Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்’ என்று பேட்டி கொடுத்தார். பிரதமர் மோடி வரை இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு, கமல் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், 16-ம் தேதி அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்ய அனுமதி கிடைத்தது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னிலை, தொப்பம்பட்டி, நொய்யல் குறுக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பின்னர், வேலாயுதம் பாளையம் மழைவீதி பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் இரவு 9.45 மணிக்கு வருகை தந்தார்.

கமல் மீது வீசப்பட்ட அழுகிய முட்டைப்பாக்கெட்டை காட்டும் ஸ்நேகன்

தேர்தல் பரப்புரை நேரம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாக கூறிய கமல், சுருக்கமாக 10 நிமிடத்தில் தனது தேர்தல் பிரசார உரையை முடித்துக்கொண்டு, மேடையிலிருந்து கீழே இறங்கிய போது, திடீரென ஒரு நபர் கமல் மீது முட்டையை வீசினார். உடனே சுதாரித்து கமல் குனிய, அது கூட்டத்தில் போய் விழுந்தது. அது அவர் மீது படவில்லை. மீண்டும் வேறொரு நபர் திடீரென அவரை நோக்கி கல்லொன்றை வீச, அதையும் தன்மீது விழாமல் லாவகமாக கமல் விலகிக்கொண்டார். அவர்கள் இருவரோடு இன்னொரு நபரும் இருக்க, இதைப் பார்த்த மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், கல் மற்றும் முட்டை வீசிய மூன்று பேரையும் சுற்றிவளைத்து தாக்க முற்பட்டனர். அதில் இருவர் தப்பியோடிவிட, பி.ஜே.பியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மட்டும் மாட்டிக் கொண்டார். அவரை ஆத்திரம் தீர தொண்டர்கள் அடித்து துவைத்தனர். இருப்பினும் காவல் துறையினர் அவரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், இரண்டு நபர்கள் அருகே இருந்த உணவகத்துக்கு ஓடிச் சென்று உள்ளே பதுங்கினர்.

தாக்குதலுக்குள்ளான ராமச்சந்திரன்

அவர்களையும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் தாக்க முயற்சி செய்ததால், காவல்துறையினர் உணவகத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டினர். ஆனாலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் உணவகத்துக்கு முன் அமர்ந்து, `சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் ‘ என கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கவிஞர் சிநேகனை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கைவிட்டனர். இந்தப் பொதுக்கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, இரவு 7 மணி அளவில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடம் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

`மததுரோகி கமலை கைது செய்’ என்று கோஷமிட்டபடி, பொதுக் கூட்டம் நடைபெற இருந்த மேடையை நோக்கி முன்னேற முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுத்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள அவர்கள் அனைவரும் முயன்றதால், போலீஸார், 4 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி மற்றும் ஒளிப்படங்கள் – விகடன்

#க‌மல், #கமல்ஹாசன், #முட்டை, #அழுகிய_முட்டை, #கல், #மக்கள்_நீதி_மய்யம், #வீச்சு, #தொண்டர்கள்,#மறியல், #இந்து_முன்னணியினர், #நாதுராம்_கோட்சே, #இந்து_தீவிரவாதி, #விதை2விருட்சம், #Kamal, #Kamalhasan, #Egg, #Stone, #Throw, #Makkal_Needhi_Maiam, #Makkal_Needi_Maiyam, #Hindu_Munnaniyinar, #Nathuram_Godse, #Hindu_Terrorist, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply