Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரியமும் திராவிடமும் வீரியமாக மோதிக் கொள்ளும். காரசாரமாக அறிக்கைகள் பறக்கும், இவர் ஆத்திகமே உயர்வு என்பார். அவர் நாத்திகமே சிறந்தது என்பார். ஒருவருக்கொருவர் ஒருமையில் வசைபாடிக் கொள்வர், தொலைக்காட்சி விவாதங்களில் அனலைத் தெறிக்க விடுவர், பத்திரிகைகளில் சூட்டை பரப்புவர், இவர் இல்லை யென்பார், அவர் உண்டு என்பார். இவர் கேலி செய்தால் அவர் அதனை தட்டிக் கேட்பார்., இவர் தட்டிக் கேட்பதை அவர் கேலிசெய்வார்.

ஆனாலும் நாத்திகர் எடுக்கும் திரைப்படங்களில் ஆத்திகர்கள் நடிப்பர், அதேபோல் ஆத்திகர் நடிக்கும் திரைப்படங்களில் நாத்திகர்கள் நடிப்பர். இவரது இல்ல‍த்து நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு அழைப்பு உண்டு. அவரது வீட்டு விசேஷங்களுக்கு இவருக்கு அழைப்பு உண்டு. இவரது வியாபாரத்தில் அவரும் ஒரு பங்குதாரர், அவரது வியாபாரத்தில் இவரும் ஒரு பங்குதாரர்.

இவர்களிருவரும் பகலில் பரம விரோதிகள், ஆனால் இரவில் நெருங்கிய தோழர்கள். இவர்களின் மோதலுக்கிடையில் நீ பலிகடா ஆகிறாய்! ஏ இளைய சமுதாயமே

உனக்கு ஆத்திகமும் வேண்டாம் நாத்திகமும் வேண்டாம். உன் வழியில் நீ செல். உன் மதத்தைப் போற்றுவதுபோல், பிற மதங்களையும் போற்று. உனக்கு இறை நம்பிக்கை இல்லை யென்பதை நீ எப்ப‍டி மதிக்கிறாயோ அதேபோல் பிறருக்கு இருக்கும் இறை நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொள்.

உன் மதத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை, தலைவர்களை, தியாகிகளை, புராணங்களைப் போற்றுவதுபோல் நீ பிறர் மதத்தைச் சேர்ந்த‌ சுதந்திர போராட்ட வீரர்களை, தலைவர்களை, தியாகிகளை, புராணங்களைப் போற்றப் பழகு. போற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை தூற்றாமலாவது இருக்க பழகு

உள்ள‍த்து எழுச்சியும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், மக்க‍ளின் முன்னேற்ற‍த்திற்காக யார் போராடினாலும் அவரை, நீ சாதீய ரீதியாகவோ அல்ல‍து மதரீதியாகவோ பாகுபாடு பார்ப்ப‍தை அல்லது அநாகரீகமாக விமர்சிப்பதை அல்ல‍து வீண்விவாதம் செய்வதை நிறுத்தி விட்டு,

இன்னொருவர் வலியை தன் வலியாக‌ எண்ணி வருந்துபவர்களை… துயர்படும் சமூகத்தை… எழுச்சிப் பாதைக்கு கொண்டு வந்தவ‌ர்களை, எல்லாம் நீ உன் பெற்றோருக்கு இணையாகப் போற்றி, வாழ்நாள் முழுவதும் அவர்கள் காட்டிய பாதையில் பயணித்து, உன் தலைமையில் சிகரத்தை நோக்கி இந்த சமுதாயத்தை பீடு நடைபோட்டுக் கொண்டு செல்.

இறை நம்பிக்கை உனக்கு இருந்தால், உன் மதமும் சாதியும், உன் வீட்டு பூஜை அறையோடு வைத்துக் கொள். உனக்கு இறை நம்பிக்கை இல்லை யென்றால், அந்த இறை மறுப்பையும் உன்னோடு ஒத்த‍ கருத்துடையவரோடு மட்டும் பகிர்ந்து கொள்ளவும்.

மேலும் உனக்கு இறை நம்பிக்கை இருக்கிறது என்பதால், அடுத்தவருக்கு இறை நிம்பிக்கை இல்லாததை கொச்சைப் படுத்துவது, உனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அடுத்தவர் இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போன்றவை செய்யாமல் இருந்தால்தான் இந்த சமுதாயம் சரித்திரம் படைக்கும் என்பதை நாம் ஆணித்தரமாக நம்புவோம்.

ஆரிய-திராவிட மோதலில் உன்னை நீயே பலி கொடுப்பதை விட உன்னையே நம்பியிருக்கும் உறவுகளை, உன் நலத்தையே விரும்பும் உன் குடும்பத்தாரை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்து திருந்திவிடு என் இளைய சமுதாயமே!

போலி தலைவர்கள்… ஆரியம், திராவிடம் பேசி உன்னை உன் இனத்தை விட்டு பிரித்து ஆள்கிறார்களே அதை நீ எப்போது உணர்வாய்?

போலிகளை கண்டு ஏமாறாதே என்பது பொருட்களுக்கு மட்டுமல்ல. மனிதர்களுக்கும் பொருந்தும்.

=>விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி – 98841 93081

#திராவிடம், #ஆரியம், #ஆரிய_திராவிட, #ஆன்மீகம், #நாத்திகம், #ஆத்திகம், #பகுத்தறிவு, #சாதி, #சனாதன_தர்மம், #சாதி, #ஜாதி, #வர்ணம், #பிராமணன், #ஷத்திரியர், #வைஸியர், #சூத்திரன், #விதை2விருட்சம், #Dravidian, #Aryam, #Aryan_Dravidian, #Spiritual, #Atheistic, #Rational, #Caste, #Sanatana_Dharma, #Caste, #Brahman, #Kshatriyar, #Vaisyar, #Sutra, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitoviruthcam

Leave a Reply