Friday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும்

‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம்.

ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது.

தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்?

என்ன, ராமச்சந்திரமூர்த்தி பொய் சொல்லி இருக்கிறாரா?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதற்கான விடை திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் மூலமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவம் என்ன என்பதைப் பார்த்தால், ராமச்சந்திரமூர்த்தி பொய் சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கைகேயி, ஸ்ரீ ராமர் வனவாசம் செல்ல தசரதரிடம் வரம் பெற்றுவிட்டார்.

இதை ராமருக்கு அறிவித்த உடனே அவரும் மனமகிழ்வோடு இளையவனும் ஜானகியும் பின் தொடர மரவுரியோடு வனம் செல்லக் கிளம்பினார். ராமச்சந்திரமூர்த்தி நாடுவிட்டு காடு செல்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் மக்கள் துடித்துப் போயினர். முடி சூடி தங்களைக் காக்கப்போகிறார் என்று மகிழ்ந்திருந்த வேளையில், இந்தச் செய்தி அவர்களுக்குத் தலையில் இடி விழுந்ததைப்போல இருந்தது. தனது பிரியத்துக்குரிய ராமன் தன்னைவிட்டுப் பிரிகிறான், அரண்மனை வாசலை அடைந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு தசரதரும் கதறி அழுதார். விசுவாமித்திரனுடன் சில நாள்கள் அனுப்பவே தயங்கிய தசரதர், இப்போது 14 ஆண்டுகள் பிரிவை எப்படிப் பொறுத்துக் கொள்வார்?

கைகேயியிடம் பலவாறு கெஞ்சினார். `பரதனே ஆளட்டும். ஆனால், ராமர் வனத்துக்கு செல்லாமல் பரதனுக்கு துணையாக இருக்கட்டும்’ என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். ஹூம், கைகேயி அசைந்து கொடுக்கவில்லை. ஸ்ரீராமர் தேரில் ஏறி அமர்ந்து விட்டார். அவரைப் போகவிடாமல் கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தது. அப்போது உப்பரிகையில் இருந்து ஸ்ரீராமரிடம் ‘சக்கரவர்த்தி தசரதர், தான் உன்னை (ஸ்ரீரமரை) பிரிவதை எண்ணி கலங்குகிறார். புத்திர சோகத்தில் கதறுகிறார்’ என்றெல்லாம் சொல்லப் பட்டது. ஆனால் ஸ்ரீராமர் வருந்தினார். ஆனாலும், உடனே தேரைக் கிளப்புமாறு கூறுகிறார். அதே வேளையில் தசரதர் உப்பரிகையில் நின்று ஸ்ரீராமரின் தேரை நிறுத்துமாறு ஆணையிடுகிறார்.

தேரோட்டி சுமந்திரர் தேரை நிறுத்த முயல்கிறார். அவரிடம் ஸ்ரீராமர் தேரை வேகமாக செலுத்தும்படி சொல்கிறார். சுமந்திரர், ராமரிடம், ‘அரசரின் ஆணையை மீறினால் அது தவறாகுமே? தங்களை விட்டு விட்டு திரும்ப வந்தால், எனக்குத் தண்டனை கிடைக்குமே’ என்று வருந்துகிறார். அங்குதான் வாய்மையே வடிவான ராமச்சந்திரமூர்த்தி பொய் உரைக்கிறார். ஆம், ‘சுமந்திரரே கவலை வேண்டாம், தந்தை கேட்டால் மக்கள் போட்ட கூச்சலில் தங்கள் ஆணை கேட்க வில்லை என்று பொய் கூறி விடுங்கள். இன்னமும் இங்கே இருந்து அவரைக் கலங்கவிட வேண்டாம். என் மனதும் தாங்காது. உடனே கிளம்புங்கள்’ என்கிறார். சுமந்திரரும் கலங்கிவிடுகிறார். தேரும் கிளம்புகிறது.

தந்தை தனது பிரிவைத் தாளாது கலங்குகிறாரே, தாம் அவரைவிட்டு சீக்கிரமே கிளம்பினால் தந்தை சமாதானமாகி விடுவாரே என்ற எண்ணத்தில்தான் ஸ்ரீராமர் அவ்விதம் பொய் கூறினார் என்று திரிவேணி ராமாயணம் குறிப்பிட்டுள்ளது. மெல்லிய மனம்கொண்ட ராமச்சந்திரமூர்த்தி தந்தையின் கண்ணீரை விரும்புவாரா? அதனால் தான் பொய் சொன்னார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீராமரையே பொய் சொல்ல வைத்த விதியை என்னவென்று சொல்வது.?

படித்தது

#ஸ்ரீராமர், #ஸ்ரீராமபிரான், #பொய், #ராமச்சந்திரமூர்த்தி, #கம்பராமாயணம், #கம்பர், #இராமர், #லட்சுமணன், #பரதன், #சத்ருகண்ன், #சீதை, #சீதா, #தசரதன், #கோசலை, #கைகேசி, #மத்திரை, #குகன், #இராவணன், #சுக்ரீவன், #வாலி, #ஜாம்பவான், #ஹனுமன், #ஆஞ்சநேயர், #ஊர்மிளா, #விதை2விருட்சம், #Karthikeyan, #Kambar, #Rama, #Lakshmanan, #Bharathan, #Sathurakannan, #Seetha, #Sita, #Dasarathan, #Kaikeyee, #Kailasei, #Sumathirai , #Gugan, #Ravana, #Sugrivan, #Wali, #Jambavan, #Hanuman, #Anjaneya, #Urmila, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

%d bloggers like this: