Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

ம‌னிதனாக பிறந்த எவரானாலும் அவரது வாழ்க்கையில் சோதனை என்பது உண்டு. ஏழை பணக்காரன் ஆத்திகன் நாத்திகன் பகவத் உபன்யாசகர் அத்யாபகர் சன்யாசி ஆசாரியர்கள் ஏன் அந்த பகவானே மனிதனாக பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு. அதை வெல்வது எப்படி என்பதே நமக்கான நோக்கம் அதற்க்கு தேவை நம்பிக்கையான பகவத் பக்தி.

இராவண வதம் முடிந்து வந்து அநோத்தி ராஜாவாக பட்டா பிஷேகம் ஏற்றுகொண்ட ராமனின் ராஜ்ஜியத்தில் மக்கள் எல்லோரும் ஆனந்தமயமாக ராமனை போற்றியும் ராம நாமாவை உச்சரித்தும் பேரானந்தமாக வாழ்ந்து வந்தனர் அப்படியான ராம ராஜ்யத்தில் ஒரு நாள் துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் அயோத்தி எழுந்தருளி அரண்மனைக்கு ஶ்ரீ ராமனை காண வந்தார். துர்வாச மாமுனிவர் அயோத்தி வந்துள்ளதை அறிந்த மக்கள் மற்றும் ஶ்ரீராமனின் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயங்கலந்த மனதோடு அவருக்கு முகமன் கூறி வரவேற்றனர். காரணம் துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர் மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்துவிடுவர். பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துர்வாசர மாமுனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவசக்தி பலம் பெருகும் அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார். சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற தசரதராமன், அவர் பாதங்களில் பூதூவி வணங்கி அரியனையில் இருந்து எழுந்து வந்து முனிவரை ஒரு ரத்னமயமான ஆசனத்தில் அமர வைத்து பாதபூஜை செய்து மகரிஷியே தங்களை எங்களது அரசபையில் இந்த அவையோர் கண்டதால் நாங்கள் பெருமை அடைந்தோம். அயோத்தியும் பெருமை பெற்றது. மகரிஷியே தாங்கள் எம்மை நாடிவந்த காரணம் என்னவோ தாங்கள் வேண்டுவது யாதாகினும் அடியேன் உங்கள் திருவுள்ளபடியே செய்ய காத்திருக்கிறேன் என்றான். ஶ்ரீராமரை மகிழ்வுடன் ஆசிர்வதித்த துர்வாசர், ஶ்ரீராமா நான் உன்னிடம் கேட்கப் போவது இன்றய விருந்து உபசரனையும் அதற்குமுன் நான் செய்யபோகும் என் சிவ பூஜைக்கு ஏற்ற மலர்களையும் நீ ஏற்பாடு செய்தால் போதுமானது என்றார். தசரதராமர் மனம் மகிழ்ந்து மகரிஷியே தங்கள் ஆராதனம் செய்ய வேண்டும் அளவுக்கு அடியேன் புஷ்பங்களை ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். துர்வாசர் ஶ்ரீராமரை நோக்கிய வாறே தசரதராமா சொன்ன சொல் தவறாதவனே ஒரு நிபந்தனை. நீ ஏற்பாடு செய்யும் பூஜைக்கான மலரில் என் சிவ பூஜைக்கு இந்த பூலோகத்தில் எவருமே இது வரை பகவானை அர்ச்சிக்க பயன்படுத்தாத புஷ்பம் ஒன்றையும் ஏற்பாடு செய்து தர வேண்டும். அதுமட்டுமல்ல சிவபூஜை முடிந்த கையோடு எனக்கும் என்னோடு வந்துள்ள என் சீடர்கள் அனைவருக்கும் நல்ல அறுசுவை உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும். அதே நேரம் அந்த விருந்தில் பரிமாரபடும் உணவுகள் யாவுமே நீர் மற்றும் நெருப்பு இல்லாமல் சமைத்த உணவாக இருக்க வேண்டும். இவை இரண்டையும் விரைவில் ஏற்பாடு செய்க நாங்கள் யாவரும் நீராடி விட்டு வருகிறோம் என்று கூறி நீராட கிளம்ப துர்வாசர் கூறியதை கேட்ட அயோத்தி மக்களும் ஶ்ரீராமனின் அவையினரும் அதிர்ச்சியாகி விட்டனர்.

மக்களில் பலர் அது எப்படி முடியும் நீரும் நெருப்பும் இல்லாமல் ஒரு சமையல் அதேபோல் உலகில் இதுவரை எவருமே அர்ச்சிக்காத மலர், கடவுளே எங்கள் ராமருக்கு ஏன் இந்த சோதனை என்று கலங்கினர். ஒருசார மக்கள் நம் ராமர் நிச்சயம் இதை செய்து முடிப்பார் என்று நம்பினர். இன்னொருசார மக்கள் தங்கள் ராமநாமம் உட்பட அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கினர். எங்கள் கௌசல்யா புத்ரன் ஏகபத்னி விரதன் ஶ்ரீராமருக்கு துர்வாசரால் எந்த சாபமும் வரக்கூடாது என்று வேறொருசார மக்கள் பிரார்த்திக்க, மேலும் சிலரோ, ஒரு வேளை ஶ்ரீராமனால் துர்வாசர் கூறிய இரண்டையும் செய்ய முடியாமல் போய், துர்வாச முனிவர் ஶ்ரீராமரை இதற்காக சபிக்க நேர்ந்தால் தாங்கள் ஶ்ரீராமனுக்காக அந்த சாபத்தை ஏற்க தயாராய் காத்திருந்தனர். சீதாராமரோ எந்த வித சலனமும் இல்லாமல் புன்னகையோடு அதனால் என்ன மாமுனியே நீங்கள் சென்று தீர்தமாடி மற்ற அனுஷ்டானங் களையும் முடித்து வாருங்கள் உங்கள் எண்ணம் போல் நடத்திவைக்க சித்தமாய் இருப்பேன் என கூற துர்வாசர் கிளம்பிய பின் ஶ்ரீராமன் அரண்மனைக்கு அருகில் இருந்த நதிக் கரையோரம் வந்து தன் கோதண்டத்தை எடுத்து நாண் ஏற்றி அதில் இரண்டு ஓலைகளை அஸ்திரத்தில் கட்டி மந்திரம் ஜெபித்து ஆகாசத்தை நோக்கி செலுத்தினார். அவர் எய்த மந்திர அஸ்திரம் நேராக மேலோகம் சென்று இந்திரலோகத்தில் இருந்த இந்திரன் முன்பு நின்றது. அஸ்திரத்தை கண்ட இந்திரபுரி மன்னன் இந்திரன் அந்த அஸ்திரத்தின் வீரியத்தை கண்டு அதனை வணங்கி பணிவாக கையிலெடுக்க, அதில் உள்ள இரண்டு ஓலைகளை எடுத்து அதன் முதல் ஓலையை படிக்க லானான். அதில், “தேவேந்திரா நான் அயோத்தி மக்களின் அன்பை பெற்ற அயோத்தி மன்னன் ஶ்ரீராமன் என ஆரம்பித்து துர்வாச மகரிஷி கூறிய இரண்டுவித வேண்டுதலுக்கும் நிறைவேற்ற எண்ணி உன்னிடம் இரண்டு உதவிகள் பெற என் அஸ்திரத்தை ஏவியுள்ளேன். முதல் உதவி தேவலோகத்தில் மட்டுமே உள்ள பாரிஜாத மலர்கள் சிலவற்றை இந்த அஸ்திரத்தோடு இணைத்து திரும்ப அனுப்பவும், இரண்டாவதாக எதை கேட்டாலும் தட்டாமல் கொடுத்தருளும் கற்பகவிருட்ச மரத்தையும் அதே அஸ்திரத்தோடு சேர்த்து திரும்ப அனுப்புவாயாக என்று இந்திரனான உன்னை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றிருந்தது.

அந்த ஓலையில் எழுதியிருந்த வாசகத்தை படிக்க கேட்ட அவனின் அவையோர்கள் தேவேந்திரா ஒருபோதும் தேவலோக த்துக்கு மட்டும் என கிடைத்த பொக்கிஷங்கள் அற்ப்ப பூலோகத்துக்கு எக்காரணம் கொண்டும் எடுத்து செல்ல அனுமதியளிக்க கூடாது என்று கூற அவையில் இருந்த மற்ற தேவலோக மாந்தர்களும் அதை ஆமோதித்தனர். அப்போது அவையில் அமர்ந்திருந்த நாரதமஹரிஷி மட்டும், “ஹே தேவேந்திரா அஸ்திரத்தில் உள்ள இரண்டாவது ஓலையில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்துவிட்டு பின் ஒரு முடிவுக்கு வா” என்று யோசனை கூற, இந்திரன் அதை ஏற்று அந்த இரண்டாவது ஓலையை பிரித்து படித்தான். அதில், “தேவேந்திரா என் அன்பிற்கு இணங்கி நீ என் அஸ்திரத்தோடு பாரிஜாத மலர்களையும் கற்பக விருட்சக மரத்தையும் அனுப்பவில்லை என்றால் எனது இந்த அஸ்திரமானது உன்னை மட்டுமல்ல தேவர்களை எல்லாம் வென்ற இலங்கை வேந்தன் ராவணனை வதம் செய்த அஸ்திரம், மேற்சொன்ன இரண்டையும் இதனுடன் இணைத்து அனுப்பவில்லை என்றால் இந்திரலோகத்தில் உள்ள நீ முதற்கொண்டு யாரெல்லாம் அந்த இரண்டையும் எடுத்து வர தடையாக உள்ளனரோ அவர்களை எல்லாம் வதம் செய்து நான் கேட்ட இரண்டையும் பூலோகம் கொண்டுவர தேவையான வல்லமை இந்த அஸ்திரத்துக்கு உண்டு. நீயாக அனுப்பினால் அது உங்களது பாக்யம் இரண்டில் எது சிறந்தது என்று யோசித்து செயல்படு” என்று எழுதியிருந்தது. நாரதர், “ஹேதேவேந்திரா அயோத்தி மன்னன் தசரதராமனின் பெருமையே! ஒருசொல் ஒரு வில் ஒரு இல் என்பதே” அதனால் ராமருக்கு அவர் கேட்ட இரண்டு பொக்கிஷத்தையும் அவர் கேட்டவண்ணமே அஸ்திரத்தோடு அனுப்பிவிடு” என்று கூற, தேவேந்திரனும் மறுப்பு ஏதும் கூறாமல் அவ்வாறே செய்தான்.

அதே சமயம் நீராடிவிட்டு அரசசபை வந்த துர்வாச மாமுனிவர் சிவபூஜைக்கு மலர் கேட்க ஶ்ரீராமர் அவருக்கு பாரிஜாத மலரும் மற்ற மலரும் பூஜைக்காக கொடுக்க, மகிழ்வுடன் வாழ்த்தி ஆராதனையை முடித்த முனிவர், ஹேராம நீர் நெருப்பு இல்லாமல் செய்த உணவு தயாரா என்றுகேட்க, ஶ்ரீராமர் ஆக்ஞை படியே கற்பக விருட்ச மரம் அவைக்கு கொண்டு வரப் பட்டு துர்வாசர் தனக்கும் சீடர்களுக்குமாக போஜனத்துக்கு தேவையான உணவாக அவர்கள் கேட்டபடியே நெருப்பு நீர் இல்லாமல் பெறப்பட்டு அவர்களுக்கு பரிமாறப்பட்டது. ஶ்ரீ ராமனின் விருந்தோம்பலில் தன் வயிறார உணவருந்திய துர்வாசர் ஶ்ரீராமனை அரச சபையின் தனியான ஒரு அறைக்கு அழைத்து சென்று, ஶ்ரீராமரை வணங்கி பரந்தாமா என்னை மன்னித்துவிடு, பொதுவாக தெய்வம் தான் மனிதர்களை சோதிக்கலாம். மனிதர்கள் தெய்வத்தை சோதிக்க தகுதியுண் டோ என்று கண்கலங்க, ஶ்ரீராமர் மகரிஷி பூலோகம் என்று வந்து விட்டாலே சோதனை என்பதும் வந்துவிடும். அதில் மனிதன் பகவத் அவதாரம் என்றெல்லாம் பாகுபாடு இங்கே கிடையாது, பூலோகத்தில் சோதனையை கண்டு துவளாமல் மிகுந்த நம்பிக்கையுடன் மனிதன் தனக்கு வந்த சோதனையை எதிர் கொண்டு சாதனையாக்கி வெற்றிபெற முயற்சிக்க வேண்டும் அவர்களுக்கு தெய்வம் எப்போதும் துனையிருக்கும் தாங்கள் என்னிடம் கேட்ட இரண்டையும் கேட்டதை பார்த்த அயோத்தி மக்கள் யாவரும் உங்களால் எனக்கு சாபம் வருமோ என பயந்து அஞ்சினர். ஆனால் தற்போது உங்களால் தேவலோகத்தில் மட்டுமே இருந்த பாரிஜாத மலர்கள் இந்த அயோத்திக்கும் இன்று வரவழைக்க பட்டன இதனால் அயோத்தி முழுவதும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டது. மகரிஷி தேவரீர் என்னை ஆசீர்வதியுங்கள் என்று ஶ்ரீராமர் அவர் பாதம் பணிய, துர்வாசர் ராமரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

அன்பர்களே உங்களுக்கு வரும் எந்தவிதமான சோதனை களையும் அந்த தசரத மைந்தன் ஶ்ரீராமனின் ராம நாமம் கூறிக் கொண்டே எதிர்கொள்ளுங்கள் அந்த சோதனைகளை சாதனையாக மாற்றி காட்டுங்கள். நிச்சயம் உங்களுக்கு வந்த சோதனைகளை வென்று ஜெயம் உண்டாகும். அதுவே உங்களுக்கான ஶ்ரீராம ஜெயமாகும்.

#இராமாயணம், #இராவணன், #இந்திரன், #ராமர், #ஸ்ரீராமர், #பாரிஜாதம், #மலர், #துர்வாசர், #முனிவர், #அயோத்தி, #சாபம், #விதை2விருட்சம், #Ramayana, #Ravana, #Indran, #Rama, #Sri_Rama, #Parijatham, #Flower, #Durvasa, #Sage, #Ayodhya, #Curse, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply