Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே!

வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை!

ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ? சுத்தம்! ஒரு ஈ, காக்கா கூட இல்லை!

என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்? நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

“நாமார்க்கும் குடியல்லோம்” என்று முழங்கிய நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றிவிட்டு… “ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே” என்று உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில் தோன்றிவிட்டு, சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்களை நாடிப் போய் வீழ்ந்து கிடக்கிறீர்களே!

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை! நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி, உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில சோதிடர்கள், சிவாச்சாரியார்களைச் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுக்கவில்லை! நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல நாள் பார்க்க, அவர்களைத் துணைக்கழைப்பதையோ, தவறென்று கூறவில்லை. ஆனால், திருக்கோயில் வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா! இறைநம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று… பின்னே? எதற்காக இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இப்படி தோச பரிகாரம், கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும் எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள்! எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

உங்களைக் ஏளனம் செய்வதற்காக இதைக்கூறவில்லை! தயவு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம் சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்) இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்!

மிகப்பழைய ஆலயங்களுக்குச் சென்றீர்களானால், அங்கே நவக்கிரக திருமுன்களே இருக்காது! அப்படியும் இருக்கின்றதென்றால் அது மிக அண்மையில் கட்டப்பட்டதாகவே இருக்கும்!

திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை! அது சனீசுவரன் கோயில், திங்களூர் சிவன்கோயில் இல்லை, அது சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில் சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரியவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை! உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்னதான் செய்யமுடியும்? அதை விடுத்து, கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும் இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்களையும், துன்பங்களையும் நீக்கக் கூடியவை. அவற்றை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

தோச நிவர்த்தி பரிகாரம், அது, இது என்று கொட்டும் பணத்தை, ஏதாவது ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய் அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள். வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க, “நீங்க நல்லாயிருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும். அந்த வாழ்த்தே சிவனாணையாய், உங்களைப் பற்றவரும் சனி பகவானை ஓட ஓட விரட்டிவிடுமே!

ஆலயங்களில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், சிவாச்சாரியார்கள் தயவு செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்! ஏதோ ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே என்பதற்காக, ஈசன் முன்னிலையிலேயே சிவத்துரோகம் நிகழ்வதற்கு, தயவு செய்து அனுமதிக்காதீர்கள்! சிவசிவ!

வாட்ஸ் அப் தகவல்

#நவக்கிரக_வழிபாடு_ ஒரு_பகிரங்க‌_எச்சரிக்கை, #நவக்கிரக_வழிபாடு, #ஒரு_பகிரங்க‌_எச்சரிக்கை, #நவக்கிரகம், #வழிபாடு, #ஞாயிறு, #திங்கள், #செவ்வாய், #புதன், #வியாழன், #வெள்ளி, #சனி, #குரு, #சுக்கிரன், #சந்திரன், #சூரியன், #கேது, #ராகு, #அங்காரகன், #ஜோதிடம், #விதை2விருட்சம், #Sunday, #Tuesday, #Wednesday, #Thursday, #Friday, #Saturday, #Venus, #Sun, #Moon, #Ketu, #Rahu, #Anchorage, #Astrology, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: