட்டளித்து
வாகைசூடும் வாக்கை
வீணாக்கியதை
பெருமிதமாய் எண்ணி
பெருமை பொங்க பேசுவது
பாழும் தமிழரின்
பாவச்செயல் அன்றோ!
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081