கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பு குறித்து, பிரபல நடிகை ஒருவர், தெரிவித்த கருத்து, பலத்த சர்ச்சையானதோடு, அந்த நடிகைக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன• இவ்வளவு ஏன் அந்த நடிகை மீது நீதிமன்றத்தில் பல வழக்குகளும் தொடரப்பட்டன• இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கற்பு என்பது என்ன என்பதை சுருக்கமாக காண்போம்.
கற்பு என்பது தூய்மையான காதலோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கருத்தில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, உரித்தானது.
ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் செய்து கொண்டு காதலித்தாலும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட தூய்மையான காதல் என்ற உன்னதமான உணர்வு, இருவரது இதயங்களுக்குள் ஊடுறுவி மனத்தால் இணைந்து பின் உடலாலும் இணைகிறார்கள்.
ஒரு பெண்ணின் முழுமையான உடலை… அவளது மரணம் வரை காமத்தின் ஈர்ப்பால் பார்க்கவும், தொடவும், தொடரவும் அந்த பெண்ணின் கணவனுக்கு மட்டுமே பரிபூரண உரிமை உண்டு. அந்த பெண், தன் கணவனை தவிர பிற ஆண்களுக்கு தனது முழு உடலை … பார்ப்பதற்கோ, தொடவோ, தொடரவோ அனுமதிக்கக் கூடாது. பிற ஆண்களை, காமத்தின் கண்கொண்டு மனத்தாலும் அந்த பெண் நினைத்துக்கூட பார்க்கக் கூடாது. இது பெண்ணுக்குரிய கற்பு.
அதேபோல் ஒரு ஆணின் முழுமையான உடலை… அவனது மரணம் வரை காமத்தின் ஈர்ப்பால் பார்க்கவும், தொடவும், தொடரவும் அந்த ஆணின் மனைவிக்கு மட்டுமே பரிபூரண உரிமை உண்டு. அந்த ஆண், தன் மனைவியைத் தவிர பிற பெண்களுக்கு தனது முழு உடலை… பார்ப்பதற்கோ, தொடவோ, தொடரவோ அனுமதிக்கக் கூடாது. பிற பெண்களை, காமத்தின் கண் கொண்டு மனத்தாலும் அந்த ஆண், நினைத்துக்கூட பார்க்கக் கூடாது. இது ஆணுக்குரிய கற்பு.

வெவ்வேறு மதங்களில் ஆண்-பெண் ஆகிய இருமனங்ளும் சங்கமமாக திருமணம் முடித்து வைக்கின்றனர். அவ்வாறு அந்த திருமண நாளன்று இணையும் அந்த கணவனும் மனைவியும் மனத்தாலும், உடலாலும் இணையும் இத்தகைய நல்லுறவிற்கு நமது முன்னோர்கள், தாம்பத்தியம் என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த தாலி, மோதிரம், மணிமாலை இவையாவும், இவனுக்கு இவள், இவளுக்கு இவன் என்ற சமூக அங்கீகாரத்திற்காக அணிவிக்கப்படும் ஒரு மங்களகரமான அடையாளச் சின்னங்கள்தான். இவையாவும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்கூட. ஆனால் கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உண்மையான காதலின் அடுத்த பரிணாமமே கற்புநெறி என்பது மட்டுமே உண்மையானது, உன்னதமானது.
ஆக, கற்பு குறித்தும், அது ஆண்-பெண் இருவருக்கும் உரியது என்பதும் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் துணையை நேசித்து, காதலோடு கற்பு நெறி தவறாமல் வாழ்ந்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல முன் உதாரணமாக நாம் வாழ்வோம்.
=> விதை2விருட்சம் சத்திமூர்த்தி – 98841 93081
#கற்பு, #கற்புநெறி, #குஷ்பு, #கற்புக்கரசி, #விதை2விருட்சம், #Chastity, #Phytophthora, #Kushboo, #Pruner, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham