Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச் சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பள்ளித் தோழனாக இருந்து, 10ஆம் வகுப்பு தேர்வாகும்போது எனக்கு வகுப்புத் தோழனாகி, இறுதியில் நெருங்கிய தோழனாகிய என் ஆருயிர் நண்பன் ஆக மாறினான். அவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நல்ல உயரம், திடகாத்திரமான உடல், கவர்ச்சியான கண்கள், பளிச்சென்று முகம், விவேகமான பேச்சு, அடர்ந்த தலைமுடி, துவைத்து இஸ்திரி போட்ட உடையுடன் இருப்பான். கிட்டத்தட்ட இணைந்த கைகள் திரைப்படத்தில் வரும் நடிகர் ராம்கி சாயலில் இருப்பான். பள்ளிக்கல்வி முடித்தோம். இருவரும் எதிரெதிர் திசைநோக்கி பயணப்பட்டதால் எங்கள் நட்பு மேற்கொண்டு தொடரவில்லை.

பல வருடங்கள் கழித்து யதார்த்தமாக இன்று (03.08.2019) காலை அவனை சந்திக்க நேர்ந்தது. முதலில் அவன்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். எனக்கு சட்டென்று அவனை அடையாளம் காண இயலவில்லை. அவனே சற்று தயங்கியபடியே தன்னை அறிமுகம் செய்துகொண்டும், எங்களுக்குள் நடந்த சில நிகழ்வுகளை பகிர்நத போதுதான் எனக்கே நினைவுக்கு வந்தது. அவனை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. மெலிந்த தேகம், புதர்போன்ற தாடி, கவர்ச்சி இழந்த கண்கள், சோர்வடைந்த முகம், வழுக்கை தலை, விரக்தியான வார்த்தைகள், கொஞ்சம் அழுக்கு ஏறிய கசங்கிய சட்டை மற்றும் வேட்டியுடன் காணப்பட்டான். எனக்கு நிரம்பவே அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் படிக்கும் காலத்தில் அவன், பாடுவதிலும் நடனம் ஆடுவதில் மிகப்பெரிய ஆர்வம் உடையவன். அதிலும் பாடிக்கொண்டே ஆடுவான் ஆடிக்கொண்டே பாடுவான். அதுமட்டு மல்ல நிறைய பாடல்களை எழுதுவான். இவ்வளவு திறமையுள்ளவனா இவன்? என்று என்னால் நம்ப முடியவில்லை. விவரம்கேட்டேன். (அவனது மனம் புண்படாதவாறு)

இவன் திரைப்படங்களில் நடிப்பதற்கு, நடனம் ஆடுவதற்கும் விரும்பி, இவனது தந்தையிடம் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் இவனது தந்தைக்கோ இவன் பாடுவதிலும் ஆடுவதிலும் ஏன் பாடல் எழுதுவதில்கூட துளியும் விருப்பமில்லை. “என்னடா இது கூத்தாடி பொழப்பு, போ கூத்தாடு, ரோட்டில் நின்னு பாடு, ஆடு ரோட்டில் போகிறவர் வருகிறவர் எல்லாம் நாலணா எட்டணா காசு போடுவாங்க அதை பொரிக்கித் திண்ணு!” என்று மிகவும் ஏளனமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியிருக்கிறார். இவன் எவ்வளவு சொல்லியும் இவன் தந்தை பிடிவாதமாக முடியாது என்று சொல்லியுள்ளார். இதற்கிடையில் தற்கொலைக்கும் முயன்றி ருக்கிறான். அப்பொழுதும் இவனது தந்தை அசைந்து கொடுக் கவில்லை. வேறு வழியின்றி தந்தையின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டு, இவனது தந்தையின் விருப்பப்படியே இவனது தாத்தாவுக்கு்ச் சொந்தமான சிறிய பாத்திரக் கடையிலேயே சேர்ந்தான் சம்பளம் வாங்காத வேலைக்காரனாக.

இதற்கிடையில் இவனுடைய சொந்தக்கார பெண்ணையே இவனுக்கு திருமணம் செய்து வைத்தார் அவனது அப்பா. அந்த பெண் ஒரு ஊதாரி என்றும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை செலவழித்து விட்டு இன்னும் பணம் கொடு என்று கேட்பவள் என்றும் ஒரு ஆடம்பர பிரியை என்றும் அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் வேறு என்பதும் முற்றிலும் இவனுக்கு பொருத்தமில்லாத பெண் என்றும் திருமணத்திற்கு முன்பே அந்த பெண், இவனுக்கு பொருத்தமில்லாதவன் என்பது இவனது அப்பாவுக்கு தெரியும். இருந்த போதும் அதே பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைத்து விட்டார் இவனது தந்தை.

அன்றுமுதல் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டைதான் என்றாலும் எப்படியோ இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவனுடன் வாழ பிடிக்காமல் வேறு ஒரு பணக்கார ஆணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு அவனுடன் ஊரைவிட்டே ஓடி விட்டாள். இதனால் மனமுடைந்த எனது நண்பன், குடிப்பழக்கத்துக்கு அடிமையானான். இவனது இரண்டு பெண் குழந்தைகளையும் இவனது தங்கைக்கு தத்து கொடுத்து விட்டான். இவனது தந்தையும் இப்போது உயிருடன் இல்லை.

இவனது தாத்தாவுக்கு சொந்தமான கடையை இவனது பங்காளிகள் கைப்பற்றிக் கொண்டு இவனை வெளியேற்றி விட்டனர். அதனால் கிடைக்கும் வேலையை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் குடித்து வாழ்க்கையில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறான்.

என் மனம் கேட்காமல், என்னுடைய வா என்று அழைத்தேன் அதற்கு அவன் வர மறுத்து விட்டான். பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு கொஞ்சம் மட்டன் பிரியாணி வாங்கிக் கொடு போதும் என்றான்.

அதன்படியே அவன் விரும்பிய பிரியாணியை அவனுக்கு வாங்கிக் கொடுத்து, அவன் கையில் ஒரு சிறு தொகையையும் கொடுத்து எனது எண்ணையும் கொடுத்து விடை பெற்றேன்.

திரைப்படங்களில் ஒரு ஹீரோவாகவோ அல்லது ஒரு நடனக் கலைஞராகவோ அல்லது பாடலாசிரியராக புகழ்பெற்று இருக்க வேண்டியவன் இப்படி ஒன்றுமில்லாதவனாக கிடக்கிறானே இவனது இந்த நிலைக்கு யார் காரணம் என்று யோசித்தேன். முழுக்க முழுக்க இவனது தந்தைதான் காரணம் .

பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய அந்த தந்தையை மனத்தில் வன்சொற்களால் வசைபாடியபடியே என் வழியில் பயணமானேன்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#பிரியாணி, #நட்பு, #நண்பன், #நண்பர்கள், #உண்மைக்கதை, #விதை2விருட்சம், #Biriyani, #Friendship, #Friend, #A_True_Story, #Story, #vidhai2virutcham, #vidhaitovirutcham , #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: